1 | மேலும், நீ அவர்களுக்கு அறிவிக்கவேண்டிய கட்டளைகள்: |
2 | எபிரெயர்களில் ஒரு அடிமையை வாங்கினால், அவன் ஆறுவருடங்கள் வேலைசெய்து, ஏழாம் வருடத்திலே ஒன்றும் தராமல் விடுதலைப்பெற்றுப் போகவேண்டும். |
3 | தனியாக வந்திருந்தால், தனியாகப்போகவேண்டும்; திருமணம் செய்தவனாக வந்திருந்தால், அவன் மனைவி அவனுடன் போகவேண்டும். |
4 | அவனுடைய எஜமான் அவனுக்கு ஒரு பெண்ணை திருமணம்செய்துகொடுத்தும், அவள் அவனுக்கு ஆண்பிள்ளைகளையோ பெண்பிள்ளைகளையோ பெற்றும் இருந்தால், அந்தப் பெண்ணும் அவளுடைய பிள்ளைகளும் அவளுடைய எஜமானைச் சேரவேண்டும்; அவன் மட்டும் தனியாகப் போகவேண்டும். |
5 | அந்த வேலைக்காரன்: என்னுடைய எஜமானையும் என்னுடைய மனைவியையும் என்னுடைய பிள்ளைகளையும் நேசிக்கிறேன்; நான் விடுதலை பெற்றுப்போக மனதில்லை என்று மனப்பூர்வமாகச் சொன்னால் |
6 | அவனுடைய எஜமான் அவனை நியாயாதிபதிகளிடம் அழைத்துக்கொண்டுபோய், அவனைக் கதவின் அருகிலாவது கதவுநிலையின் அருகிலாவது சேரச்செய்து, அங்கே அவனுடைய எஜமான் அவனுடைய காதைக் கம்பியினால் குத்தவேண்டும்; பின்பு அவன் என்றைக்கும் அவனிடம் வேலைசெய்துகொண்டிருக்கவேண்டும். |
7 | ஒருவன் தன்னுடைய மகளை வேலைக்காரியாக விற்றுப்போட்டால், வேலைக்காரன் விடுதலைபெற்றுப் போவதுபோல அவள் போகக்கூடாது. |
8 | அவளைத் தனக்கு நியமித்துக்கொண்ட எஜமானின் பார்வைக்கு அவள் தகாதவளாகப் போனால், அவள் மீட்கப்படலாம்; அவன் அவளுக்குத் துரோகம்செய்து, அவளை அந்நியர்கள் கையில் விற்க அவனுக்கு அதிகாரம் இல்லை. |
9 | அவன் தன்னுடைய மகனுக்கு அவளை மனைவியாக நியமித்திருந்தால், தன்னுடைய மகள்களை நடத்துவதுபோல அவளையும் நடத்தவேண்டும். |
10 | அவன் வேறொரு பெண்ணைத் தனக்கென்று நியமித்தால், இவளுக்குரிய உணவு, உடை, திருமண உரிமை ஆகிய இவைகளில் குறைவுசெய்யாமல் இருக்கவேண்டும். |
11 | இம்மூன்றும் அவன் அவளுக்குச் செய்யாமற்போனால், அவள் பணம் தராமல் விடுதலைபெற்றுப் போகவேண்டும். |
12 | ஒரு மனிதனைச் சாகும்படி அடித்தவன், நிச்சயமாகக் கொலைசெய்யப்பட வேண்டும். |
13 | ஒருவன் மறைந்திருந்து கொல்லாமல், தேவசெயலாகத் தன்னுடைய கைக்கு நேரிட்டவனைக் கொன்றால், அவன் ஓடிப்போய்ச் சேரவேண்டிய இடத்தை உனக்கு நியமிப்பேன். |
14 | ஒருவன் பிறனுக்கு விரோதமாக சதிமோசம்செய்து, அவனைத் துணிகரமாகக் கொன்றுபோட்டால், அவனை என்னுடைய பலிபீடத்திலிருந்தும் பிடித்துக்கொண்டுபோய்க் கொலைசெய்யவேண்டும். |
15 | தன்னுடைய தகப்பனையாவது தன்னுடைய தாயையாவது அடிக்கிறவன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படவேண்டும். |
16 | ஒருவன் ஒரு மனிதனைத் திருடி விற்றுப்போட்டாலும், இவன் அவனிடம் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படவேண்டும். |
17 | தன்னுடைய தகப்பனையோ தன்னுடைய தாயையோ சபிக்கிறவன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படவேண்டும். |
18 | மனிதர்கள் சண்டையிட்டு, ஒருவன் மற்றொருவனைக் கல்லால் எறிந்ததாலோ கையால் அடித்ததினாலோ அவன் சாகாமல் படுக்கையில் கிடந்து |
19 | திரும்ப எழுந்து வெளியிலே தன்னுடைய ஊன்றுகோலைப் பிடித்துக்கொண்டு நடமாடினால், அடித்தவன் தண்டனைக்கு விலகியிருப்பான்; ஆனாலும் அவனுக்கு நஷ்டஈடு கொடுத்து, அவனை நன்றாகக் குணமாக்கவேண்டும். |
20 | ஒருவன் தனக்கு அடிமையானவனையோ தனக்கு அடிமையானவளையோ, கோலால் அடித்ததாலே, அவனுடைய கையால் இறந்துபோனால், பழிக்குப்பழி வாங்கப்படவேண்டும். |
21 | ஒரு நாளாவது இரண்டு நாட்களாவது உயிரோடு இருந்தால், அவர்கள் அவனுக்கு உரியவனாக இருப்பதால், பழிவாங்கவேண்டியதில்லை. |
22 | மனிதர்கள் சண்டையிட்டு, கர்ப்பவதியான ஒரு பெண்ணை அடித்ததால், அவளுக்கு வேறு சேதமில்லாமல் கர்ப்பம் கலைந்துபோனால், அடிபட்ட பெண்ணின் கணவன் அடித்தவன்மேல் சுமத்துகிறதற்குத்தகுந்தபடியும் நியாயாதிபதிகள் செய்யும் தீர்ப்பின்படியும் அபராதம் கொடுக்கவேண்டும். |
23 | வேறே சேதமுண்டானால், ஜீவனுக்கு ஜீவன் |
24 | கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் |
25 | சூட்டுக்குச் சூடு, காயத்திற்குக் காயம், தழும்புக்குத் தழும்பு கொடுக்கவேண்டும். |
26 | ஒருவன் தன்னுடைய அடிமையின் கண்ணையோ தன்னுடைய அடிமைப்பெண்ணின் கண்ணையோ அடித்து அதைக் கெடுத்தால், அவனுடைய கண்ணுக்குப் பதிலாக அவனை விடுதலை செய்யவேண்டும். |
27 | அவன் தன்னுடைய அடிமையின் பல்லையோ தன்னுடைய அடிமைப்பெண்ணின் பல்லையோ விழும்படி அடித்தால், அவனுடைய பல்லுக்குப் பதிலாக அவனை விடுதலை செய்துவிடவேண்டும். |
28 | ஒரு மாடு ஒரு ஆணையோ ஒரு பெண்ணையோ முட்டியதால் சாவு உண்டானால், அந்த மாடு கல்லெறியப்படவேண்டும், அதின் இறைச்சி சாப்பிடப்படக்கூடாது; அப்பொழுது மாட்டின் எஜமான் தண்டனைக்கு விலகியிருப்பான். |
29 | தன்னுடைய மாடு வழக்கமாக முட்டுகிற மாடாக இருந்து, அது அதின் எஜமானுக்கு அறிவிக்கப்பட்டும், அவன் அதைக் கட்டிவைக்காததால், அது ஒரு ஆணையோ ஒரு பெண்ணையோ கொன்று போட்டால், மாடும் கல்லெறியப்படவேண்டும், அதின் எஜமானும் கொலை செய்யப்படவேண்டும். |
30 | அபராதம் கொடுக்கும்படி தீர்க்கப்பட்டதால், அவன் தன்னுடைய உயிரை மீட்கும் பொருளாக விதிக்கப்பட்ட அபராதத்தைக் கொடுக்கவேண்டும். |
31 | அது ஒருவனுடைய மகனை முட்டினாலும் சரி, ஒருவனுடைய மகளை முட்டினாலும் சரி, இந்தத் தீர்ப்பின்படியே அவனுக்குச் செய்யப்படவேண்டும். |
32 | அந்த மாடு ஒரு அடிமையையோ ஒரு அடிமைப்பெண்ணையோ முட்டினால், அதற்கு உடையவன் அவர்களுடைய எஜமானுக்கு முப்பது சேக்கல் நிறையான வெள்ளியைக் கொடுக்கவேண்டும்; மாடு கல்லெறியப்படவேண்டும். |
33 | ஒருவன் ஒரு குழியைத் திறந்து வைத்ததாலோ, ஒரு குழியை வெட்டி அதை மூடாமல் போனதாலோ, அதிலே ஒரு மாடோ ஒரு கழுதையோ விழுந்தால் |
34 | குழிக்கு உரியவன் அதற்கு ஈடாகப் பணத்தை மிருகத்தினுடைய எஜமானுக்குக் கொடுக்கவேண்டும்; செத்ததோ அவனுடையதாகவேண்டும். |
35 | ஒருவனுடைய மாடு மற்றவனுடைய மாட்டை முட்டியதால் அது செத்தால், உயிரோடு இருக்கிற மாட்டை அவர்கள் விற்று, அதின் தொகையைப் பங்கிட்டு, செத்ததையும் பங்கிட்டுக்கொள்ளவேண்டும். |
36 | அந்த மாடு முன்பே முட்டுகிற மாடென்று அதின் எஜமான் அறிந்தும், அதைக் கட்டிவைக்காமல் இருந்தால், அவன் மாட்டுக்கு மாட்டைக் கொடுக்கவேண்டும்; செத்ததோ அவனுடையதாக வேண்டும். |