1 | இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் ஏலிமைவிட்டு பயணம்செய்து, எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே, ஏலிமுக்கும் சீனாய்க்கும் நடுவே இருக்கிற சீன் வனாந்திரத்திற்கு வந்துசேர்ந்தார்கள். |
2 | அந்த வனாந்திரத்திலே இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து: |
3 | நாங்கள் இறைச்சிப் பாத்திரங்களின் அருகிலே உட்கார்ந்து அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்ட எகிப்து தேசத்தில், கர்த்தரின் கையால் செத்துப்போனால் பரவாயில்லை; இந்தக் கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படச்செய்து, இந்த வனாந்திரத்திலே அழைத்துவந்தீர்களே என்று அவர்களிடம் சொன்னார்கள். |
4 | அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வரச்செய்வேன்; மக்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்; அதினால் அவர்கள் என்னுடைய கட்டளையின்படி நடப்பார்களோ நடக்கமாட்டார்களோ என்று அவர்களைச் சோதிப்பேன். |
5 | ஆறாம் நாளிலோ, அவர்கள் தினந்தோறும் சேர்க்கிறதைவிட இரண்டுமடங்கு சேர்த்து, அதை ஆயத்தம்செய்து வைக்கவேண்டும் என்றார். |
6 | அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் மக்கள் எல்லோரையும் நோக்கி: கர்த்தரே உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தவர் என்பதை மாலையில் அறிவீர்கள்; |
7 | அதிகாலையில் கர்த்தருடைய மகிமையையும் காண்பீர்கள்; கர்த்தருக்கு விரோதமான உங்களுடைய முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நீங்கள் எங்களுக்கு விரோதமாக முறுமுறுப்பதற்கு நாங்கள் எம்மாத்திரம் என்றார்கள். |
8 | பின்னும் மோசே: மாலையில் நீங்கள் சாப்பிடுவதற்குக் கர்த்தர் உங்களுக்கு இறைச்சியையும், அதிகாலையில் நீங்கள் திருப்தியடைவதற்கு அப்பத்தையும் கொடுக்கும்போது இது வெளிப்படும்; கர்த்தருக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுத்த உங்களுடைய முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நாங்கள் எம்மாத்திரம்? உங்களுடைய முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, கர்த்தருக்கே விரோதமாக இருக்கிறது என்றான். |
9 | அப்பொழுது மோசே ஆரோனைப் பார்த்து: நீ இஸ்ரவேல் மக்களாகிய சபையார்கள் எல்லோரையும் நோக்கி: கர்த்தருக்கு முன்பாக சேருங்கள், அவர் உங்களுடைய முறுமுறுப்புகளைக் கேட்டார் என்று சொல் என்றான். |
10 | ஆரோன் இஸ்ரவேல் மக்களாகிய சபையார்களுக்கெல்லாம் இதைச் சொல்லுகிறபோது, அவர்கள் வனாந்திரதிசையாகத் திரும்பிப்பார்த்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது. |
11 | கர்த்தர் மோசேயை நோக்கி: |
12 | இஸ்ரவேல் மக்களின் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறேன்; நீ அவர்களுடன் பேசி, நீங்கள் மாலையில் இறைச்சியைச் சாப்பிட்டு, அதிகாலையில் அப்பத்தால் திருப்தியாகி, நான் உங்களுடைய தேவனாகிய கர்த்தர் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார். |
13 | மாலையில் காடைகள் வந்து விழுந்து முகாமை மூடிக்கொண்டது. அதிகாலையில் முகாமைச் சுற்றி பனி பெய்திருந்தது. |
14 | பெய்திருந்த பனி நீங்கினபின்பு, இதோ, வனாந்திரத்தின்மீது எங்கும் உருண்டையான ஒரு சிறிய பொருள் உறைந்த பனிக்கட்டிப் பொடியைப்போலத் தரையின்மேல் கிடந்தது. |
15 | இஸ்ரவேல் மக்கள் அதைக் கண்டு, அது என்னவென்று அறியாமல் இருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, இது என்ன என்றார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: இது கர்த்தர் உங்களுக்குச் சாப்பிடக்கொடுத்த அப்பம். |
16 | கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால், அவரவர் சாப்பிடும் அளவுக்குத் தகுந்தபடி அதில் எடுத்துச் சேர்க்கட்டும்; உங்களிலுள்ள நபர்களின் எண்ணிக்கையின்படி, அவனவன் தன் தன் கூடாரத்தில் இருக்கிறவர்களுக்காக தலைக்கு ஒரு ஓமர் அளவு எடுத்துக்கொள்ளட்டும் என்றான். |
17 | இஸ்ரவேல் மக்கள் அப்படியே செய்து, சிலர் அதிகமாகவும் சிலர் குறைவாகவும் சேர்த்தார்கள். |
18 | பின்பு, அதை ஓமரால் அளந்தார்கள்: அதிகமாகச் சேர்த்தவனுக்கு மீதியானதும் இல்லை, குறைவாகச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை; அவரவர் தாங்கள் சாப்பிடும் அளவுக்குத்தகுந்தபடி சேர்த்தார்கள். |
19 | மோசே அவர்களை நோக்கி: ஒருவனும் அதிகாலைவரை அதில் ஒன்றும் வைக்கக்கூடாது என்று அவர்களுக்குச் சொல்லியும்; |
20 | மோசேயின் சொல் கேட்காமல், சிலர் அதில் அதிகாலைவரை சிறிதளவு மீதியாக வைத்தார்கள்; அது பூச்சி பிடித்து நாற்றமெடுத்தது. அவர்கள்மேல் மோசே கோபம்கொண்டான். |
21 | அதை அதிகாலைதோறும் அவரவர் சாப்பிடும் அளவுக்குத்தகுந்தபடி சேர்த்தார்கள், வெயில் ஏறஏற அது உருகிப்போகும். |
22 | ஆறாம் நாளில் தலைக்கு இரண்டு ஓமர் வீதமாக இரண்டுமடங்காக ஆகாரம் சேர்த்தார்கள்; அப்பொழுது சபையின் தலைவர்கள் எல்லோரும் வந்து, அதை மோசேக்கு அறிவித்தார்கள். |
23 | அவன் அவர்களை நோக்கி: கர்த்தர் சொன்னது இதுதான்; நாளைக்குக் கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச் சுட்டு, வேகவைக்கவேண்டியதை வேகவைத்து, மீதியாக இருக்கிறதையெல்லாம் நாளைவரை உங்களுக்காக வைத்துவையுங்கள் என்றான். |
24 | மோசே கட்டளையிட்டபடி, அதை மறுநாள்வரைக்கும் வைத்துவைத்தார்கள்; அப்பொழுது அது நாறவும் இல்லை, அதிலே பூச்சிபிடிக்கவும் இல்லை. |
25 | அப்பொழுது மோசே; அதை இன்றைக்குச் சாப்பிடுங்கள்; இன்று கர்த்தருக்குரிய ஓய்வுநாள்; இன்று நீங்கள் அதை வெளியிலே காணமாட்டீர்கள். |
26 | ஆறுநாட்களும் அதைச் சேர்ப்பீர்களாக; ஏழாம்நாள் ஓய்வுநாளாக இருக்கிறது; அதிலே அது உண்டாகாது என்றான். |
27 | ஏழாம்நாளில் மக்களில் சிலர் அதைச் சேர்க்கப் புறப்பட்டார்கள்; அவர்கள் அதைப் பார்க்கவில்லை. |
28 | அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய சட்டங்களையும் கைக்கொள்ள எதுவரை மனம் இல்லாமல் இருப்பீர்கள்? |
29 | பாருங்கள், கர்த்தர் உங்களுக்கு ஓய்வுநாளை கொடுத்தபடியால், அவர் உங்களுக்கு ஆறாம்நாளில் இரண்டு நாளுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார்; ஏழாம்நாளில் உங்களில் ஒருவனும் தன்தன் இடத்திலிருந்து புறப்படாமல், அவனவன் தன் தன் இடத்திலே இருக்கவேண்டும் என்றார். |
30 | அப்படியே மக்கள் ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தார்கள். |
31 | இஸ்ரவேல் மக்கள் அதற்கு மன்னா என்று பெயரிட்டார்கள்; அது கொத்துமல்லி அளவாகவும் வெண்மைநிறமாகவும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணியாரத்தைப்போல இருந்தது. |
32 | அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட காரியம் என்னவென்றால், நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தபோது, வனாந்திரத்தில் உங்களுக்கு சாப்பிடக்கொடுத்த அப்பத்தை உங்கள் சந்ததியார்கள் பார்க்கும்படி, அவர்களுக்காக அதைப் பாதுகாப்பதற்கு, அதிலே ஒரு ஓமர் நிறைய எடுத்து வைக்கவேண்டும் என்றான். |
33 | மேலும், மோசே ஆரோனை நோக்கி: நீ ஒரு பாத்திரத்தை எடுத்து, அதிலே ஒரு ஓமர் அளவு மன்னாவைப் போட்டு, அதை உங்களுடைய சந்ததியார்களுக்காகப் பாதுகாப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியிலே வை என்றான். |
34 | கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அது காக்கப்படும்படி ஆரோன் அதைச் சாட்சி சந்நிதியில் வைத்தான். |
35 | இஸ்ரவேல் மக்கள் குடியிருப்பான தேசத்திற்கு வரும்வரை நாற்பது வருடங்கள் மன்னாவை சாப்பிட்டார்கள்; அவர்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும்வரையும் மன்னாவை சாப்பிட்டார்கள். |
36 | ஒரு ஓமரானது எப்பாவிலே பத்தில் ஒரு பங்கு. |