1 | யோசபாத்து தம் மூதாதையருடன் துயில்கொண்டு, தாவீதின் நகரில் அவர்களோடு அடக்கம் செய்யப்பட்டார். அவருடைய மகன் யோராம் அவனுக்குப்பின் ஆட்சி செய்தான். |
2 | யோராமின் சகோதரர்களான அசரியா, எகியேல், செக்கரியா, அசரியா, மிக்காவேல், செபத்தியா என்பவர்கள் இஸ்ரயேலின் அரசராயிருந்த யோசபாத்தின் புதல்வர்கள். |
3 | அவர்களுடைய தந்தை பொன், வெள்ளி அன்பளிப்புகளையும், விலையேறப்பெற்ற பொருள்களையும் யூதாவின் அரண்சூழ் நகர்களையும் அவர்களுக்கு அளித்தார். யோராம் தலைமகனானதால், அவருக்கு அரசையே அளித்தார். |
4 | யோராம் தன் தந்தையின் அரசை நிலைநாட்டத் தன்னை உறுதிப்படுத்திக்கொண்டபின், தன் சகோதரர் எல்லாரையும் இஸ்ரயேலின் தலைவர்களில் சிலரையும் தனது வாளுக்கு இரையாக்கினான். |
5 | யோராம் அரசனானபோது அவனுக்கு வயது முப்பத்திரண்டு. அவன் எருசலேமில் எட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். |
6 | அவன் இஸ்ரயேல் அரசர்களின் வழியிலேயே நடந்து, ஆகாபின் வீட்டாரைப்போலவே செய்து வந்தான். ஏனெனில், ஆகாபின் மகளே அவனுக்கு மனைவியாயிருந்தாள். எனவே, அவன் ஆண்டவர் பார்வையில் தீயன செய்துவந்தான். |
7 | ஆனால், ஆண்டவர் தாவீதின் வீட்டாரை அழித்துவிட விரும்பவில்லை: ஏனெனில், அவர் தாவீதோடு ஓர் உடன்படிக்கை செய்து, அவருக்கும் அவர் மைந்தர்களுக்கும் எந்நாளும் ஒரு குல விளக்கைத் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். |
8 | அவனது ஆட்சியில் ஏதோம் யூதாவின் அதிகாரத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்து தன்னை ஆட்சி செய்ய ஓர் அரசனை ஏற்படுத்திக்கொண்டது. |
9 | யோராம் தன் படைத் தலைவர்களையும் தேர்ப்படைகள் அனைத்தையும் இரவோடு இரவாய் அழைத்துச் சென்று, தன்னை முற்றுகையிட்டிருந்த ஏதோமியரையும் தேர்ப்படைத் தலைவர்களையும் முறியடித்தான். |
10 | ஆனால் யூதாவின் அதிகாரத்திற்கு அடிபணியாது ஏதோமியர் இன்றுவரை கிளர்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள். யோராம் தன் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரைப் புறக்கணித்ததால், அந்நாளில் லிப்னாவும் அவனது ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தது. |
11 | மேலும், யூதாவின் மலைகளில் தொழுகைமேடுகளை அமைத்து எருசலேம்வாழ் மக்கள் விபசாரம் செய்யவும், யூதா நெறிதவறவும் காரணமாயிருந்தான். |
12 | அப்பொழுது இறைவாக்கினர் எலியாவிடமிருந்து யோராமுக்கு வந்த மடல்:‘உன் தந்தை தாவீதின் கடவுளான ஆண்டவர் கூறுவது இதுவே:நீ உன் தந்தை யோசபாத்தின் வழிமுறைகளையும் யூதா அரசன் ஆசாவின் நெறிமுறைகளையும் பின்பற்றவில்லை. |
13 | மாறாக, இஸ்ரயேல் அரசர்களின் வழிமுறைகளைப் பின்பற்றி ஆகாபு வீட்டாரைப் போல் யூதா, எருசலேம் வாழ்மக்களை விபசாரத்தில் ஈடுபடச் செய்தான். உன்னைவிட நல்லவர்களான உன் தந்தை வீட்டாரான உன் சகோதரர்களையும் கொன்று போட்டாய்! |
14 | எனவே ஆண்டவர் உன் குடி மக்களையும், உன் புதல்வரையும் மனைவியரையும் உன் உடைமைகள் அனைத்தையும் பெரும் கொள்ளை நோயால் வாதிப்பார். |
15 | நீயோ மிகக் கொடிய குடல் நோயினால் பீடிக்கப்பட்டு உன் குடல்கள் நாளுக்குநாள் அழுகி விழுமட்டும் வதைக்கப்படுவாய். ‘ |
16 | அதன்படி, பெலிஸ்தியர், எத்தியோப்பியருக்கு அருகேயுள்ள அரேபியர் ஆகியோரின் பகையுணர்ச்சியை யோராமுக்கு எதிராக ஆண்டவர் தூண்டிவிட்டார். |
17 | அவர்கள் யூதாவில் நுழைந்து, அதைப் பாழ்படுத்தி, அரண்மனையில் அகப்பட்ட பொருள்கள் அனைத்தையும் சூறையாடினர்: அவனுடைய கடைசி மகனான யோவகாசைத் தவிர மற்றப் பிள்ளைகள், மனைவியர் எல்லாரையும் கடத்திச் சென்றனர். |
18 | இதுதவிர, தீராத குடல் நோயினால் ஆண்டவர் அவனை வாட்டி வதைத்தார். |
19 | நாள்கள் நகர்ந்து, இரண்டு ஆண்டுகள் உருண்டோடின. நோயின் கடுமையால் யோராமின் குடல்கள் வெளிவந்தன. அதனால் அவன் கொடிய வேதனையுற்று மடிந்தான். அவனுடைய மூதாதையருக்கு நெருப்பு வளர்த்தது போல் செய்யாமல் அவனுடைய மக்கள் அவனை அடக்கம் செய்தனர். |
20 | அவன் அரசனான போது அவனுக்கு வயது முப்பத்திரண்டு. எருசலேமில் எட்டு ஆண்டுகள் அரசாண்ட அவன், வருந்துவார் எவருமின்றி, மறைந்து போனான். அவனை அரசர்கள் கல்லறையில் அடக்கம் செய்யாமல் தாவீதின் நகரில் அடக்கம் செய்தனர். |