வேதாகமத்தை வாசி

லேவியராகமம் 1

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மோசேயைக் கூப்பிட்டு, அவனை நோக்கி:
2நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலிசெலுத்தவேண்டும்.
3அவன் செலுத்துவது மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில் தான் அங்கிகரிக்கப்படும்படி, அவன் அதை ஆசரிப்புக்கூடார வாசலில் கொண்டுவந்து,
4அது தன் பாவநிவிர்த்திக்கென்று அங்கிகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின்மேல் வைத்து,
5கர்த்தருடைய சந்நிதியில் அந்தக்காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
6பின்பு அவன் அந்தச் சர்வாங்க தகனபலியைத் தோலுரித்து, அதைச் சந்துசந்தாகத் துண்டிக்கக்கடவன்.
7அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் பலிபீடத்தின்மேல் அக்கினியைப் போட்டு, அக்கினியின்மேல் கட்டைகளை அடுக்கி,
8அவன் குமாரராகிய ஆசாரியர்கள், துண்டங்களையும் தலையையும் கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவர்கள்.
9அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
10அவன் செலுத்துவது செம்மறியாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது வெள்ளாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், பழுதற்ற ஒரு கடாவைக் கொண்டுவந்து,
11கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்தின் வடபுறத்தில் அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
12பின்பு அவன் அதைச் சந்துசந்தாகத் துண்டித்து, அதின் தலையையும் கொழுப்பையும் கூடவைப்பானாக; அவைகளை ஆசாரியன் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவன்.
13குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் கொண்டுவந்து பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
14அவன் கர்த்தருக்குச் செலுத்துவது பறவைகளிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், காட்டுப் புறாக்களிலாவது புறாக்குஞ்சுகளிலாவது எடுத்துச் செலுத்தக்கடவன்.
15அதை ஆசாரியன் பலிபீடத்தண்டையில் கொண்டுவந்து, அதின் தலையைக்கிள்ளி, பலிபீடத்தில் தகனித்து, அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின் பக்கத்தில் சிந்தவிட்டு,
16அதின் இரைப்பையை அதின் மலத்தோடுங்கூட எடுத்து, அதைப் பலிபீடத்தண்டையில் கீழ்புறமாகச் சாம்பல் இருக்கிற இடத்திலே எறிந்துவிட்டு,
17பின்பு அதின் செட்டைகளுடன் அதை இரண்டாக்காமல் பிளப்பானாக; பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் தகனிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.