1 | மனதின் யோசனைகள் மனிதனுடையது; நாவின் பதில் கர்த்தரால் வரும். |
2 | மனிதனுடைய வழிகளெல்லாம் அவனுடைய பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார். |
3 | உன்னுடைய செயல்களைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன்னுடைய யோசனைகள் உறுதிப்படும். |
4 | கர்த்தர் எல்லாவற்றையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார். |
5 | மனமேட்டிமையுள்ளவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடு கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பமாட்டான். |
6 | கிருபையினாலும், சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனிதர்கள் தீமையைவிட்டு விலகுவார்கள். |
7 | ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாக இருந்தால், அவனுடைய எதிரிகளும் சமாதானமாகும்படிச் செய்வார். |
8 | அநியாயமாக வந்த அதிக வருமானத்தைவிட, நியாயமாக வந்த கொஞ்ச வருமானமே நல்லது. |
9 | மனிதனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர். |
10 | ராஜாவின் உதடுகளில் இனிய வார்த்தை பிறக்கும்; நியாயத்தில் அவனுடைய வாய் தவறாது. |
11 | நியாயமான நிறைகோலும் தராசும் கர்த்தருடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல். |
12 | அநியாயம்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும். |
13 | நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாகப் பேசுகிறவன்மேல் ராஜாக்கள் பிரியப்படுவார்கள். |
14 | ராஜாவின் கோபம் மரணதூதர்களுக்குச் சமம்; ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான். |
15 | ராஜாவின் முகக்களையில் வாழ்வு உண்டு; அவனுடைய தயவு பின்மாரிபெய்யும் மேகத்தைப்போல் இருக்கும். |
16 | பொன்னைச் சம்பாதிப்பதைவிட ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு நல்லது! வெள்ளியை சம்பாதிப்பதைவிட புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை! |
17 | தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன்னுடைய நடையைக் கவனித்திருக்கிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான். |
18 | அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை. |
19 | அகங்காரிகளோடு கொள்ளைப்பொருளைப் பங்கிடுவதைவிட, சிறுமையானவர்களோடு மனத்தாழ்மையாக இருப்பது நலம். |
20 | விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான்; கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான். |
21 | இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகி எனப்படுவான்; உதடுகளின் இனிமை கல்வியைப் பெருகச்செய்யும். |
22 | புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனர்களின் போதனை மதியீனமே. |
23 | ஞானியின் இருதயம் அவனுடைய வாய்க்கு அறிவை ஊட்டும்; அவனுடைய உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும். |
24 | இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு இன்பமும், எலும்புகளுக்கு மருந்தாகும். |
25 | மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள். |
26 | உழைக்கிறவன் தனக்காகவே உழைக்கிறான்; அவனுடைய வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும். |
27 | வீணான மகன் கிண்டிவிடுகிறான்; அவனுடைய உதடுகளில் இருப்பது எரிகிற அக்கினிபோன்றது. |
28 | மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான். |
29 | கொடுமையானவன் தன்னுடைய அயலானுக்கு நயங்காட்டி, அவனை நலமல்லாத வழியிலே நடக்கச்செய்கிறான். |
30 | அவனுடைய மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன்னுடைய கண்களை மூடி, தீமையைச் செய்யும்படி தன்னுடைய உதடுகளைக் கடிக்கிறான். |
31 | நீதியின் வழியில் உண்டாகும் நரை முடியானது மகிமையான கிரீடம். |
32 | பலவானைவிட நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைவிட தன்னுடைய மனதை அடக்குகிறவன் உத்தமன். |
33 | சீட்டு மடியிலே போடப்படும்; காரியத்தின் முடிவோ கர்த்தரால் வரும். |