1 | அப்பொழுது சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை முத்தஞ்செய்து: கர்த்தர் உன்னைத் தம்முடைய சுதந்தரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம்பண்ணினார் அல்லவா? |
2 | நீ இன்றைக்கு என்னைவிட்டுப் போகிறபோது, பென்யமீன் எல்லையாகிய செல்சாகில் ராகேலின் கல்லறையண்டையில் இரண்டு மனுஷரைக் காண்பாய்; அவர்கள் உன்னைப் பார்த்து: நீ தேடப்போன கழுதைகள் அகப்பட்டது; இதோ, உன் தகப்பன் கழுதைகளின் மேலிருந்த கவலையைவிட்டு, உங்களுக்காக விசாரப்பட்டு, என் மகனுக்காக என்ன செய்வேன்? என்கிறான் என்று சொல்லுவார்கள். |
3 | நீ அவ்விடத்தை விட்டு அப்புறம் கடந்துபோய், தாபோரிலுள்ள சமபூமியிலே சேரும்போது, தேவனைப் பணியும்படி பெத்தேலுக்குப் போகிற மூன்று மனுஷர் அங்கே உன்னைக் கண்டு சந்திப்பார்கள்; ஒருவன் மூன்று ஆட்டுக்குட்டிகளையும், இன்னொருவன் மூன்று அப்பங்களையும், வேறொருவன் திராட்சரசமுள்ள ஒரு துருத்தியையும் கொண்டுவந்து, |
4 | உன்னுடைய சுகசெய்தியை விசாரித்து, உனக்கு இரண்டு அப்பங்களைக் கொடுப்பார்கள்; அவைகளை நீ அவர்கள் கையிலே வாங்கவேண்டும். |
5 | பின்பு பெலிஸ்தரின் தாணையம் இருக்கிற தேவனுடைய மலைக்குப் போவாய்; அங்கே நீ பட்டணத்திற்குள் பிரவேசிக்கையில், மேடையிலிருந்து இறங்கி வருகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்திற்கு எதிர்ப்படுவாய்; அவர்களுக்கு முன்பாகத் தம்புரும், மேளமும், நாகசுரமும், சுரமண்டலமும் போகும்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள். |
6 | அப்பொழுது கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்குவார்; நீ அவர்களோடேகூடத் தீர்க்கதரிசனம் சொல்லி, வேறு மனுஷனாவாய். |
7 | இந்த அடையாளங்கள் உனக்கு நேரிடும்போது, சமயத்துக்கு ஏற்றபடி நீ செய்; தேவன் உன்னோடே இருக்கிறார். |
8 | நீ எனக்கு முன்னே கில்காலுக்கு இறங்கிப்போ; சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தும்படிக்கு, நான் உன்னிடத்தில் வருவேன்; நான் உன்னிடத்தில் வந்து, நீ செய்யவேண்டியதை உனக்கு அறிவிக்குமட்டும், ஏழு நாள் காத்திரு என்றான். |
9 | அவன் சாமுவேலை விட்டுப் போகும்படி திரும்பினபோது, தேவன் அவனுக்கு வேறே இருதயத்தைக் கொடுத்தார்; அந்த அடையாளங்கள் எல்லாம் அன்றையதினமே நேரிட்டது. |
10 | அவர்கள் அந்த மலைக்கு வந்தபோது, இதோ, தீர்க்கதரிசிகளின் கூட்டம் அவனுக்கு எதிராக வந்தது; அப்பொழுது தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால், அவனும் அவர்களுக்குள்ளே தீர்க்கதரிசனம் சொன்னான். |
11 | அதற்குமுன்னே அவனை அறிந்தவர்கள் எல்லாரும் அவன் தீர்க்கதரிசிகளோடிருந்து, தீர்க்கதரிசனம் சொல்லுகிறதைக் கண்டபோது: கீசின் குமாரனுக்கு வந்தது என்ன? சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்று அந்த ஜனங்கள் ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். |
12 | அதற்கு அங்கே இருக்கிறவர்களில் ஒருவன்: இவர்களுக்குத் தகப்பன் யார் என்றான்; ஆதலால் சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்பது பழமொழியாயிற்று. |
13 | அவன் தீர்க்கதரிசனம் சொல்லி முடிந்தபின்பு, மேடையின்மேல் வந்தான். |
14 | அப்பொழுது சவுலுடைய சிறிய தகப்பன்: நீங்கள் எங்கே போனீர்கள் என்று அவனையும் அவன் வேலைக்காரனையும் கேட்டான். அதற்கு அவன்: நாங்கள் கழுதைகளைத் தேடப்போய், அவைகளை எங்குங்காணாதபடியினால், சாமுவேலிடத்துக்குப் போனோம் என்றான். |
15 | அப்பொழுது சவுலுடைய சிறிய தகப்பன்: சாமுவேல் உங்களுக்குச் சொன்னது என்ன? அதைச் சொல் என்றான். |
16 | சவுல் தன் சிறிய தகப்பனைப் பார்த்து: கழுதைகள் அகப்பட்டது என்று எங்களுக்குத் தீர்மானமாய்ச் சொன்னார் என்றான்; ஆனாலும் ராஜ்யபாரத்தைப்பற்றிச் சாமுவேல் சொன்னதை அவனுக்கு அறிவிக்கவில்லை. |
17 | சாமுவேல் ஜனங்களை மிஸ்பாவிலே கர்த்தரிடத்திலே வரவழைத்து, |
18 | இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, உங்களை எகிப்தியர் கைக்கும், உங்களை இறுகப்பிடித்த எல்லா ராஜ்யத்தாரின் கைக்கும் நீங்கலாக்கிவிட்டேன். |
19 | நீங்களோ உங்களுடைய எல்லாத் தீங்குகளுக்கும் நெருக்கங்களுக்கும் உங்களை நீங்கலாக்கி இரட்சித்த உங்கள் தேவனை இந்நாளிலே புறக்கணித்து, ஒரு ராஜாவை எங்கள்மேல் ஏற்படுத்தும் என்று அவரிடத்தில் கேட்டுக்கொண்டீர்கள்; இப்பொழுது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் வம்சங்களின்படியேயும், ஆயிரங்களான உங்கள் சேர்வைகளின்படியேயும், வந்து நில்லுங்கள் என்றான். |
20 | சாமுவேல் இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் சேரப்பண்ணினபின்பு பென்யமீன் கோத்திரத்தின்மேல் சீட்டு விழுந்தது. |
21 | அவன் பென்யமீன் கோத்திரத்தை அதினுடைய குடும்பங்களின்படியே சேரப்பண்ணினபின்பு, மாத்திரி குடும்பத்தின்மேலும், அதிலே கீசின் குமாரனாகிய சவுலின்மேலும், சீட்டு விழுந்தது; அவனைத் தேடினபோது, அவன் அகப்படவில்லை. |
22 | அவன் இனி இங்கே வருவானா என்று அவர்கள் திரும்பக் கர்த்தரிடத்தில் விசாரித்தபோது: இதோ, அவன் தளவாடங்களிருக்கிற இடத்திலே ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்று கர்த்தர் சொன்னார். |
23 | அப்பொழுது அவர்கள் ஓடி, அங்கேயிருந்து அவனை அழைத்துக்கொண்டு வந்தார்கள்; அவன் ஜனங்கள் நடுவே வந்து நின்றபோது, எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான். |
24 | அப்பொழுது சாமுவேல் எல்லா ஜனங்களையும் நோக்கி: கர்த்தர் தெரிந்து கொண்டவனைப் பாருங்கள், சமஸ்த ஜனங்களுக்குள்ளும் அவனுக்குச் சமானமானவன் இல்லை என்றான்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் ஆர்ப்பரித்து: ராஜா வாழ்க என்றார்கள். |
25 | சாமுவேல் ராஜாங்கத்தின் முறையை ஜனங்களுக்குத் தெரிவித்து, அதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, கர்த்தருடைய சந்நிதியில் வைத்து, ஜனங்களையெல்லாம் அவரவர் வீட்டுக்கு அனுப்பிவிட்டான். |
26 | சவுலும் கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போனான்; இராணுவத்தில் தேவன் எவர்கள் மனதை ஏவினாரோ, அவர்களும் அவனோடேகூடப் போனார்கள். |
27 | ஆனாலும் பேலியாளின் மக்கள்: இவனா நம்மை இரட்சிக்கப்போகிறவன் என்று சொல்லி, அவனுக்குக் காணிக்கைகொண்டுவராமல் அவனை அசட்டைப்பண்ணினார்கள்; அவனோ காது கேளாதவன்போல இருந்தான். |