1 | இஸ்ரயேலர் எல்லாரும் ரெகபெயாமை அரசனாக்க செக்கேமில் கூடினர்: அதனால் ரெகபெயாமும் அங்கே சென்றான். |
2 | அரசர் சாலமோனுக்கு அஞ்சி எகிப்துக்கு ஓடிச்சென்றிருந்த நெபாற்றின் மகன் எரொபவாம் இதனைக் கேட்டு எகிப்திலிருந்து திரும்பி வந்தான். |
3 | அவர்கள் ஆளனுப்பி அவனை அழைத்து வந்தனர். எரொபவாம் இஸ்ரயேலர் அனைவரோடும் ரெகபெயாமிடம் வந்து, |
4 | ‘உம் தந்தை பளுவான நுகத்தை எங்கள் மேல் சுமத்தினார்: இப்பொழுது நீர் உம் தந்தை சுமத்தின கடினமான வேலையையும் பளுவான நுகத்தையும் எளிதாக்கும்: நாங்கள் உமக்குப் பணிந்திருப்போம் ‘ என்றான். |
5 | அதற்கு ரெகபெயாம்,‘இன்னும் மூன்று நாள் கழித்து என்னிடம் திரும்பி வாருங்கள் ‘ என்று பதிலளிக்க, மக்கள் கலைந்து சென்றனர். |
6 | பின்பு தன் தந்தை சாலமோன் உயிரோடிருக்கையில் அவரிடம் பணிபுரிந்த பெரியோர்களை நோக்கி ரெகபெயாம்,‘இம்மக்களுக்கு நான் பதிலளிப்பது குறித்து, என்ன அறிவுரை தருகிறீர்கள்? ‘ என்று கேட்டான். |
7 | அவர்கள் அவரிடம்,‘நீர் இம்மக்களுக்கு அன்பு காட்டி, அவர்கள் மனம் குளிருமாறு இன்சொல் பேசினால், அவர்கள் உமக்கு எந்நாளும் பணியாளராய் இருப்பர் ‘ என்றனர். |
8 | ஆனால் பெரியோரின் அறிவுரையைப் புறக்கணித்துவிட்டு, அவன் தன்னோடு வளர்ந்து தனக்குப் பணிசெய்த இளைஞர்களுடன் கலந்துரையாடினான். |
9 | அவன் அவர்களிடம்,‘'உம் தந்தை எங்கள்மேல் சுமத்தின நுகத்தை எளிதாக்கும்' என்று கேட்கும் இம்மக்களுக்கு நான் பதிலளிப்பது குறித்து என்ன அறிவுரை தருகிறீர்கள்? ‘என்று கேட்டான். |
10 | அவனுடன் வளர்ந்த இளைஞர்கள் அவனிடம்,‘'உம் தந்தை எங்கள்மேல் பளுவான நுகத்தைச் சுமத்தினார். நீர் அதனை எளிதாக்கும்' என்று உம்மிடம் கேட்ட மக்களுக்கு இந்தப் பதில் கொடும்: என் சுண்டு விரல் என் தந்தையின் இடுப்பைவிடப் பெரியது: |
11 | என் தந்தை பளுவான நுகத்தை உங்கள்மேல் சுமத்தினார்: நானோ அதை இன்னும் பளுவாக்குவேன்: என் தந்தை உங்களைச் சாட்டைகளால் அடித்தார்: நானோ உங்களை முட்சாட்டைகளால் அடிப்பேன்' என்று பதிலளிக்கவும் ‘ என்று கூறினர். |
12 | 'மூன்றாம் நாள் மீண்டும் என்னிடம் வாருங்கள்' என்று அரசன் கட்டளையிட்டபடி மூன்றாம் நாள் எரொபவாமும் எல்லா மக்களும் ரெகபெயாமிடம் வந்தனர். |
13 | அரசன் ரெகபெயாம் பெரியோரின் அறிவுரையைப் புறக்கணித்துவிட்டு வன்சொல்லால் அவர்களுக்குப் பதிலளித்தான். |
14 | இளைஞரின் அறிவுரைக்கு ஏற்ப அவன் அவர்களிடம்,‘என் தந்தை பளுவான நுகத்தை உங்கள்மேல் சுமத்தினார்’: நானோ அதை இன்னும் பளுவாக்குவேன், என் தந்தை உங்களைச் சாட்டைகளால் அடித்தார்: நானோ உங்களை முட்சாட்டைகளால் அடிப்பேன் ‘ என்று கூறினான். |
15 | இவ்வாறு அரசன் மக்களுக்குச் செவிகொடுக்கவேயில்லை: ஏனெனில் சீலோவியரான அகியா மூலம் நெபாற்றின் மகன் எரொபவாமிடம் ஆண்டவர் கூறிய வார்த்தைகள் நிறைவேற, இவை யாவும் கடவுளால் நிகழ்ந்தன. |
16 | இஸ்ரயேல் மக்கள் அனைவரும் அரசன் தங்களது வேண்டுகோளுக்கு இணங்க மறுத்துவிட்டதைக் கண்டு,‘எங்களுக்குச் தாவீதிடம் என்ன பங்கு? எங்கள் உரிமைச் சொத்து ஈசாயின் மகனிடம் இல்லை. இஸ்ரயேலரே! உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிச் செல்லுங்கள்! தாவீதே! உன் வீட்டை நீயே பார்த்துக்கொள்! ‘ என்று கூறிக் கொண்டே தம்’ கூடாரங்களுக்குத் திரும்பினர். |
17 | ஆனால் யூதா நகர்களில் குடியிருந்த இஸ்ரயேல் மக்கள்மீது ரெகபெயாமே ஆட்சி செலுத்தினான். |
18 | பின்பு அரசன் ரெகபெயாம், கட்டாய வேலைத் திட்டத்தை முன்பு செயல்படுத்தியவனான அதோராமை இஸ்ரயேல் மக்களிடம் அனுப்பி வைத்தான். அவர்களோ அவனைக் கல்லால் எறிந்து கொன்றனர்: அதைக் கேட்ட அரசன் ரெகபெயாம் விரைந்து தேரில் ஏறி எருசலேமுக்குத் தப்பியோடி போனான். |
19 | தாவீதின் குடும்பத்திற்கு எதிராக அன்று கிளர்ந்தெழுந்த இஸ்ரயேலர் இன்றுவரை அவ்வாறே இருக்கின்றனர். |