1 | ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப் போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார். |
2 | மனுஷனுடைய வழியெல்லாம் அவன் பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப்பார்க்கிறார். |
3 | பலியிடுவதைப்பார்க்கிலும், நீதியும் நியாயமும் செய்வதே கர்த்தருக்குப் பிரியம். |
4 | மேட்டிமையான பார்வையும், அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே. |
5 | ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும். |
6 | பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம்போலிருக்கும். |
7 | துன்மார்க்கர் நியாயஞ்செய்ய மனதில்லாதிருக்கிறபடியால், அவர்கள் பாழ்க்கடிக்கப்பட்டுப்போவார்கள். |
8 | குற்றமுள்ளவன் தன் வழிகளில் மாறுபாடுள்ளவன்; சுத்தமுள்ளவனோ தன் கிரியையில் செம்மையானவன். |
9 | சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம். |
10 | துன்மார்க்கனுடைய மனம் பொல்லாப்பைச் செய்ய விரும்பும்; அவன் கண்களில் அவன் அயலானுக்கு இரக்கங்கிடையாது. |
11 | பரியாசக்காரனை தண்டிக்கும்போது பேதை ஞானமடைவான்; ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான். |
12 | நீதிபரர் துன்மார்க்கருடைய வீட்டைக் கவனித்துப்பார்க்கிறார்; துன்மார்க்கரைத் தீங்கில் கவிழ்த்துப்போடுவார். |
13 | ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான். |
14 | அந்தரங்கமாய்க் கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்; மடியிலுள்ள பரிதானம் குரோதத்தை ஆற்றும். |
15 | நியாயந்தீர்ப்பது நீதிமானுக்குச் சந்தோஷமும், அக்கிரமக்காரருக்கோ அழிவுமாம். |
16 | விவேகத்தின் வழியை விட்டுத் தப்பி நடக்கிற மனுஷன் செத்தவர்களின் கூட்டத்தில் தாபரிப்பான். |
17 | சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் ஐசுவரியவானாவதில்லை. |
18 | நீதிமானுக்குப் பதிலாகத் துன்மார்க்கனும், செம்மையானவனுக்குப் பதிலாக துரோகியும் மீட்கும் பொருளாவார்கள். |
19 | சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப்பார்க்கிலும் வனாந்தரத்தில் குடியிருப்பது நலம். |
20 | வேண்டிய திரவியமும் எண்ணெயும் ஞானவானுடைய வாசஸ்தலத்தில் உண்டு; மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான். |
21 | நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான். |
22 | பலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து, அவர்கள் நம்பின அரணை இடித்துப்போடுவான். |
23 | தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான். |
24 | அகங்காரமும் இடும்புமுள்ளவனுக்குப் பரியாசக்காரனென்று பேர், அவன் அகந்தையான சினத்தோடே நடக்கிறான். |
25 | சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும். |
26 | அவன் நாள்தோறும் ஆவலுடன் இச்சிக்கிறான்; நீதிமானோ பிசினித்தனமில்லாமல் கொடுப்பான். |
27 | துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; அதைத் துர்ச்சிந்தையோடே செலுத்தினாலோ எத்தனை அதிகமாய் அருவருக்கப்படும். |
28 | பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்; செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசத்தக்கவனாவான். |
29 | துன்மார்க்கன் தன் முகத்தைக் கடினப்படுத்துகிறான்; செம்மையானவனோ தன் வழியை நேர்ப்படுத்துகிறான். |
30 | கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை. |
31 | குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும். |