வேதாகமத்தை வாசி

2இராஜாக்கள் 5

                   
புத்தகங்களைக் காட்டு
1சிரியா மன்னனின் படைத்தலைவனான நாமான் தம் தலைவனிடம் சிறப்பும் நன்மதிப்பும் பெற்றிருந்தார். ஏனெனில் அவர் மூலமாய் ஆண்டவர் சிரியாவுக்கு வெற்றி அளித்திருந்தார். அவர் வலிமை மிக்க வீரர்: ஆனால் தொழுநோயாளி.
2சுpரியா நாட்டினர் ஒருமுறை கொள்ளையடிக்கச் சென்ற பொழுது, இஸ்ரயேலைச் சார்ந்த ஒரு சிறுமியைக் கடத்திக் கொண்டு வந்திருந்தனர். அவள் நாமானின் மனைவிக்குப் பணிவிடை புரிந்து வந்தாள்.
3அவள் தன் தலைவியை நோக்கி, “என் தலைவர் சமாரியாவில் இருக்கும் இறைவாக்கினர் முன்னிலையில் சென்றாரெனில், அவர் இவரது தொழுநோயைக் குணமாக்குவார்” என்றாள்.
4எனவே நாமான் தம் தலைவனிடம் சென்று, “இஸ்ரயேல் நாட்டைச் சார்ந்த சிறுமி இன்னின்னவாறு கூறுகின்றாள்” என்று அவனுக்குத் தெரிவித்தார்.
5அப்பொழுது சிரியா மன்னர், “சென்று வாரும். நான் இஸ்ரயேல் அரசனுக்கு மடல் தருகிறேன்” என்றார். எனவே நாமான் ஏறத்தாழ நானூறு கிலோ வெள்ளியையும், ஆறாயிரம் பொற்காசுகளையும், பத்துப் பட்டாடைகளையும் எடுத்துக்கொண்டு பயணமானார்.
6அவர் இஸ்ரயேல் அரசனிடம் அம்மடலைக் கொடுத்தார். அதில், “இத்துடன், என் பணியாளன் நாமானை உம்மிடம் அனுப்புகிறேன். அவனது தொழு நோயை நீர் குணமாக்க வேண்டும்” என்று எழுதப்பட்டிருந்தது.
7இஸ்ரயேல் அரசன் அம்மடலைப் படித்தவுடன் தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, “நானென்ன கடவுளா?உயிரைக் கொடுக்கவும், உயிரை எடுக்கவும் என்னால் இயலுமா? சிரியா மன்னன் ஒருவனை என்னிடம் அனுப்பி அவனுக்குள்ள தொழு நோயைக் குணப்படுத்தச் சொல்கிறானே! என்னோடு போரிட அவன் வாய்ப்புத் தேடுவதைப் பார்த்தீர்களா!” என்று கூறினான்.
8கடவுளின் அடியவரான எலிசா இஸ்ரயேல் அரசன் இவ்வாறு தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்ட செய்தியைக் கேள்வியுற்று அவனிடம் ஆளனுப்பி, “நீர் ஏன் உம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டீர்? அவன் என்னிடம் வரட்டும். இஸ்ரயேலில் ஓர் இறைவாக்கினர் உள்ளார் என அவன் அறியட்டும்” என்று சொன்னார்.
9அவ்வாறே நாமான் தம் குதிரைகளுடனும் தேருடனும் எலிசா விட்டு வாயில்முன் வந்து நின்றார்.
10எலிசா, “நீ போய் யோர்தானில் ஏழுமுறை மூழ்கினால், உன் உடல் நலம்பெறும்” என்று ஆளனுப்பிச் சொல்லச் சொன்னார்.
11எனவே, நாமான் சினமுற்று வெளியேறினார். அப்பொழுது அவர், “அவர் என்னிடம் வந்து, என் அருகில் நின்று, தம் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைக் கூவியழைத்து, தொழுநோய் கண்ட இடத்தின்மேல் தம் கையை அசைத்துக் குணப்படுத்துவார் என்று நான் எண்ணியிருந்தேன்.
12அபானா, பர்பார் என்ற தமஸ்கு நதிகள் இஸ்ரயேலில் உள்ள ஆறுகள் அனைத்தையும்விட மேலானவை அல்லவா? அவற்றில் மூழ்கி நான் நலமடைய முடியாதா?” என்று கூறி ஆத்திரமாய்த் திரும்பிச் செல்லலானார்.
13அப்பொழுது அவருடைய வேலைக்காரர்கள் அவரை அணுகி, அவரிடம்,”எம் தந்தையே! இறைவாக்கினர் இதைவிட அரிதான ஒன்றை உமக்குக் கூறிஇருந்தால், நீர் அதைச் செய்திருப்பீர் அல்லவா? மாறாக, 'மூழ்கி எழும்: நலமடைவீர்' என்று அவர் கூறும்போது அதை நீர் செய்வதற்கென்ன?”என்றனர்.
14எனவே நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார். அவரது உடல் சிறுபிள்ளையின் உடலைப்போல் மாறினது.
15பின்பு அவர் தம் பரிவாரம் அனைத்துடன் கடவுளின் அடியவரிடம் திரும்பி வந்து, “இஸ்ரயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லையென இப்போது உறுதியாக அறிந்து கொண்டேன். இதோ, உம் அடியான்! எனது அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளும்” என்றார்.
16அதற்கு எலிசா, “நான் பணியும் வாழும் ஆண்டவர்மேல் ஆணை! நான் எதையும் ஏற்றுக்கொள்ளேன்” என்றார். நாமான் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
17அப்பொழுது நாமான் அவரை நோக்கி, “சரி, அப்படியே ஆகட்டும். ஆயினும் ஒரு சிறு வேண்டுகோள்: இரு கழுதைப் பொதி அளவு மண்ணை இங்கிருந்து எடுத்துச் செல்ல உம் அடியானுக்கு அனுமதி தாரும். இனிமேல் உம் அடியானாகிய நான் ஆண்டவரைத் தவிர தெய்வங்களுக்கு எரிபலியோ வேறு பலியோ ஒரு போதும் செலுத்தமாட்டேன்.
18ஆயினும,; ஒரு காரியத்திற்காக உம் அடியானாகிய என்னை ஆண்டவர் மன்னிப்பாராக! என் தலைவன் வழிபடுவதற்காக ரிம்மோன் கோவிலுக்குச் சென்று என் கையில் சாய்ந்து கொண்டு அதனை வணங்குகையில் நானும் அங்குத் வலை வணங்க நேரிட்டால், உம் அடியானாகிய என்னை அச்செயலுக்காக ஆண்டவர் மன்னிப்பாராக!” என்றார்.
19அதற்கு எலிசா, “அமைதியுடன் சென்று வாரும்” என்றார். நாமான் அவரிடமிருந்து விடைபெற்றுச் சற்றுத் தூரம் போனபின்,
20கடவுளின் அடியவரான எலிசாவின் பணியாளன் கேகசி, “என் தலைவர் இந்தச் சிரியா நாட்டு நாமானிடமிருந்து அவன் கொண்டு வந்தவற்றில் எதையும் பெறாமல் அவனை விட்டுவிட்டார். வாழும் ஆண்டவர் மேல் ஆணை! அவர் பின் ஓடி அவரிடமிருந்து எதையாவது வாங்கிக் கொள்வேன்” என்று சொல்லிக் கொண்டான்.
21எனவே கேகசி நாமான் பின்னே ஓடிவந்தான். அவன் ஓடிவருவதை நாமான் கண்டு தம் தேரிலிருந்து விரைவாய் இறங்கி அவனை எதிர்கொண்டு போய், “என்ன, எல்லாம் நலமா?” என்று வினவினார்.
22அவன் மறுமொழியாக, “ஆம், எல்லாம் நலமே! என் தலைவர் தங்களிடம் என்னை அனுப்பி, 'இறைவாக்கினர் குழுவினரான இரண்டு இளைஞர் எப்ராயிம் மலைநாட்டிலிருந்து இப்பொழுது தான் வந்துள்ளனர். அவர்களுக்கு நாற்பது கிலோ வெள்ளியும் இரண்டு பட்டாடைகளும் கொடுத்து அனுப்பும்' என்று சொல்லச் சொன்னார்” என்றான்.
23அதற்கு நாமான், “எண்பது கிலோ வெள்ளியை ஏற்றுக் கொள்ள மனம்வையும்” என்று சொல்லி அவனை வற்புறுத்தி, இரு பைகளில் எண்பது கிலோ வெள்ளியைக் கட்டி இரண்டு பட்டாடைகளோடு இரு பணியாளரிடம் கொடுக்க, அவர்கள் அவற்றை அவனுக்கு முன்னே கொண்டு சென்றனர்.
24கேகசி மலையை வந்தடைந்ததும் அவர்களிடமிருந்து அவற்றைப் பெற்றுத் தன் வீட்டில் வைத்துக் கொண்டான். பின்னர் அவர்களை அனுப்பி வைக்க, அவர்களும் திரும்பிச் சென்றனர்.
25அவன் தன் தலைவரிடம் வந்து அவர்முன் நின்றான். எலிசா அவனை நோக்கி, “கேகசி! நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். அவன், “அடியேன் எங்கும் செல்லவில்லை” என்றான்.
26அதற்கு அவர், “அந்த ஆள் தேரினின்று இறங்கி உன்னை எதிர்கொண்டு வந்ததை நான் ஞானத்தால் அறிந்தேன். வெள்ளி, ஆடைகள், ஒலிவத் தோப்புகள், திராட்சைத் தோட்டங்கள், ஆடுமாடுகள், வேலைக்காரர்கள், வேலைக்காரிகள்- இவைகளைப் பெற்றுக் கொள்ள இதுவா சமயம்?
27எனவே, நாமானின் தொழுநோய் உன்னையும் உன் வழிவந்தோரையும் என்றென்றும் பீடிக்கும்!” என்றார். அவ்வாறே அவனுக்குத் தொழுநோய் பிடிக்க, அவன் உடம்பெல்லாம் வெண்பனி போலாயிற்று. அவன் அவரை விட்டுப் பிரிந்து சென்றான்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.