1 | அவர்கள் கடவுளின் பேழையைக் கொண்டு வந்து, தாவீது அதற்கென்று அமைத்திருந்த கூடாரத்தின் நடுவே வைத்தனர். பின்பு கடவுளின் முன் எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளையும் செலுத்தினர். |
2 | தாவீது எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளையும் செலுத்திய பின்பு மக்களுக்கு ஆண்டவரின் பெயரால் ஆசி வழங்கினார். |
3 | அவர் இஸ்ரயேலராகிய ஆண் பெண் அனைவருக்கும் ஆளுக்கு ஓர் அப்பமும், ஒரு துண்டு இறைச்சியும், ஒரு திராட்சைப்பழ அடையும் கொடுத்தார். |
4 | பின்பு அவர் ஆண்டவரின் பேழையின் முன் வழிபாடு நடத்தவும், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு நன்றி செலுத்தவும், அவரைப் போற்றவும், லேவியரில் சிலரைத் திருப்பணியாளராக நியமித்தார். |
5 | ஆசாபு தலைவராகவும், செக்கரியா துணைத் தலைவராகவும் எயியேல், செமிரா மோத்து, எகியேல், மத்தித்தியா, எலியாபு, பெனாயா, ஓபேது-ஏதோம், எயியேல் ஆகியோர் தம்புரு, சுரமண்டலம் கருவிகளை வாசிக்கவும், ஆசாபு கைத்தாளம் கொட்டவும், |
6 | பெனாயா, யகசியேல் ஆகிய குருக்கள் இருவரும் கடவுளின் உடன்படிக்கைப் பேழையின் முன் இடைவிடாமல் எக்காளங்களை ஊதவும் நியமிக்கப்பட்டனர். |
7 | இவ்வாறு, தாவீது ஆண்டவருக்கு நன்றிப்பாடல்களைப் பாடும் பொறுப்பை ஆசாபுக்கும் அவர் உறவின்முறையினருக்கும் முதன்முதலாக அளித்தார்: |
8 | ;ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்: அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள். |
9 | அவருக்குப் பாடல் பாடுங்கள்: அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! |
10 | அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்: ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! |
11 | ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்: அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! |
12 | அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்: அவர்தம் அருஞ்செயல்களையும் அவரது வாய் மொழிந்த நீதித்தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். |
13 | அவரின் ஊழியராம் இஸ்ரயேலின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் புதல்வரே! |
14 | அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித்தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. |
15 | அவரது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்ளுங்கள்: ஆயிரம் தலைமுறைக்கென அவர் அளித்த வாக்குறுதியை மறவாதீர்கள்! |
16 | ஆபிரகாமுடன் அவர் செய்து கொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்கு அவர் ஆணையிட்டுக் கூறியதையும் நினைவில் கொள்ளுங்கள்! |
17 | யாக்கோபுக்கு நியமமாகவும் இஸ்ரயேலுக்கு என்றுமுள உடன்படிக்கையாகவும் அதை அவர் உறுதிப்படுத்தினார். |
18 | 'கானான் நாட்டை உனக்கு அளிப்பேன்: அப்பங்கே உனக்கு உரிமைச்சொத்தாய் இருக்கும்' என்றார் அவர். |
19 | அப்போது, அவர்கள் மதிப்பிலும் எண்ணிக்கையிலும் மிகக் குறைந்தவராய் இருந்தார்கள்: அங்கே அன்னியராய் இருந்தார்கள். |
20 | ஒரு நாட்டினின்று மற்றொரு நாட்டிற்கும் ஓர் அரசினின்று மற்றொரு மக்களிடமும் அலைந்துதிரிந்தார்கள். |
21 | யாரும் அவர்களை ஒடுக்குமாறு அவர் விட்டுவிடவில்லை: அவர்களின் பொருட்டு மன்னர்களை அவர் கண்டித்தார்: |
22 | 'நான் அருள்பொழிவு செய்தாரைத் தொடாதீர்: என் இறைவாக்கினர்க்குத் தீங்கிழைக்காதீர்', என்றார் அவர். |
23 | உலகெங்கும் வாழ்வோரே! ஆண்டவருக்குப் புகழ்பாடுங்கள்: அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்! |
24 | பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்: அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். |
25 | ஏனெனில், ஆண்டவர் மாட்சிமிக்கவர்: பெரிதும் போற்றத்தக்கவர்: தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே! |
26 | மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே! ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர்! |
27 | மாட்சியும் புகழ்ச்சியும் அவர் திருமுன் உள்ளன! ஆற்றலும் அக்களிப்பும் அவரது திருத்தலத்தில் உள்ளன! |
28 | மக்களினங்களின் குடும்பங்களே! ஆண்டவருக்குச் சாற்றுங்கள்! மாட்சியையும் ஆற்றலையும்ஆண்டவருக்குச் சாற்றுங்கள்! |
29 | ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள்: உணவுப் படையல் ஏந்தி அவர்திருமுன் வாருங்கள்: தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்! |
30 | உலகெங்கும் வாழ்வோரே! அவர் திருமுன்நடுங்குங்கள்: உலகம் உறுதியுடன் நிலை கொண்டுள்ளது: இனி அது அசைக்கப்படுவதில்லை. |
31 | விண்ணுலகம் மகிழ்வதாக! மண்ணுலகம் களிகூர்வதாக! 'ஆண்டவர் ஆள்கின்றார்' என்று பிற இனத்தார்க்கு அறிவிப்பராக! |
32 | கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்: வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்! |
33 | அப்பொழுது காட்டு மரங்கள் ஆண்டவர் திருமுன் மகிழ்ந்து பாடட்டும்! ஏனெனில், அவர் மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார். |
34 | ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! ஏனெனில், அவர் நல்லவர்: என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு! |
35 | எங்கள் மீட்பராகிய கடவுளே! எங்களை விடுவித்தருளும்! வேற்று நாடுகளினின்று எங்களை விடுவித்து ஒன்று சேர்த்தருளும்! அப்பொழுது, நாங்கள் உமது திருப்பெயருக்கு நன்றி செலுத்துவோம்: உம்மைப் புகழ்வதில் பெருமை கொள்வோம்: |
36 | 'இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் ஊழி ஊழியாகப் புகழப் பெறுவாராக' என்று சொல்லுங்கள். அப்பொழுது, மக்கள் அனைவரும் 'ஆமென்' என்று சொல்லி, ஆண்டவரைப் போற்றினர். |
37 | பின்பு, தாவீது ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையின்முன் தொடர்ந்து எந்நாளும் பணிவிடை செய்வதற்காக, பேழைக்கு முன்பாக இருக்குமாறு ஆசாபையும் அவரின் உறவின் முறையாரையும் பணித்தார். |
38 | ஓபேது ஏதோமும் அவரின் உறவின் முறையாளர்களான அறுபத்து எட்டுப்பேரும் அவர்களுக்கு உதவி வெய்யவேண்டும். எதுத்தூணின் மகனான ஓபேது ஏதோமும், கோசாவும் வாயில் காவலராக நியமிக்கப்பட்டனர். |
39 | குரு சாதோக்கும் அவர் உறவின் முறைக் குருக்களும் கிபயோன் தொழுகைமேட்டில் ஆண்டவரின் திருக்கூடாரத்தின்முன் பணிசெய்ய வேண்டும். |
40 | இஸ்ரயேலுக்கு ஆண்டவர் கட்டளையாகத் தந்த திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி, காலையிலும் மாலையிலும் தவறாமல் எரி பலிபீடத்தின் மேல் அவர்கள் எரிபலிகளைச் செலுத்த வேண்டும். |
41 | இவர்களோடு ஏமானையும் எதுத்தூனையும் பெயர் சொல்லித் தேர்ந்து கொள்ளப்பட்ட சிலரையும் 'ஆண்டவரின் பேரன்பு என்றென்றும் உள்ளது' என்றுரைத்து அவருக்கு நன்றி செலுத்துமாறு கட்டளையிட்டார்: |
42 | இவர்களோடு ஏமான், எதுத்தூன் ஆகியோரை எக்காளங்களையும், கைத்தாளங்களையும், இறைப்பாடலுக்குரிய இசைக் கருவிகளையும் இசைக்க ஏற்படுத்தினார்: எதுத்தூனின் புதல்வரை வாயில் காவலராக நியமித்தார். |
43 | பின்னர் மக்கள் அனைவரும் தம் வீடு திரும்பினர்: தாவீதும் தம் வீட்டாருக்கு ஆசி வழங்க, வீடு திரும்பினார். |