1 | தீர் மன்னன் ஈராம் தாவீதிடம் தூதர்களையும் அவருக்கு ஓர் அரண்டனை கட்ட கேதுரு மரங்களையும் மற்றும் கொத்தர், தச்சரையும் அனுப்பிவைத்தார். |
2 | இதனால், ஆண்டவர் இஸ்ரயேலின் மேல் தம்மை அரசராக உறுதிப்படுத்தினார் என்றும் அவருடைய மக்களாகிய இஸ்ரயேலின் பொருட்டுத் தமது அரசை மிகவும் சிறந்தோங்கச் செய்தார் என்றும் தாவீது அறிந்து கொண்டார். |
3 | எருசலேமிலும் தாவீது பல பெண்களை மணம் செய்து கொண்டார். அவருக்கு இன்னும் புதல்வர், புதல்வியர் பலர் பிறந்தனர். |
4 | அவருக்கு எருசலேமில் பிறந்த பிள்ளைகளின் பெயர்கள்: சம்முவா, சோபாபு, நாத்தான், சாலமோன், |
5 | இப்கார், எலிசுவா, எல்பலேற்று, |
6 | நோகாசு, நெபேகு, யாப்பியா, |
7 | எலிசாமா, பெகலியாதா, எலிப்பலேற்று. |
8 | தாவீது இஸ்ரயேல் முழுவதற்கும் அரசராகத் திருப்பொழிவு செய்யப்பட்டதைப் பெலிஸ்தியர் கேள்விப்பட்டபோது, அவர்கள் அனைவரும் தாவீதைத் தேடிப்பிடிக்கும்படி வந்தனர். தாவீது அதை அறிந்து அவர்களை எதிர்க்கச் சென்றார். |
9 | பெலிஸ்தியர் வந்து இரபாயிம் பள்ளத்தாக்கில் கொள்ளையிட்டனர். |
10 | தாவீது கடவுளிடம்,;நான் பெலிஸ்தியரை எதிர்த்துச் செல்லலாமா? அவர்களை என்கையில் ஒப்புவிப்பீரா? ; என்று கேட்டார். ஆண்டவர் அவருக்குப் பதிலுரையாக;போ, அவர்களை உன் கையில் ஒப்புவிப்பேன் ; என்றார். |
11 | தாவீதும் அவர் ஆள்களும் பாகால் பெராசிமுக்கு வந்து, அவர்களை அங்கே முறியடித்தார்.;வெள்ளம் அடித்துக் கொண்டு போவதுபோலக் கடவுள் என் எதிரிகளை என் கைவன்மையால் அழித்துவிட்டார் ; என்றார் தாவீது. அதன் காரணமாக, அவ்விடத்திற்குப் 'பாகால் பெராசிம்' என்று பெயரிட்டனர். |
12 | பெலிஸ்தியர் தங்கள் தெய்வச் சிலைகளை அங்கு விட்டுச் சென்றிருந்தனர்: தாவீது கட்டளையிட, அவற்றைத் தீக்கிரையாக்கினர். |
13 | பெலிஸ்தியர் மீண்டும் அந்தப் பள்ளத்தாக்கில் கொள்ளையிட்டனர். |
14 | தாவீது திரும்பவும் கடவுளின் ஆலோசனையைக் கேட்டார். கடவுள்,;நீ அவர்களை எதிர்த்து நேராகச் செல்லாமல் அவர்களைச் சுற்றிவளைத்து பிசின் மரத்தோப்புக்கு வா. |
15 | அம்மரங்களின் உச்சியல் படைசெல்வதன் இரைச்சல் கேட்கும் போது, உடனே போருக்குப் புறப்படு: ஏனெனில் பெலிஸ்தியரின் படையை முறியடிக்கக் கடவுள் உனக்கு முன் செல்கிறார் ; என்றார். |
16 | கடவுள் கட்டளையிட்டபடியே தாவீது செய்தார். கிபயோன் தொடங்கிக் கெசேர் வரை பெலிஸ்தியரின் படையை முறியடித்தனர். |
17 | தாவீதின் புகழ் எல்லா நாடுகளிலும் பரவியது: அனைத்து மக்களினங்களும் அவருக்கு அஞ்சி நடுங்கும்படி ஆண்டவர் செய்தார். |