வேதாகமத்தை வாசி

1இராஜாக்கள் 11

                   
புத்தகங்களைக் காட்டு
1அரசர் சாலமோன் அயல்நாட்டுப் பெண்கள் பலர்மேல் மோகம் கொண்டார். பார்வோனின் மகளை மணந்ததுமின்றி மோவாபியர், அம்மோனியர், ஏதோமியர், சீதோனியா, இத்தியர் ஆகிய பல நாட்டுப் பெண்களையும் மணந்தார்.
2அவ்வேற்றினத்தாரைக் குறித்து ஆண்டவர் இஸ்ரயேல் மக்களிடம்,“நீங்கள் அயல்நாடுகளிலிருந்து பெண் கொள்ளவும் வேண்டாம்: கொடுக்கவும் வேண்டாம்: ஏனெனில் அவர்கள் தம் தெய்வங்களை வணங்கும்படி உங்கள் உள்ளங்களை மயக்கி விடுவார்கள் “ என்று கூறியிருந்தார். அப்படிக் கூறியிருந்தும் அந்நாட்டுப் பெண்கள்மேல் சாலமோன் மையல் கொண்டிருந்தார்.
3சாலமோனுக்கு எழுநூறு அரசகுலப் பெண்கள் மனைவியராகவும் முந்நூறு பெண்கள் வைப்பாட்டிகளாகவும் இருந்தார்கள். அப்பெண்கள் அவரது இதயத்தைத் தவறான வழியில் திருப்பி விட்டார்கள்.
4சாலமோன் முதுமை அடைந்தபோது, அவருடைய மனைவியர் அவர் இதயத்தை வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றும்படி மாற்றிவிட்டனர். அதனால் அவர் உள்ளம் தம் தந்தை தாவீதின் உள்ளத்தைப் போல் கடவுளாகிய ஆண்டவருக்கு முற்றிலும் பணிந்திருக்கிவில்லை.
5சாலமோன் சீதோனியரின் தேவதையான அஸ்தரேத்தையுதம் அம்மோனியரின் அருவருப்பான மில்க்கோவையும் வழிபடலானார்.
6இவ்வாறு சாலமோன், ஆண்டவர் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தார். தம் தந்தை தாவீது ஆண்டவரை முழுமையாகப் பின்பற்றியது போன்று அவர் செய்யவில்லை.
7சாலமோன் எருசலேமுக்கு எதிரில் இருந்த மலையில் மோவாபியரின் அருவருப்பான கெமோசுக்கும் அம்மோனியரின் அருவருப்பான மோலேக்குக்கும் தொழுகைமேடுகளைக் கட்டினார்.
8இப்படியே தங்கள் தெய்வங்களுக்குத் தூபம் காட்டிப் பலியிடுவதற்காக, வேற்றினத்தாரான தம் மனைவியர் எல்லோருக்கும் சாலமோன் இவ்வாறு செய்து கொடுத்தார்.
9ஆண்டவர் சாலமோன்மீது சினமுற்றார். ஏனெனில் தமக்கு இருமுறை காட்சியளித்திருந்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரிடமிருந்து அவர் இதயம் விலகிச் சென்றது.
10வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாம் என்று ஆண்டவர் அவருக்குக் கட்டளையிட்டிருந்தும், அக்கட்டளையை அவர் கடைப்பிடிக்கவில்லை.
11ஆகையால் ஆண்டவர் சாலமோனை நோக்கி,“நான் உன்னோடு செய்த உடன்படிக்கையையும், நான் உனக்கு விதித்த நியமங்களையும் மீறி, நீ இவ்வாறு நடந்துகொண்டதால் உன் அரசை உன்னிடமிருந்து பறித்து அதை உன் பணியாளனுக்குக் கொடுக்கப்போவது உறுதி.
12ஆயினும் உன் தந்தை தாவீதின் பொருட்டு, உன் காலத்தில் நான் இதைச் செய்யமாட்டேன். உன் மகன் கையினின்று அதைப் பறித்து விடுவேன்.
13ஆயினும் அரசு முழுவதையும் பறித்துவிடாமல், என் அடியான் தாவீதின் பொருட்டும் நான் தேர்ந்து கொண்ட எருசலேமின் பொருட்டும் ஒரு குலத்தை உன் மகனிடம் விட்டுவைப்பேன் “ என்றார்.
14பிறகு ஆண்டவர் ஏதோமியனாகிய அதாது என்பவனைச் சாலமோனுக்கு எதிராக எழச் செய்தார். இவன் ஏதோம் மன்னர் குலத்தைச் சார்ந்தவன்.
15முன்பு தாவீது ஏதோமில் இருந்தபோது படைத்தலைவன் யோவாபு ஏதோமின் எல்லா ஆண்களையும் வெட்டி வீழ்த்திப் புதைக்கச் சென்றார்.
16யோவாபும் இஸ்ரயேலர் அனைவரும் அங்கு ஆறு மாதம் தங்கியிருந்து ஏதோமிலிருந்த எல்லா ஆண்களையும் வெட்டி வீழ்த்தினர்.
17ஆனால், அதாது அவன் தந்தையின் ஏதோமியப் பணியாளருள் சிலரோடு சேர்ந்து எகிப்துக்குத் தப்பி ஓடிப் போனான். அப்போது அவன் சிறு பையனாய் இருந்தான்.
18அவர்கள் மிதியானிலிருந்து புறப்பட்டுப் பாரானுக்குச் சென்று பாரானில் சில ஆள்களைச் சேர்த்துக் கொண்டு எகிப்திய அரசன் பார்வோனிடம் சென்றார்கள். பார்வோன் அதாதுக்கு வீடொன்று கொடுத்து, உணவுக்கும் வழி செய்து நிலமும் அளித்தான்.
19பார்வோனுக்கு அதாது மிகவும் உகந்தவனாய் இருந்தபடியால், தன் மனைவியும் அரசியுமான தகபெனேசின் தங்கையை அவனுக்கு மணமுடித்து வைத்தான்.
20தகபெனேசின் தங்கையாகிய இவள் அவனுக்கு கெனுபத்து என்ற ஒரு மகளைப் பெற்றாள். தகபெனேசு அவனைப் பார்வோன் வீட்டில் வளர்த்தாள். அப்படியே கெனுபத்து பார்வோனின் வீட்டில் அவனுடைய புதல்வருடன் வளர்ந்து வந்தான்.
21தாவீது துயில்கொண்டு தம் மூதாதையரோடு சேர்ந்து கொண்டார் என்றும், படைத்தலைவர் யோவாபு இறந்துவிட்டார் என்றும், எகிப்தில் அதாது கேள்விப்பட்டு பார்வோனை நோக்கி,“நான் என் சொந்த நாட்டுக்குப் போக விரும்புகிறேன்: என்னை அனுப்பி வைக்கவேண்டும் “ என்றான்.
22அதற்குப் பார்வோன்,“நீ உன் சொந்த நாட்டுக்குப் போக விரும்புவது ஏன்? இங்கு உனக்கு என்ன குறை? “ என்று கேட்டான். அதற்கு அவன்,“ஒரு குறையுமில்லை: ஆயினும் எனக்குப் போக விடைதாரும் “ என்றான்.
23மேலும் கடவுள் எலயாதாவின் மகன் இரேசோனையும் சாலமோனுக்கு எதிராக எழச் செய்தார். அவன் தன் தலைவனாகிய அதாதேசர் என்னும் சோபா நாட்டு மன்னனிடமிருந்து தப்பி ஓடியவன்.
24முன்பு தாவீது படையெடுத்து அந்நாட்டினரை வெட்டி வீழ்த்தியபோது இரேசோன் தன்னோடு சிலரைச் சேர்த்துக் கொண்டு தன் தலைமையில் ஒரு கிளர்ச்சிக் கூட்டத்தை அமைத்துக் கொண்டான். அவன் அவர்களோடு தமஸ்குவுக்குச் சென்று, அதில் குடியேறி அங்கே அரசன் ஆனான்.
25சாலமோன் வாழ்நாள் முழுவதும் அவன் இஸ்ரயேலின் எதிரிராய் இருந்தான். அவன் சிரியாவை ஆண்டு கொண்டு, இஸ்ரயேலைப் பகைத்து அதாதைப் போல் தீங்கிழைத்து வந்தான்.
26எப்ராயிமின் செரேதாவைச் சார்ந்த நெபாற்று என்பவனின் மகனும் சாலமோனின் பணியாளருள் ஒருவனுமான எரொபவாம் அரசருக்கு எதிராய்க் கிளர்ச்சி செய்தான். அவனுடைய தாய் செருவா என்பவள் ஒரு கைம்பெண்.
27அவன் அரசருக்கு எதிராயக் கிளர்ச்சி செய்ததன் விவரம் பின்வருமாறு: சாலமோன் கீழைத் தாங்குதளத்தைக் கட்டித் தம் தந்தை தாவீதின் நகரில் இடிந்து போன இடங்களைப் பழுது பார்த்தார்.
28எரொபவாம் ஆற்றல் மிக்கவனாய் இருந்தான். அவன் செயல்திறமை மிக்க ஓர் இளைஞன் என்று கண்டு, சாலமோன் யோசேப்பு வீட்டிலிருந்து கட்டாய வேலைசெய்ய வந்த அனைவரையும் கண்காணிக்கும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்திருந்தார்.
29ஒரு நாள் எரொபவாம் எருசலேமிலிருந்து வெளியே போனபோது சீலோமைச் சார்ந்த அகியா என்ற இறைவாக்கினர், அவனை வழியில் கண்டார். அவர் புதுச் சால்வை ஒன்று அணிந்திருந்தார். இருவரும் வயல் வெளியே தனித்திருந்தனர்.
30அப்பொழுது அகியா நாம் போர்த்தியிருந்த புதுச் சால்வையை எடுத்து அதைப் பன்னிரு துண்டுகளாய்க் கிழித்தார்.
31பிறகு அவர் எரொபவாமை நோக்கிப் பின் வருமாறு கூறினார்:“இவற்றில் பத்துத் துண்டுகளை உனக்கென எடுத்தக் கொள். ஏனெனில் இஸ்ரயேலரின் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு இவ்வாறு கூறுகிறார்:“இதோ, நான் சாலமோன் கையினின்று அரசைப் பறித்து, பத்துக் குலங்களை உனக்கு அளிக்கப் போகிறேன்.
32ஆயினும் உன் ஊழியன் தாவீதை முன்னிட்டும், இஸ்ரயேலரின் நகர்கள் அனைத்திலிருந்தும் நான் தேர்ந்து கொண்ட எருசலேம் நகரை முன்னிட்டு ஒரு குலம் மட்டும் அவன் கையில் இருக்கும்.
33ஏனெனில், சாலமோன் என்னைவிட்டு விலகி, சீதோனியரின் தேவதையான அஸ்தரேத்து, மோவாபியரின் தெய்வமான கெமோசு, அம்மோனியரின் தெய்வமான மில்க்கோம் ஆகியவற்றை வழிபட்டு வருகிறான். அவனுடைய தந்தை தாவீது நடந்தது போல் அவன் என் வழிகளைப் பின்பற்றவில்லை. என் முன்னிலையில் நேர்மையாக நடக்கிவில்லை. என் நியமங்களையும், நீதிச் சட்டங்களையும் கடைப்பிடிக்கவுமில்லை.
34ஆயினும், அரசு முழுவதையும் அவன் கையிலிருந்து நான் எடுத்து விடப்போவதில்லை. நான் தேர்ந்து கொண்டவனும் என் விதிமுறைகளையும் நியமங்களையும் கடைப்பிடித்தவனுமான என் ஊழியன் தாவீதின் பொருட்டு அவன் வாழ்நாள் முழுவதும் அரசனாக இருக்கும்படி செய்வேன்.
35எனினும் அரசை அவன் மகன் கையிலிருந்து எடுத்து, அதிலிருந்து பத்துக் குலங்களை உனக்குக் கொடுப்பேன்.
36எனது பெயர் நிலைத்திருக்குமாறு நான் தேர்ந்து கொண்ட நகரகிய எருசலேமில் என் திருமுன் அடியான் தாவீதின் குலவிளக்கு எந்நாளும் என் முன்னிலையில் ஒளிரும் வண்ணம் நான் அவன் மகனுக்கு ஒரு குலத்தை அளிப்பேன்.
37உன் விருப்பப்படியே நீ ஆட்சிசெலுத்தும்படி உன்னை நான் இஸ்ரயேலின் அரசனாய் அமர்த்துவேன்.
38நான் கட்டளையிடும் அனைத்தையும் நீ கேட்டு, என் வழிகளில் நடந்து என் ஊழியன் தாவீது செய்தது போல் என் நியமங்களையும், விதிமுறைகளையும் கைக்கொண்டு, எனக்கு ஏற்புடையதைச் செய்தால், நான் உன்னோடு இருந்து தாவீதின் குடும்பத்தைப்போல் உன் குடும்பத்தையும் நிலை நாட்டி இஸ்ரயேலை உன்னிடம் ஒப்படைப்பேன்.
39தாவீதின் வழிமரபினர் செய்தவற்றுக்காக, அவர்களைத் தாழ்வுறச் செய்வேன்: ஆயினும் எந்நாளுமன்று. “
40இதன் பொருட்டுச் சாலமோன் எரொபவாமைக் கொல்ல வழி தேடினார். ஆனால், அவன் எகிப்திற்குத் தப்பி ஓடி அங்கு எகிப்திய மன்னன் சீசாக்கிடம் தஞ்சம் புகுந்து, சாலமோன் இறக்கும்வரை அங்கேயே தங்கியிருந்தான்.
41சாலமோனின் பிற செயல்களும், அவர் செய்தவை அனைத்தும் அவரது ஞானமும்“சாலமோன் வரலாற்று நூலில் “ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
42சாலமோன் எருசலேமில் இருந்து கொண்டு இஸ்ரேயல் முழுவதன்மீதும் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார்.
43பின்பு சாலமோன் தம் மூதாதையரோடு துயில் கொண்டு தம் தந்தை தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டார். அவர் மகன் ரெகபெயாம் அவருக்குப் பின் ஆட்சி செய்தான்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.