1 | ஆகாபு இறந்தபின் மோவாபியர் இஸ்ரயேலுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். |
2 | அப்பொழுது அகசியா சமாரியாவில் தன் மேல் மாடியிலிருந்து பலகணி வழியாய்க் கீழே விழுந்து காயமுற்றான். எனவே அவன் தூதரிடம், “நீங்கள் எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூபிடம் சென்று, 'இக்காயம் எனக்குக் குணமாகுமா?' என்று கேட்டு வாருங்கள்” என்று சொல்லி அனுப்பினான். |
3 | ஆனால் ஆண்டவரின் தூதர் திஸ்பேயைச் சார்ந்த எலியாவிடம், “நீ புறப்பட்டுச் சமாரிய அரசனின் தூதரைச் சந்தித்து அவர்களிடம், 'இஸ்ரயேலுக்குக் கடவுள் இல்லை என்றா, எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூபிடம் நீங்கள் குறிகேட்கப்போகிறீர்கள்? எனவே ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: |
4 | நீ கிடக்கும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க மாட்டாய்: அங்கேயே செத்துப் போவாய்: இது உறுதி! என்று சொல்” என்றார். அவ்வாறே எலியா புறப்பட்டுப் போனார். |
5 | திரும்பி வந்த தூதரை நோக்கி, அரசன், “ஏன் திரும்பி வந்துவிட்டீர்கள்?” என்று அவர்களைக் கேட்டான். |
6 | அதற்கு அவர்கள் மறுமொழியாக, “வழியில் ஓர் ஆள் எங்களைச் சந்தித்து, 'நீங்கள் உங்களை அனுப்பின அரசனிடம் போய், ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேலுக்குக் கடவுள் இல்லை என்றா, நீ எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூபிடம் குறிகேட்க ஆள் அனுப்புகிறாய்? நீ கிடக்கும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க மாட்டாய்: அங்கேயே செத்துப் போவாய்: இது உறுதி! என்று சொல்லுங்கள்' என்றார்”என்று கூறினர். |
7 | அவன் அவர்களிடம், “உங்களைச் சந்திக்க வந்து உங்கள்டம் இவற்றை அறிவித்த ஆள் எப்படி இருந்தான்?” என்று கேட்டான். |
8 | அவனுக்கு அவர்கள் மறுமொழியாக, “அவர் மயிரடர்ந்த மனிதர்: இடையில் தோற்கச்சை அணிந்திருந்தார்” என்றனர். அப்பொழுது அவன், “அந்த ஆள் திஸ்பேயைச் சாhந்த எலியாதான்!” என்றான். |
9 | உடனே அரசன் ஐம்பதின்மர்தலைவன் ஒருவனை அவனுடைய ஐம்பது வீரரோடு அவரிடம் அனுப்பினான். தலைவனும் சென்று, ஒரு மலையின் உச்சியில் அமர்ந்திருந்த எலியாவைக் கண்டு அவரிடம், “கடவுளின் அடியவரே! கீழே இறங்கி வாரும்: இது அரச கட்டளை!” என்றான். |
10 | எலியா ஐம்பதின்மர் தலைவனுக்கு மறுமொழியாக, “நான் உண்மையாகவே கடவுளின் அடியவனாய் இருந்தால், வானினின்று நெருப்பு இறங்கி வந்து உன்னையும் உன்னோடு இருக்கும் ஐம்பது பேரையும் சுட்டெரிக்கும்!” என்றார். உடனே வானினின்று நெருப்பு இறங்கி வந்து அவனையும் அவனோடிருந்த ஐம்பது பேரையும் சுட்டெரித்தது. |
11 | அகசியா மீண்டும் வேறொரு தலைவனை அவனுடைய வீரரோடு அனுப்பினான். அத்தலைவனும் மேலேறிச் சென்று எலியாவிடம், “கடவுளின் அடியவரே! விரைவாய் கீழே இறங்கி வாரும்: இது அரச கட்டளை!” என்றான். |
12 | எலியா மறுமொழியாக, “நான் உண்மையாகவே கடவுளின் அடியவனாய் இருந்தால், வானினின்று நெருப்பு இறங்கி வந்து உன்னையும் உன்னோடு இருக்கும் ஐம்பது பேரையும் சுட்டெரிக்கட்டும்!” என்றார். உடனே வானினின்று நெருப்பு இறங்கிவந்து, அவனையும் அவனோடிருந்த ஐம்பது பேரையும் சுட்டெரித்தது. |
13 | அகசியா மூன்றாம் முறையாகத் தலைவன் ஒருவனை அவனுடைய ஐம்பது வீரரோடு அனுப்பினான். மூன்றாம் தலைவனும் மேலேறிச் சென்று, எலியாவின் முன் முழந்தாளிட்டு, “கடவுளின் அடியவரே! என் உயிரையும், உம் அடியாராகிய இந்த ஐம்பதின்மர் உயிரையும் காத்தருளும்! |
14 | வானினின்று நெருப்பு இறங்கி வந்து, முன்னைய ஐம்பதின்மர் தலைவர் இருவரையும் அவரவருடைய ஐம்பது வீரர்களையும் சுட்டெரித்து விட்டது. எனவே, இப்பொழுது என் உயிரைக் காத்தருளும்!” என்று மன்றாடினான். |
15 | அப்பொழுது ஆண்டவரின் தூதர் எலியாவிடம், “அவனோடு இறங்கிச் செல். அவனுக்கு அஞ்ச வேண்டாம்” என்றார். எனவே எலியா எழுந்து அரசனைப் பார்க்க அவனோடு இறங்கிச் சென்றார். |
16 | அவர் அரசனை நோக்கி, “ஆண்டவர் கூறுவது இதுவே: இறை உளத்தைத் தெரிந்துகொள்ள இஸ்ரயேலுக்குக் கடவுள் இல்லை என்றா, நீ எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூபிடம் தூதரை அனுப்பினாய்? எனவே நீ கிடக்கும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க மாட்டாய்: அங்கேயே செத்துப்போவாய்: இது உறுதி!” என்றார். |
17 | எனவே எலியா வாயிலாக அறிவிக்கப்பட்ட ஆண்டவரது வாக்கிற்கேற்ப, அகசியா இறந்தான். அவனுக்குப் புதல்வர் இல்லாமையால், அவனுக்குப் பின் யோராம் அரசன் ஆனான். இது யூதா அரசன் யோசபாத்தின் மகன் யோராமின் இரண்டாம் ஆட்சி ஆண்டில் நிகழ்ந்தது. |
18 | அகசியாவின் ஆட்சியைப் பற்றிய பிற செய்திகளும், அவனுடைய பிற செயல்களும், 'இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா? |