வேதாகமத்தை வாசி

2இராஜாக்கள் 4

                   
புத்தகங்களைக் காட்டு
1அப்பொழுது இறைவாக்கினர் குழுவினரைச் சார்ந்த ஒருவரின் மனைவிஎலிசாவிடம் வந்து கதறி அழுது, “உம் அடியவனாகிய என் கணவர் இறந்து விட்டார். அவர் ஆண்டவருக்கு அஞ்சி நடந்தவர் என்பது உமக்குத் தெரியும். அவருடைய கடன்காரன் என் இரு பிள்ளைகளையும் தனக்கு அடிமைகளாக எடுத்துக் கொள்ள வந்திருக்கிறான்” என்றார்.
2எலிசா அவரை நோக்கி, “நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? உன் வீட்டில் என்ன வைத்திருக்கிறாய்? என்று சொல்” என்றார். அதற்கு அவர் உம் அடியவளாகிய என்னிடம் கலயத்தில் சிறிது எண்ணெய் மட்டுமே இருக்கிறது. வேறு ஒன்றும் வீட்டில் இல்லை” என்றார்.
3எலிசா, “நீ சுற்றிலும் சென்று உன் அண்டை வீட்டார் அனைவரிடமிருந்தும் பல வெற்றுப் பாத்திரங்களைக் கேட்டுக் வாங்கிக் கொள்.
4நீ உன் புதல்வருடன் வீட்டினுள் சென்று கதவை மூடிக்கொள். பாத்திரங்களில் அந்த எண்ணெயை ஊற்று. நிறைந்தவற்றை ஒரு பக்கத்தில் எடுத்துவை” என்றார்.
5அவ்வாறே, அவரும் தம் புதல்வருடன் வீட்டினுள் சென்று கதவை மூடிக் கொண்டார். அவர்கள் எடுத்துத் தந்த கிண்ணங்களில் அவர் எண்ணெய் ஊற்றினார்.
6எல்லாப் பாத்திரங்களும் நிறைந்தபின் அவர் தம் மகன் ஒருவனை நோக்கி, “இன்னும் ஒரு பாத்திரம் கொண்டு வா” என்றார். அதற்கு அவன், “வேறு பாத்திரம் இல்லை” என்றான். அத்தோடு எண்ணெய் வருவதும் நின்றுவிட்டது.
7கடவுளின் அடியவரிடம் அவர் வந்து அதை அறிவித்தார். அதற்கு அவர், “நீ போய் எண்ணெயை விற்று உன் கடனைத் தீர்த்துவிடு. எஞ்சியதைக் கொண்டு நீயும் உன் புதல்வரும் பிழைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
8ஒரு நாள் எலிசா சூனேமுக்குச் சென்றார். அங்கேயிருந்த பணக்காரப் பெண் ஒருவர் அவரை உணவருந்தும்படி வற்புறுத்தினார். அதன்பின் அவர் அவ்வழியே சென்ற போதெல்லாம் அங்கே உணவருந்திவிட்டுச் செல்வார்.
9அவர் தம் கணவனை நோக்கி, “நம்மிடம் அடிக்கடி வரும் ஆண்டவரின் அடியவர் புனிதர் என்று நான் கருதுகிறேன்.
10ஆதலால் வீட்டு மேல் தளத்தில் சிறு அறை ஒன்றை அவருக்காகக் கட்டி, அதில் படுக்கை, மேசை, நாற்காலி, விளக்கு முதலியன தயார்படுத்தி வைப்போம். அவர் வரும் பொழுதெல்லாம் அங்கே தங்கிச் செல்லட்டும்” என்றார்.
11ஒரு நாள் எலிசா அங்கு வந்து மாடி அறையில் தங்கி ஓய்வுஎடுத்துக் கொண்டிருந்தார்.
12பின்பு அவர் தம் பணியாளன் கேகசியை நோக்கி, “அந்தச் சூனேம் பெண்ணைக் கூப்பிடு” என்றார்.
13அவனும் அவரை அழைத்துவர, அவர் அவர் முன்னே வந்து நின்றார். அப்பொழுது அவர் கேகசியை நோக்கி, “நீ அவளிடம் 'அம்மா, நீங்கள் எங்களுக்காக இவ்வளவு சிரமம் எடுத்திருக்கிறீர்கள். ஏதாவது உதவி செய்ய வேண்டுமா? அரசரிடமோ படைத்தலைவரிடமோ பரிந்து பேசும்படி ஏதாவது உண்டா?' என்று கேள்” என்றார். அதற்கு அவர், “என்னுடைய இனத்தாரிடையே நான் நலமாய்த்தான் வாழ்ந்து வருகிறேன்” என்று பதிலளித்தார்.
14மீண்டும் எலிசா, “வேறு எந்த விதத்தில் அவருக்கு உதவி செய்யலாம்?” என்று கேட்டார். அதற்குக் கேகசி, “அவருக்குக் குறையேதும் இல்லை. ஆனால், அவருக்குப் பிள்ளையில்லை. அவருடைய கணவருக்கும் வயதாகி விட்டது” என்றான்.
15எலிசா, “அவளை இங்கு வரச் சொல்” என்றார். அவ்வாறே அவன் அவரை அழைக்க, அவரும் கதவருகில் வந்து நின்றார்.
16எலிசா அவரை நோக்கி, “அடுத்த ஆண்டு இதே பருவத்தில் உனக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்” என்றார். அதற்கு அவர், “என் தலைவரே, கடவுளின் அடியவரே! உம் அடியவளை ஏமாற்ற வேண்டாம்” என்றார்.
17எலிசா, அப்பெண்ணுக்கு முன்னறிவித்தவாறே அவர் கருவுற்று அடுத்த ஆண்டு அதே பருவத்தில் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.
18குழந்தையும் வளர்ந்தான். ஒரு நாள் அவன் அறுவடை செய்வோருடன் இருந்த தன் தந்தையிடம் சென்றான்.
19அவன் தன் தந்தையிடம், “ஐயோ! தலை வலிக்கிறது, தலை வலிக்கிறது”என்று சொன்னான். தந்தையும் தம் வேலையாள் ஒருவனிடம், “நீ இவனை இவன் தாயிடம் தூக்கிக் கொண்டு போ” என்றார்.
20அவன் அப்படியே பிள்ளையைத் தூக்கிச் சென்று அதன் தாயிடம் கொண்டுவந்து விட்டான். நண்பகல் வரை அவர் மடியில் கிடந்தபின், அது இறந்து போனது.
21அவரோ கடவுளுடைய அடியவரின் அறைக்குச் சென்று, அவருடைய படுக்கையின் மேல் பிள்ளையைக் கிடத்தினார். பின்னர் கதவைத் பூட்டிவிட்டு வெளியே வந்தார்.
22தம் கணவனை அழைத்து அவரிடம், “வேலைக்காரன் ஒருவனை ஒரு கழுதையுடன் என்னோடு அனுப்பி வைக்கவும். கடவுளின் அடியவரிடம் நான் உடனே போக வேண்டும். விரைவில் திரும்பி வருகிறேன்” என்றார்.
23அதற்கு அவருடைய கணவர், “நீர் அவரிடம் போக வேண்டிய காரணம் என்ன? இன்று அமாவாசையும் இல்லை: ஓய்வு நாளும் இல்லையே!” என்றார். அதற்கு அப்பெண், “நல்லதற்குத் தான்” என்றார்.
24கழுதைக்குச் சேணமிடச் செய்தபின், அவர் தம் வேலையாளை நோக்கி, “கழுதையை வேகமாக ஓட்டிச் செல். நான் சொன்னால் ஒழிய, அதன் வேகத்தைக் குறைக்காதே!” என்றார்.
25அவ்வாறே அவர் புறப்பட்டு, கர்மேல் மலையிலிருந்து அடியவரிடம் வந்து சேர்ந்தார். அவர் தம்மை நோக்கி வருவதைத் தொலையிலிருந்து பார்த்த எலிசா தம் வேலையாள் கேகசியை நோக்கி,
26“இதோ! சூனேம் பெண் வருகிறாள். அவளைச் சந்திக்க உடனே விரைந்து செல். அவளிடம், 'நீ நலமா? உன் கணவர் நலமா? உன் குழந்தை நலமா?' என்று கோள்” என்றார்.
27அப்பெண் மறுமொழியாக, “ஆம், நலமே” என்றார், பிறகு அவர் மலையில் இருந்த கடவுளின் அடியவரிடம் வந்து, அவர் காலடிகளைப் பற்றிக் கொண்டார். அவரை அப்புறப்படுத்த கேகசி அருகில் வந்தபோது, கடவுளின் அடியவர், “அவளை விட்டுவிடு, ஏனெனில் அவளது உள்ளம் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. ஆண்டவர் அதை எனக்கு அறிக்காமல் மறைத்து விட்டார்” என்றார்.
28அப்பொழுது அப்பெண் “ஐயா! உம்மிடம் நான் மகப்பேறு கேட்டதுண்டா? 'என்னை ஏமாற்ற வேண்டாம்' என்று உமக்கு நான் முன்பேசொல்லவில்லையா?” என்றார்.
29அப்பொழுது அவர் கேகசியை நோக்கி, “நீ இடுப்பை வரிந்து கட்டிக் கொண்டு, எனது ஊன்று கோலை உன் கையில் எடுத்துக் கொண்டு போ. வழியில் யாரையாவது கண்டால் வணக்கம் செய்யாதே. உனக்கு யாராவது வணக்கம் செய்தாலும் பதில் வணக்கம் செய்யாதே. என் ஊன்றுகோலைப் பிள்ளையின் முகத்தின் மேல் வை” என்றார்.
30ஆனால், பிள்ளையின் தாய் “வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உம் உயிர்மேலும் ஆணை! உம்மை நான் விடமாட்டேன்” என்றார்.
31எனவே எலிசா எழுந்து அவரைப் பின் தொடர்ந்து சென்றார். கேகசி இவர்களுக்கு முன்பே புறப்பட்டுச் சென்று, ஊன்றுகோலைப் பிள்ளையின் முகத்தின்மேல் வைத்தான். ஆயினும் பிள்ளைக்குப் பேச்சுமில்லை, மூச்சுமில்லை. எனவே அவன் தன் தலைவரை எதிர்கொண்டு வந்து, “பிள்ளை கண் திறக்கவில்லை” என்று அறிவித்தான்.
32எலிசா வீட்டினுள் நுழைந்தபோது, இறந்த பிள்ளை தம் படுக்கையில் கிடப்பதைக் கண்டார்.
33உடனே அவர் உள்ளே சென்று, அவர்கள் இருவரும் வெளியே இருக்க, கதவைத் தாழிட்டுக் கொண்டு ஆண்டவரை நோக்கி மன்றாடினார்.
34பின்பு படுக்கையின் மேல் ஏறி வாயோடு வாயும் கண்களோடு கண்களும், கைகளோடு கைகளும் வைத்து பிள்ளையின்மேல் படுத்தார். உடனே பிள்ளையின் உடம்பில் சூடு ஏறியது.
35பின்பு கீழிறங்கி, அறையிலேயே அங்குமிங்கும் உலாவினார். மறுபடியும் படுக்கையின்மேல் ஏறி அவன் மீது படுத்துக் கொண்டார். அப்பொழுது பிள்ளை ஏழுமுறை தும்மிய பின் கண் திறந்தது.
36எனவே எலிசா கேகசியைக் கூப்பிட்டு, “அந்த சூனேம் பெண்ணை அழைத்து வா” என்றார். அவ்வாறே அவன் அழைக்க, அவர் எலிசாவிடம் வந்தார். அவர் அப்பெண்ணை நோக்கி, “உன் மகனைத் தூக்கிக்கொள்” என்றார்.
37அப்பெண் உள்ளே வந்து அவர் காலடியில் தரை மட்டும் வீழ்ந்து வணங்கியபின், தன் மகனைத் தூக்கிக்கொண்டு போனார்.
38எலிசா கில்காலுக்குத் திரும்பினார். அப்பொழுது நாட்டில் பஞ்சம் நிலவியது. இறைவாக்கினர் குழுவினர் அவர் முன் அமர்ந்திருக்கையில், எலிசா தம் பணியாளன் ஒருவனை நோக்கி, “நீ ஒரு பெரிய பானையை எடுத்து அதில் இறைவாக்கினர் குழுவினர்க்குக் கூழ் காய்ச்சு” என்றார்.
39அப்பொழுது அவர்களுள் ஒருவன் காட்டுக் கீரை பறிப்பதற்காக வயலுக்குச் சென்றான். அங்கே அவன் பேய்க்குமட்டிக் கொடியைக் கண்டு, அதன் காய்களைத் தன் போர்வை நிறையப் பறித்துக் கொண்டு வந்தான். அவை என்னவென்று தெரியாமல், அவற்றை நறுக்கிப் பானையில் போட்டு அவன் வேக வைத்தான்.
40பின்பு அவன் அவர்கள் உண்ணுமாறு அதைப் பறிமாறினான். அவர்கள் அந்தக் கூழை உண்ணத் தொடங்கியதும்,”கடவுளின் அடியவரே! பானையிலே நஞ்சு!” என்று அலறினர். அவர்களால் அதை மேலும் உண்ண முடியவில்லை.
41அப்பொழுது அவர், “கொஞ்சம் மாவு கொண்டு வாருங்கள்” என்றார்.அவர் அதை பானையில் போட்டு, “இவர்கள் உண்ணும்படி இதைப் பறிமாறுங்கள்” என்று சொன்னார். பானையில் இருந்தது அவர்களுக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை.
42பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தம் கோணிப் பையில் முற்றிய தானியக் கதிர்களையும் கடவுளின் அடியவரிடம் கொண்டு வந்தார். எலிசா, “மக்களுக்கு உண்ணக் கொடு” என்றார்.
43அவருடைய பணியாளன், “இந்த நூறு பேருக்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்?” என்றான். அவரோ, “இவற்றை இம்மக்களுக்கு உண்ணக் கொடு. ஏனெனில் 'உண்ட பின்னும் மீதி இருக்கும்' என்று ஆண்டவர் கூறுகிறார்” என்றார்.
44அவ்வாறே அவன் அவர்களுக்குப் பரிமாற, அவர்கள் உண்டனர். ஆண்டவரது வாக்கின்படி மீதியும் இருந்தது.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.