வேதாகமத்தை வாசி

1நாளாகமம் 17

                   
புத்தகங்களைக் காட்டு
1தாவீது தம் அரண்மனையில் வாழ்ந்து வரும் நாளில் இறைவாக்கினர் நாத்தானை நோக்கி,;இதோ நான் கேதுரு மரத்தாலான அரண்மனையில் வாழ்கிறேன். ஆனால் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையோ திரைக்கூடாரத்தில் இருக்கிறதே ; என்றார்.
2அதற்கு நாத்தான் தாவீதை நோக்கி,;நீர் விரும்புவதை எல்லாம் செய்யும். ஏனெனில் கடவுள் உம்மோடு இருக்கிறார் ; என்றார்.
3அன்றிரவு கடவுளின் வாக்கு நாத்தானுக்கு அருளப்பட்டது:
4;என் ஊழியனாகிய தாவீதிடம் சென்று சொல்: 'ஆண்டவர் கூறுவது இதுவே: நான் தங்கியிருப்பதற்கான கோவிலை நீ கட்ட வேண்டாம்.
5இஸ்ரயேலரை விடுவித்த நாளிலிருந்து இன்றுவரை நான் எந்தக் கோவிலிலும் தங்கியதில்லை: நான் என்றுமே திருக்கூடாரத்தில் இருந்து, ஒரு கூடாரத்தைவிட்டு மற்றொரு கூடாரத்துக்கு மாறி வந்துள்ளேன்.
6இஸ்ரயேல் மக்கள் அனைவரோடும் நான் பயணம் செய்த நாள்களிலும், அவர்களை வழிநடத்த நான் ஏற்படுத்திய எந்த ஒரு விடுதலைத் தலைவரிடமும், எனக்குக் கேதுரு மரத்தால் ஏன் ஒரு கோவிலைக் கட்டவில்லை எனக் கேட்டேனா?'
7எனவே நீ என் ஊழியனாகிய தாவீதிடம் சொல்ல வேண்டியதாவது: 'படைகளின் ஆண்டவராகிய நான் சொல்வது இதுவே: வயல்வெளிகளில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த உன்னை ஆடுகளை மேய்ப்பதினின்று என் மக்கள் இஸ்ரயேலை ஆள்பவனாக மாற்றினேன்.
8நீ சென்றவிடமெல்லாம் உன்னோடிருந்து, உன் முன்னிலையில் உன் எதிரிகளை அழித்தேன். உலகின் பெருந்தலைவர்களுக்கு இணையான புகழை உனக்கு அளிப்பேன்.
9என் மக்களாகிய இஸ்ரயேலருக்கு ஓர் இடத்தைத் தயாரிப்பேன்: அங்கே அவர்களை வேர் கொள்ளச் செய்வேன். எனவே அவர்கள் நிலையாய்க் குடிவாழ்வர், ஒருகாலும் அலைந்து திரியார், முன்புபோல் கொடியோர் கையில் சிறுமையுறமாட்டார்:
10என் மக்களாகிய இஸ்ரயேலர்மேல் நீதித்தலைவர்களை நான் ஏற்படுத்திய நாள்களில் இருந்தது போல் சிறுமையுறார். நான் உன் எதிரிகளைப் பணியச் செய்வேன். மேலும் ஆண்டவர் உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் என்று அறிவிக்கிறேன்.
11உன் வாழ்நாள் முடிந்து உன் மூதாதையரோடு நீ சேர்ந்து கொள்ளும்பொழுது, உன் வழித்தோன்றல்களுள்-உன் புதல்வர்களுள்-ஒருவனை எழுப்பி அவனது அரசை நிலை நாட்டுவேன்.
12அவன் எனக்குக் கோவில் கட்டுவான்: அவன் அரியணையை என்றென்றும் நிலைபெறச் செய்வேன்.
13நான் அவனுக்குத் தந்தையாய் இருப்பேன்: அவன் எனக்கு மகனாய் இருப்பான். உனக்கு முன்னிருந்தவனிடமிருந்து என் பேரன்பை நான் விலக்கிக் கொண்டதுபோல அவனைவிட்டு விலக்கிக்கொள்ள மாட்டேன்.
14மாறாக அவனை என் கோவிலின் மேலும், அரசின் மேலும் தலைவனாக என்றென்றும் நியமிப்பேன். அவன் அரியணை என்றென்றும் நிலைக்கும். ;
15இவ்வாக்குகள் அனைத்தையும், இக்காட்சி முழுவதையும் அப்படியே நாத்தான் தாவீதிடம் அறிவித்தார்.
16அப்போது, தாவீது அரசர் ஆண்டவர்முன்பாகச் சென்று அமர்ந்து கூறியது:;கடவுளாகிய ஆண்டவரே, என்னை இவ்வளவு உயர்த்தியமைக்கு எனக்கும் என் வீட்டாருக்கும் என்ன அருகதை?
17ஆயினும், கடவுளே! அதுவும் உமக்குச் சிறியதாய்த் தோன்றிற்று: உம் அடியானுடைய வீட்டுக்கு வரவிருக்கும் பெரும் சிறப்பைப் பற்றி வெளிப்படுத்தினீரே! கடவுளாகிய ஆண்டவரே! நீர் ஏற்கெனவே என்னைப் பெரியவனாக மதித்து வருகிறீர்.
18நீர், உம் அடியானாகிய என்னைப் பெருமைப்படுத்தியதற்கு ஈடாக தாவீதாகிய நான் சொல்ல வேறு என்ன உளது? ஏனெனில் நீர் உம் அடியானை அறிந்திருக்கிறீர்.
19ஆண்டவரே, நீர் உம் அடியான்பொருட்டு, உம் திருவுளப்படி இத்தகைய மாபெரும் செயல்கள் அனைத்தையும் செய்ததுமன்றி, இத்தகைய மாண்புமிக்க செயல்களையெல்லாம் அறிவித்தீர்.
20ஆண்டவரே, உமக்கு ஒப்பானவர் எவருமில்லை: எங்கள் காதுகளினாலே நாங்கள் கேள்விப்பட்டதின்படி உம்மைத் தவிர வேறு கடவுளும் இல்லை.
21உம் மக்களாகிய இஸ்ரயேலுக்கு இணையான வேறொரு மக்களினம் உலகில் உண்டோ? அவர்கள் உம்முடைய மக்களாயிருக்கவும், நீர் பெரும் புகழ் பெறவும், அவர்களை மீட்கும்படி கடவுளாகிய நீர் தாமே முன்சென்றீர். எகிப்திலிருந்து நீர் மீட்டுக்கொண்ட உமது மக்கள் முன்பாக வேற்றின மக்களைத் துரத்தும்படி அச்சத்திற்குரிய செயல்களைச் செய்தீர்.
22உம் மக்களாகிய இஸ்ரயேலர் என்றும் உம் மக்களாக இருக்கச் செய்தீர்: ஆண்டவராகிய நீர்தாமே அவர்களுக்குக் கடவுளானீர்.
23இப்போதும் ஆண்டவரே, நீர் உமது அடியானையும், அவன் வீட்டையும் குறித்துக் கூறிய வார்த்தைகளை என்றென்றும் உறுதிப்படுத்தும். நீர் கூறியபடியே செய்தருளும்.
24'இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவரே, இஸ்ரயேலின் கடவுள்' என்று உமது பெயர் மாட்சியுற்று எந்நாளும் நிலைபெற்றிருப்பதாக! உம் அடியானாகிய தாவீதின் வீடும் உமக்கு முன்பாக உறுதி பெற்றிருப்பதாக!
25என் கடவுளே, நீர் உம் அடியானின் வீட்டை நிலைப்படுத்துவேன் என என் காது கேட்க வெளிப்படுத்தினீரே! எனவே உம் அடியானாகிய நான் உமக்கு முன்பாக வேண்டுதல் செய்ய மனத்துணிவு பெற்றேன்.
26ஆண்டவரே! நீரே கடவுள்: இந்த நன்மையை உம் அடியானுக்குக் கொடுப்பதாய்க் கூறியுள்ளீர்.
27இப்போதும் உம் அடியானின் வீடு என்றும் உமக்கு முன்பாக நிலைநிற்கும்படி அதற்கு ஆசி வழங்கினீர்: ஏனெனில், ஆண்டவரே! உமது ஆசி பெற்றது என்றென்றும் ஆசி பெற்றதாகவே இருக்கும். ;

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.