1 | ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குக் காட்சியளித்து: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாக இரு. |
2 | நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாகப் பெருகச்செய்வேன் என்றார். |
3 | அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். தேவன் அவனுடன் பேசி: |
4 | நான் உன்னுடன் செய்கிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான தேசங்களுக்குத் தகப்பனாவாய். |
5 | இனி உன் பெயர் ஆபிராம் எனப்படாமல், நான் உன்னைத் திரளான தேசங்களுக்குத் தகப்பனாக ஏற்படுத்தியதால், உன் பெயர் ஆபிரகாம் எனப்படும். |
6 | உன்னை மிகவும் அதிகமாகப் பலுகச்செய்து, உன்னிலே தேசங்களை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள். |
7 | உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருப்பதற்காக எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக நிலைப்படுத்துவேன். |
8 | நீ பரதேசியாகத் தங்கிவருகிற கானான் தேசம் முழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் சொந்தமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாக இருப்பேன் என்றார். |
9 | பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: இப்பொழுது நீயும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள். |
10 | எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என்னுடைய உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் அனைத்து ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் செய்யப்படவேண்டும்; |
11 | உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் செய்யவேண்டும்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாக இருக்கும். |
12 | உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளெல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம் செய்யப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் சந்ததியல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்கு வாங்கப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம் செய்யப்படவேண்டும். |
13 | உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்கு வாங்கப்பட்டவனும், விருத்தசேதனம் செய்யப்படவேண்டியது அவசியம்; இப்படி என்னுடைய உடன்படிக்கை உங்கள் சரீரத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கவேண்டும். |
14 | நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையாக இருந்தால், அந்த ஆத்துமா என்னுடைய உடன்படிக்கையை மீறினதால், தன் மக்களுடன் இல்லாதபடி நீக்கப்பட்டுப்போவான் என்றார். |
15 | பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழைக்காதே; சாராள் என்பது அவளுக்குப் பெயராக இருக்கும். |
16 | நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு மகனையும் தருவேன்; அவள் தேசங்களுக்குத் தாயாகவும், அவளாலே தேசங்களின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார். |
17 | அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து சிரித்து: நூறுவயதானவனுக்குக் குழந்தை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் குழந்தை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு |
18 | இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக! என்று ஆபிரகாம் தேவனிடத்தில் விண்ணப்பம்செய்தான். |
19 | அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாக உனக்கு ஒரு மகனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிடுவாயாக; என்னுடைய உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவனுடைய சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக நிலைப்படுத்துவேன். |
20 | இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் செய்வேன்; அவன் பன்னிரண்டு கோத்திரத் தலைவர்களைப் பெறுவான்; அவனைப் பெரிய தேசமாக்குவேன். |
21 | வருகிற வருடத்தில் குறித்தகாலத்திலே சாராள் உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடு நான் என்னுடைய உடன்படிக்கையை ஏற்படுத்துவேன் என்றார். |
22 | தேவன் ஆபிரகாமோடு பேசிமுடிந்தபின்பு, அவர் அவனைவிட்டுப் போனார். |
23 | அப்பொழுது ஆபிரகாம் தன் மகனாகிய இஸ்மவேலையும், தன் வீட்டில் பிறந்த அனைவரையும், தான் பணத்திற்கு வாங்கிய அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகள் எல்லோரையும் சேர்த்து, தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்த நாளிலேயே விருத்தசேதனம் செய்தான். |
24 | ஆபிரகாமுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படும்போது, அவன் தொண்ணூற்றொன்பது வயதாக இருந்தான். |
25 | அவனுடைய மகனாகிய இஸ்மவேலின் நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படும்போது, அவன் பதின்மூன்று வயதாக இருந்தான். |
26 | ஒரே நாளில் ஆபிரகாமும் அவனுடைய மகன் இஸ்மவேலும் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள். |
27 | வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்கு வாங்கப்பட்டவர்களுமாகிய அவனுடைய வீட்டு மனிதர்கள் அனைவரும் அவனோடு விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள். |