1 | ஆண்டவரின் பெயரை முன்னிட்டு, சாலமோன் அடைந்திருந்த புகழைப் பற்றிச் சேபா நாட்டு அரசி கேள்வியுற்றுக் கடினமான கேள்விகள் மூலம் அவரைச் சோதிக்க வந்தார். |
2 | அவர் பரிவாரங்களோடும், நறுமணப் பொருள், மிகுதியான பொன், விலையுயர்ந்த கற்கள், ஆகியவற்றைச் சுமந்துவந்த ஒட்டகங்களோடும், எருசலேமுக்கு வந்து சேர்ந்தார். அவர் சாலமோனிடம் தம் மனத்திலிருந்த கேள்விகள் அனைத்தையும் வெளிப்படுத்தினார். |
3 | சாலமோன் அவருடைய கேள்விகளுக்கெல்லாம் விடை கூறினார். அவர் கேட்டவற்றுள் பதிலளிக்க இயலாதபடி எதுவும் அரசருக்குப் புதிராகத் தோன்றவில்லை. |
4 | சேபாவின் அரசி, சாலமோனுக்கிருந்த பல்வகை ஞானம், அவர் கட்டியிருந்த அரண்மனை, |
5 | அவர் உண்டு வந்த உணவு வகைகள், அவருடைய அலுவலரின் வரிசைகள், பணியாளர்களின் சுறுசுறுப்பு, அவர்களுடைய சீருடை, பானம் பரிமாறுவோரின் திறமை, ஆண்டவரின் இல்லத்தில் அவர் செலுத்திய எரிபலிகள் ஆகியவற்றைக் கண்டு பேச்சற்றுப் போனார். |
6 | அவர் அரசரை நோக்கிக் கூறியது:“உம்முடைய செயல்களையும் ஞானத்தையும் பற்றி என் நாட்டில் நான் கேள்விப்பட்டது உண்மையே எனத் தெரிகிறது. |
7 | நான் இங்கு வந்து அவற்றை நேரில் காணும் வரை, அச்செய்திகளை நம்பவில்லை. இப்பொழுதோ இங்குள்ளவற்றில் பாதியைக் கூட அவர்கள் எனக்குச் சொல்லவில்லையென அறிகிறேன். உண்மையில் நான் கேள்விப்பட்டதை விட, உம் ஞானமும் செல்வமும் மிகுதியாய் இருக்கின்றன. |
8 | உம்முடைய மனைவியர் நற்பேறு பெற்றோர்! எப்போதும் உமக்குப் பணிபுரிந்து உம்முடைய ஞானம் நிறைந்த மொழிகளைக் கேட்கும் உம்முடைய பணியாளரும் நற்பேறு பெற்றவரே! |
9 | உம்மீது பரிவு கொண்டு உம்மை இஸ்ரயேலின் அரியணையில் அமர்த்திய உம் கடவுளாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! ஆண்டவர் இஸ்ரயேலின் மீது என்றென்றும் அன்பு கொண்டுள்ளதால், அவர்களுக்கு நீதி நியாயம் வழங்க உம்மை அரசராக ஏற்படுத்தியுள்ளார். “ |
10 | அவர் ஏறத்தாழ நாலாயிரத்து எண்ணூறு கிலோ பொன், ஏராளமான நறுமணப் பொருள்கள், விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றை அரசருக்கு அளித்தார். சேபாவின் அரசியிடமிருந்து வந்தது போல, அத்துணை நறுமணப் பொருள்கள் அரசர் சாலமோனுக்கு அதன் பிறகு வந்ததே இல்லை. |
11 | ஓபீரிலிருந்து பொன்னைக் கொணர்ந்த ஈராமின் கப்பல்கள் அங்கிருந்து வாசனை மரங்களையும் விலையுயர்ந்த கற்களையும் கொண்டு வந்தன. |
12 | அவ்வாசனை மரங்களால் அரசர் ஆண்டவரின் இல்லத்திற்கும் அரண்மனைக்கும் ஊன்றுகால்களையும் பாடகருக்கு இசைக் கருவிகளையும் யாழ்களையும் செய்தார். அத்தகைய வாசனை மரங்கள் அதன்பின் அங்கு வந்ததுமில்லை: இன்றுவரை காணப்படவுமில்லை. |
13 | அரசர் சாலமோன் சேபாவின் அரசிக்கு ஏராளமான பரிசுகள் கொடுத்ததுமன்றி, அவர் விரும்பிக் கேட்டவற்றையெல்லாம் கொடுத்தார். அதன்பின் அவர் தம் பணியாளர்களோடு தம் சொந்த நாட்டுக்குத் திரும்பிப்போனார். |
14 | சாலமோனுக்கு ஆண்டுதோறும் வந்து கொண்டிருந்த பொன்னின் நிறை ஏறத்தாழ இருபத்தி ஏழாயிரம் கிலோ. |
15 | அதைத் தவிர, அவரிடம் வியாபாரிகளும், வணிகர்களும் அரபு நாட்டு அரசர்கள் அனைவரும் உள்நாட்டு ஆளுநர்களும் பொன் கொண்டு வருவதுண்டு. |
16 | அரசர் சாலமோன் பொன் தகட்டால் இருநூறு கேடயங்கள் செய்தார். ஒவ்வொரு கேடயத்திற்கும் ஏறத்தாழ ஏழு கிலோ பொன் பயன்படுத்தப்பட்டது. |
17 | மேலும் அவர் முந்நூறு சிறு கேடயங்களையும் பொன் தகட்டால் செய்தார். ஒவ்வொரு சிறு கேடயத்திற்கும் ஏறத்தாழ இரண்டு கிலோ பொன் பயன்படுத்தப்பட்டது. அவற்றை அரசர்“லெபனோனின் வனம் “ எனப்பட்ட மாளிகையில் வைத்தார். |
18 | அரசர் தந்தத்தினால் பெரியதோர் அரியணை செய்து அதைப் பசும்பொன்னால் வேய்ந்தார். |
19 | அவ்வரியணைக்கு ஆறு படிகள் இருந்தன. அரியணையின் பின்புற உச்சி காளையின் தலை உருவம் கொண்டிருந்தது. இருக்கையின் இரு புறமும் கைப்பிடிகள் இருந்தன. அவற்றின் அருகே இரு சிங்கங்கள் வடிவங்கள்நின்றன. |
20 | ஆறு படிகளின் இருபக்கத்திலும் ஒவ்வொரு சிங்கமாக பன்னிரு சிங்க வடிவங்கள் இருந்தன. வேறெந்த அரசனுக்கும் இத்தகைய அரியணை இருந்ததில்லை. |
21 | சாலமோன் அரசரின் பான பாத்திரங்கள் எல்லாம் தங்கத்தாலும்“லெபனோனின் வனம் “ எனப்பட்ட மாளிகையின் கலன்கள் அனைத்தும் பசும் பொன்னாலும் ஆனவை. ஒன்றும் வெள்ளியானால் செய்யப்படவில்லை: சாலமோனின் காலத்தில் வெள்ளியை யாரும் உயர்வாக மதிக்கவில்லை. |
22 | அரசரின் வணிகக் கப்பல்கள், ஈராமின் கப்பல்களோடு சென்று கடல் வாணிபம் செய்தன. வணிகக் கப்பல்கள் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை, பொன், வெள்ளியையும் தந்தம், குரங்கு, மயில் ஆகியவற்றையும் கொண்டு வந்தன. |
23 | உலகின் மன்னர் அனைவருள்ளும் சாலமோன் அரசரே செல்வத்திலும் ஞானத்திலும் மிகச் சிறந்து விளங்கினார். |
24 | சாலமோனுக்கு ஆண்டவர் அருளியிருந்த ஞானத்தை நேரில் கேட்டறிய எல்லா நாட்டு மக்களும் அவரை நாடி வந்தனர். |
25 | அவர்கள் ஒவ்வொருவரும் ஆண்டுதோறும் வெள்ளியாலும், பொன்னாலுமான பொருள்கள், பட்டாடைகள், படைக் கலன்கள், நறுமணப் பொருள்கள், குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றை அன்பளிப்பாக அரசருக்குக் கொண்டு வந்தனர். |
26 | சாலமோன் ஆயிரத்து நானூறு தேர்களும் பன்னீராயிரம் குதிரை வீரர்களும் கொண்ட படையொன்றைத் திரட்டினார். அதனைத் தேர்ப்டை நகர்களிலும் எருசலேமில் அரசனுடனும் நிறத்தி வைத்தார். |
27 | அவருடைய ஆட்சியின் போது, எருசலேமில் வெள்ளிக் கற்களைப் போலவும், கேதுரு மரங்கள் செப்பேலா சமவெளியின் காட்டத்தி போலவும் மிகுதியாய் இருந்தன. |
28 | சாலமோன் எகிப்திலிருந்தும் கேவேயிலிருந்தும் குதிரைகளை இறக்குமதி செய்தார். அரசரின் வணிகர் அவற்றைக் கேவேயிலிருந்து விலைக்கு வாங்கி வந்தனர். |
29 | எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தேரின் விலை அறுநூறு வெள்ளிக்காசு. ஒரு குதிரைகள் விலை நூற்றைம்பது வெள்ளிக்காசு. இவ்வாறே, அவர்கள் இத்தியரின் அனைத்து மன்னர்களுக்கும் சிரியாவின் மன்னர்களுக்கும் அவற்றை ஏற்றுமதி செய்தார்கள். |