வேதப்புத்தகத்தில் உள்ள புரிந்துக்கொள்ளுவதற்கு கடினமான பகுதிகளில் 1கொரிந்தியர் 14ம் அதிகாரமும் ஒன்று. அந்நியபாஷை பேசுவதைக் குறித்து விளக்கும் இந்த வேதப்பகுதியை, அதைக்குறித்து மற்ற வேதப்பகுதிகளில் சொல்லப் பட்டவைகளையும், கொரிந்து திருச்சபையின் பின்னனியத்தையும், ஒன்றாக பொருத்திப்பார்க்காமல் புரிந்துக்கொள்ள முடியாது. பாபேலில் தங்களுக்கு பேர் உண்டாக கோபுரம் கட்ட முயன்ற ஜனங்களின் பாஷையை தேவன் தாறுமாறாக்கினார் என்று வாசிக்கிறோம் (ஆதி 11). அதற்கு இணையாக பாஷைகள் தாறுமாறாக, குழப்படியாக பேசப்பட்ட இடம் கொரிந்து திருச்சபையாகும். கொரிந்து திருச்சபையில் விளங்கிய அந்நியபாஷை குழப்பத்தை சரிசெய்ய, ஒரு முழு அதிகாரத்தையே பவுல் எழுதவேண்டியிருந்தது!
ஆதித் திருச்சபையில் இருந்த விசுவாசிகளுக்கு தேவன் வரங்களைக் கொடுத்த பொழுது, புது யுகத்துக்கான தனது செய்தியின் உண்மையை உறுதிப்படுத்த பல அற்புதமான வரங்களையும் தேவன் கொடுத்தார். அவற்றில் ஒன்றுதான் இந்த அந்நியபாஷையில் பேசும் வரம் ஆகும். பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார் (எபி 1:1,2), இது ஒரு புதிய செய்தி, புதிய காலம் மற்றும் புதிய வெளிப்பாடு என்பதையும், தேவன் மீண்டும் அவர்களுடன் பேசுகிறார் என்பதையும், குறிப்பாக யூதர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தேவனுடைய நோக்கம். தேவனுடைய இந்த நோக்கம் நிறைவேற சில சிறப்பு அற்புத அடையாளங்களை செய்யும் வரங்களை அப்போஸ்தலர்களும், உடன் ஊழியர்களுக்கும் தேவன் கொடுத்தார். அவைகளில் ஒன்றுதான் அந்நியபாஷையின் வரம் என்று அழைக்கப்படும் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலால், தாங்கள் முன்னர் அறிந்திராத வேறொரு உலக பாஷையை பேசும் வரம் ஆகும்.
கொரிந்திய கலாச்சாரமும், பரவச பாஷைகளும்
வேதத்தில் காணப்படும் அந்நியபாஷையானது எப்பொழுதும் மனிதர்கள் பேசும் ஒரு பாஷையாகவே இருந்தது. அப் 2: 11-ல் மேல் வீட்டு அறையில் கூடியிருந்த மக்கள் அனைவரும் தங்களுடைய சொந்த பாஷையிலே தேவனுடைய மகத்துவங்களை பேசக் கேட்டார்கள் என்றுதான் நாம் வாசிக்கிறோம். அங்கே பேசிய மக்களுக்கு அந்த பாஷை புரியாவிட்டாலும், அதைக்கேட்ட மக்களுக்கு அவர்கள் பேசியது புரிந்தது. அந்நியபாஷை வரத்தை பயன்படுத்துவதில் கோரிந்து திருச்சபையில் குழப்பமும், கூச்சலும் நிலவியதால், அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்திற்கு பிறகு அந்த வரத்தைக் குறித்து நேரடியாக நாம் 1கொரிந்தியரில் மட்டுமே வாசிக்கிறோம். கொரிந்து திருச்சபையில், புறஜாதியாரின் போலியான பரவச (Ecstasy) அந்நியபாஷையை உண்மையான அந்நியபாஷையின் வரத்திற்கு பதிலாக மாற்றி இருந்தனர். சுருங்கக் கூறின், உண்மையான அந்நியபாஷையின் வரமானது, போலியான பரவச பாஷையுடன் கலக்கப்பட்டிருந்தது.
இந்தப் பரவச பேச்சுகள்/பாஷைகள் புறஜாதியாரின் சமயத்தில் மிகவும் வழக்கமானது. உதாரணமாக, ஆபிரிக்காவின் சூளு (Zulus) இன மக்களிடையே இதுபோன்ற பரவச உளறல் பேச்சுகள் இன்றும் காணப்படுகின்றன. நம்மூரிலும் புறமதத்தினர் சாமியாடுதல் எனும் பெயரில் செய்யும் பரவச உளறல்களைக் கேட்டிருப்பீர்கள்.
தற்போது கொரிந்து திருச்சபையின் பின்னணியை நாம் பார்ப்போம். பொதுவாகவே, கொரிந்தியர்கள் தங்களை சுற்றி காணப்பட்ட எல்லா உலக வழக்கங்களையும் தங்களுடைய திருச்சபையில் அனுமதித்திருந்தனர். 1கொரிந்தியரின் முதல் 4 அதிகாரங்களில் நாம் பார்க்கிறபடி, மனிதரின் தத்துவங்களை பிடித்து தொங்கிக் கொண்டிருந்தார்கள். தங்கள் சமூகத்தில் காணப்பட்டபடியே, 3-ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறபடி, திருச்சபைக்குள்ளும் மனிதத் தலைவர்களை தூக்கிப்பிடித்து கொண்டாடினார்கள். மிக மோசமான அருவருக்கத்தக்க பாலியல் பாவங்களில் ஈடுபட்டதை, 5 மற்றும் 6-ஆம் அதிகாரங்களில் வாசிக்கிறோம். 6-ஆம் அதிகாரத்தில் வாசிக்கிற படி, ஒருவர் மேல் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து கொண்டார்கள். திருமண உறவை அசுத்தப்படுத்தி, ஒட்டுமொத்த குடும்ப அமைப்பையே சீரழித்து வைத்திருந்தார்கள், 7-ஆம் அதிகாரத்தில் இதைப்பற்றி வாசிக்கிறோம்.
8, 9 மற்றும் 10-ஆம் அதிகாரங்களில் வாசிக்கிறபடி, புறஜாதியாரின் திருவிழா கொண்டாட்டங்களிலும், விக்கிரகங்களுக்கு படைத்தலை சாப்பிடுதலிலும் மிகப்பெரிய குழப்பம் திருச்சபையில் காணப்பட்டது. திருச்சபையில் பெண்களுக்கு தரப்பட வேண்டிய இடத்திலும் அவர்களுக்கு தெளிவில்லை, 11-ஆம் அதிகாரத்தில் அதை குறித்து வாசிக்கிறோம். திருச்சபையில் ஆவிக்குரிய வரங்களை மிகத் தவறாக பயன்படுத்தியதைக் குறித்து 12-ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். கிறிஸ்தவ குணாதிசயங்களில் மிக முக்கியமான அன்பை அவர்கள் இழந்துவிட்டதை குறித்து 13-ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம்.
அன்று அவர்கள் சமுதாயத்தில் காணப்பட்ட சாத்தானிய பழக்கவழக்கங்கள் எல்லாவற்றையும் முழுமையுமாக தங்களுடைய திருச்சபையிலே அனுமதித்திருந்தனர். எல்லாவிதமான பரவச உளறல்கள், அதனுடன் இணைந்த ஆபாசம், சிற்றின்பங்கள் மற்றும் களியாட்டுகள் என எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக தங்கள் திருச்சபையில் இறக்குமதி செய்து இருந்தனர். இது ஒரு புறஜாதி மதத்தை அங்கே தோற்றுவித்திருந்தது. உண்மையும் பொய்யும் கலந்த ஒரு குழப்பமான நிலையே அங்கு காணப்பட்டது. இன்று அதற்கு இணையாக ரோம கத்தோலிக்கத்தை சொல்லலாம், அது வேதாகமத்திலுள்ள கிறிஸ்தவமும், பாகால் வழிபாடும், அஸ்தரோத்-தாமூஸ் வழிபாடாகிய தாய்-குழந்தை வழிபாட்டையும் உள்ளடக்கியது. இதேபோன்றதொரு நிலையே கொரிந்து திருச்சபையிலேயும் காணப்பட்டது, கிறிஸ்தவமும் புறஜாதி மதமும் ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்திருந்தன.
கொரிந்து திருச்சபையின் காலத்திலிருந்த கிரேக்க-ரோம கலாச்சாரத்தை நீங்கள் பார்த்தீர்களானால், அவர்கள் பலதரப்பட்ட ஆண் மற்றும் பெண் பூசாரிகளை தங்கள் கோயில்களில் கொண்டிருந்தார்கள்; கிரேக்க கடவுள்களின் பக்தர்கள் இந்த கோவில்களுக்குச் சென்று அதில் இருந்த ஆண் மற்றும் பெண் பூசாரிகளை வழிபடுவார்கள். அப்பொழுது அந்த பக்தர்கள் பரவச (உளறல்) பேச்சுகளில் (Ecstasy) தங்களை ஈடுபடுத்திக் கொள்வது வழக்கம். பரவசநிலை (Ecstasy) என்றால் ஒருவர் தன்னுடைய உடலை விட்டு வெளியே செல்லுதல் என்று பொருள்படும். உண்மையிலேயே அவர்கள் உருண்டு பிரண்டு சுயநினைவிழந்து, ஆட்டம் போட்டு, பைத்தியம் பிடித்தவர்கள் போல் நடந்து கொள்வார்கள். உண்மையிலேயே அவர்கள் தங்கள் உடலை விட்டு வெளியேறி, வானத்துக்கு ஏறி, அவர்கள் எந்த தேவதையை வணங்கினார்களோ, அந்த தேவதையுடன் ஐக்கியம் கொள்வதாக நம்பினார்கள்; அந்த தேவதையுடன் ஐக்கியம் கொண்டபிறகு அவர்களின் தேவ பாஷையை பேசுவதாக நம்பினார்கள்.
இது அவர்கள் கலாச்சாரத்தில் வழக்கமான ஒன்று. அந்நியபாஷையை குறிக்க கொரிந்தியர் நிரூபத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ‘glōssais lalein’ என்ற வார்த்தையானது, வேதாகம ஆசிரியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதல்ல; மாறாக, புறஜாதியாரின் பரவச பேச்சுக்களை குறிக்க, கிரேக்க-ரோம கலாச்சாரத்தில் வழக்கமாக பயன்படுத்தப்பட்ட வார்த்தையாகும்; அது உடலிலிருந்து வெளியே சென்று, தேவதையுடன் கலந்து, மாய வழியில் அவர்களுடைய மொழியாகிய முட்டாள்தனமான, எந்தப் பொருளையும் தராத, புரிந்துகொள்ள முடியாத அர்த்தமற்ற வார்த்தைகளை மீண்டும் மீண்டும் பேசி உளருவதாகும்.
கிரேக்கர்கள் இந்த பரவச சமய வழிபாட்டு முறைக்கு ஈரோஸ் (eros) என்ற வார்த்தையையும் பயன்படுத்தினார்கள். கிரேக்க வேதாகமத்தில் காணப்படும் அந்த வார்த்தையானது, பாலியல் சார்ந்த அன்பை குறிக்கும் விதமாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த வார்த்தையின் அர்த்தம் அதையும் தாண்டி செல்கிறது. ஈரோஸ் என்பதன் அர்த்தம், ஆபாசதின் மீதான நாட்டம், சிற்றின்ப நாட்டம், பரவச நாட்டம், உச்சகட்ட அனுபவம் அல்லது உணர்ச்சியின் மீதான நாட்டம் என்பதையும் குறிக்கும். மேலும் அவர்கள் பின்பற்றிய சமய வழக்கமானது ஆபாசத்தை உள்ளடக்கியது. அவர்களின் சமயம், சிற்றின்பம், ஆபாசம் மற்றும் பரவசநிலையை உள்ளடக்கிய உணர்ச்சி பூர்வமானது. அந்த சமயங்களைப் பற்றி நீங்கள் படிப்பீர்கள் என்றால், அந்த கோயிலுக்குள் செல்லும் பக்தர்கள் அங்குள்ள ஆண் மற்றும் பெண் பூஜாரிகளுடன் கூட்டு பாலியல் உறவில் ஈடுபட்டதையும் நீங்கள் அறிந்துக்கொள்ள முடியும். ஆபாச, பாலியல், சிற்றின்ப மற்றும் தேவர்களின் பரவச பேச்சுகளை ஒருசேர மூட்டை கட்டிய, பாபிலோனில் தோன்றிய அந்த மாய சமய வழக்கமானது, கொரிந்திய கலாச்சாரத்திலும் இறக்குமதி செய்யப்பட்டது. இதைப் பற்றிய மேலதிக வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றன; உங்களுக்கு ஆர்வம் இருப்பின் இணையதளத்திலோ அல்லது அதை சார்ந்த புத்தகங்களிலோ படித்து அறிந்து கொள்ளுங்கள்.
பெந்தேகோஸ்தே சபையினரின் அனுபவங்கள்
கொரிந்துவில் அன்று என்ன நடந்ததோ, அதுவே இன்றைய பெந்தேகோஸ்தே திருச்சபைகளிலும் (Charismatic movements) நடந்து கொண்டிருக்கிறது. பெந்தேகோஸ்தே திருச்சபைகள் தங்களது மந்த நிலையினாலும், பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடுகளை பன்னெடுங்காலமாக உதாசீனப்படுத்தியதாலும், மிகச்சிறந்த நுணுக்கமான வேத போதனை இல்லாததாலும், எந்தவிதமான குறிப்பிடத்தக்க ஆவிக்குரிய எழுப்புதல் இல்லாததாலும், திருச்சபை மக்கள் தேவனை தொட்டு உணர விரும்பினார்கள், பரவச உணர்ச்சியை விரும்பினார்கள், அதுவே சாத்தானின் போலியான உணர்ச்சியின் நுழைவாயிலாக மாறியது. இன்று பெந்தகோஸ்தே திருச்சபையில் நடப்பது என்னவென்றால் ‘வெறுமனே கொரிந்து திரும்பி பார்க்கப்படுகிறது’. ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால், ‘simply Corinth revisited’. சபையானது புறஜாதி மத பழக்கவழக்கங்கள் உடன் கை கோர்த்திருக்கிறது. சிற்றின்ப, உணர்ச்சிபூர்வ, அனுபவம் சார்ந்த, ஆபாச சமய வழிபாட்டு முறையை அவர்கள் உருவாக்கி அதைப் பரிசுத்த ஆவியானவரின் செயல் என்று அழைக்கிறார்கள், உண்மையில் அது சாத்தானின் ஏமாற்றாகவே இருக்கிறது. பெந்தேகோஸ்தே அனுபவத்துக்குள் சென்றவர்களுடன் நீங்கள் பேசினால், அவர்களின் அனுபவம் முழுவதும் உணர்வு மற்றும் உணர்ச்சி பூர்வ அனுபவம் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
தாங்கள் அந்நியபாஷை வரத்தைப் பெற்றுக் கொண்டதாக சொல்லும் பலரது அனுபவங்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் ஜெபித்துக் கொண்டிருந்த போது பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மீது இறங்கியதால் அவர்கள் பெலனின்றி கீழே விழுந்ததாகவும், பிறகு அவர்களுக்கு புரியாத வார்த்தைகளை பரிசுத்த ஆவியானவர் அவர்கள் வாயிலே கொடுத்ததாகவும், அதை மீண்டும் மீண்டும் சொல்கையில் தங்களுக்கு ஒரு பரவசம் அனுபவம் ஏற்பட்டதாகவும், தேவன் தங்களை தொட்டதுபோல் உணர்ந்ததாகவும் குறிப்பிடுவார்கள். ஆவியில் நிறைந்து தாங்கள் கீழே விழுந்தபோது தங்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை என்றும் ஒரு மணி நேரம் கழித்து தான் சுயநினைவுக்கு வந்ததாகவும் சிலர் குறிப்பிடுவார்கள். இன்னும் சிலர், ஒரு குறிப்பிட்ட ஊழியர் வந்து தங்கள் தலையில் கைவைத்து ஜெபித்த போது உடனடியாக அந்நியபாஷை வரத்தை பெற்றுக் கொண்டதாக கூறுவார்கள்.
ஒருமுறை அந்நியபாஷை பேசும் ஊழியர் ஒருவர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவர், நானும் அந்நிய பாஷை பேச வேண்டும் என்றும் அப்படி பேசினால் தான் பரிசுத்த ஆவியானவரை பெற்றுக் கொண்டதற்கான அடையாளம் என்றும் சொன்னவர், மேலும் நான் எப்படி அந்நிய பாஷை பேச கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் எனக்கு சொன்னார். அதாவது நான் காலை 4 மணிக்கு எழுந்து முழங்கால்படியிட்டு (ஜெபிக்க கூடாதாதாம்!) வெறும் ஸ்தோத்திரம் மட்டுமே சொல்லவேண்டுமாம். அப்படி நான் திரும்பத் திரும்ப ஸ்தோத்திரம் சொன்னபிறகு அது அந்நியபாஷையாக மாறுமாம். அவரது இந்த புரிதலை நினைத்து நான் பரிதாபப் படுவதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை.
அங்கே நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்? எல்லா வகையான உணர்வுபூர்வ அனுபவங்கள், உணர்ச்சி மேலோங்கிய அனுபவங்கள், மற்றும் சிற்றின்ப அனுபவங்கள், மனதினால் ஆட்கொள்ளப்படுவதை விட, உணர்ச்சியினால் ஆட்கொள்ளப்பட்டதின் வெளிப்பாடுகள். இது புறஜாதி மதத்தில் காணப்படும் வழக்கம். கிறிஸ்துவுக்கு முன் 429 முதல் 347 வரை வாழ்ந்த பிளாட்டோ தன்னுடைய குறிப்புகளில் இதுபோன்ற புறஜாதி மதத்தின் பரவச அனுபவங்களைப் பற்றி, பக்கம் பக்கமாக எழுதியுள்ளார்.
இந்த உணர்வுகளில் எதுவும் உண்மையான கிறிஸ்தவத்திற்கு சொந்தமானதல்ல. கிறிஸ்தவத்தில் உண்மையான அந்நியபாஷையின் வரமானது, தேவன் அங்கே இருப்பதையும் தேவனுடைய ஜனங்கள் தேவனின் சத்தியத்தை பேசுகிறார்கள் என்பதைக் குறிக்கவும், அந்த பாஷை பேசிய யாராவது அங்கே இருக்கும்போது மட்டுமே ஒரு அடையாளமாக பயன்படுத்தப்பட்டது. புறஜாதி சமய பழக்கங்களுடன் குழப்பிக்கொள்ளும்படி, அது ஒருபோதும் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் தேவன் ஒன்றை செய்யும்போது, சாத்தான் அதே போன்ற போலியான ஒன்றை அறிமுகப்படுத்துகிறான், இல்லையா? அதுவே பிரச்சினையை இன்னும் அதிகரிக்கிறது.
ஆதித் திருச்சபையில் பரிசுத்த ஆவியானவரின் உண்மையான வெளிப்பாடுகளை மறைக்க, சாத்தான் போலியான வெளிப்பாடுகளையும் தரிசனங்களையும் அந்நியபாஷைகளையும் ஒரு புகை மண்டலமாக பயன்படுத்தினான். அதனால்தான், 1யோவா 4:1ல், “உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்” என்று யோவான் எழுதுகிறார். போலிகளுக்கு விழுந்து போவது மிகவும் எளிதானது. கொரிந்தியர்கள் அந்த யுகத்தின் மதங்களோடு கைகோர்க்க முடிவு செய்ததால், பாதிக்கப்பட்டார்கள்.
சாத்தான் இக்காலத்தின் அதிபதி என்றும், கீழ்படியாமையின் பிள்ளைகளுக்கு வலுவூட்டுகிறவன் என்றும் அழைக்கப்படுகிறான். ஒளியின் தூதனை போல் பிரகாசித்து தேவனைப் போல் இருக்க விரும்புகிறான். திருச்சபை போலியை வாங்கவும், உண்மையைப் பொய்யாக்கவும் விரும்புகிறான், இதுவே அவனது வேலை! ஆகவேதான் புறஜாதி மதத்தில் நாம் காணும் எல்லா போலிகளிலும், கொரிந்து திருச்சபையும் மூழ்கியிருந்தது.
இதே போன்றதொரு நிலை தான் இன்றைய பெந்தகோஸ்தே திருச்சபைகளிலும் காணப்படுகிறது. எந்த ஒரு பரவசநிலையும், உணர்ச்சி மேலோட்டமும், ஆபாசமும், சரீரத்திலிருந்து வெளியே செல்லுதல் போன்றவை எந்த வகையிலும் புதிய ஏற்பாட்டு பரிசுத்த ஆவியானவரின் செயலுடன் சம்மந்தப்பட்டவையல்ல. உண்மையில், 1கொரி 14:32 சொல்கிறது, “தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே”. அதன் அர்த்தம், தன்னை தேவனுடைய வார்த்தையை போதிப்பவன் என்று சொல்லுகிறவன், தன்னுடைய ஆவியை அடக்க வல்லவனாய் இருக்கிறான் என்பதே! ஒருவனும் தன் ஆவியை விடுவதில்லை, ஒருவனும் கட்டுப்பாட்டை இழக்கிறதில்லை, தேவன் நியமித்த படியே ஒருவனும் தன் உடலை விட்டு வெளியே செல்கிறதுமில்லை! அதனால்தான் பதினான்காம் அதிகாரத்தின் இறுதியில், சகலமும் நல்லொழுக்கமாயும் “கிரமமாயும்” செய்யப்படக்கடவது, என்று பவுல் சொல்லுகிறார். சபை கூடி வந்திருக்கும்போது, எல்லோரும் குதித்து, “உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம் பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம்பண்ணுகிறான் (14:26), இது பரிசுத்த ஆவியானவரின் வழி அல்ல! இப்படியாக புறஜாதி சமயத்தில் காணப்பட்ட குழப்பம் திருச்சபையும் விழுங்கியிருந்தது!
பாபிலோனில் காணப்பட்ட இந்த மாய மத வழிபாட்டு முறைகள், கொரிந்திய கலாசாரத்தையும் ஆட்டுவித்தது. அவர்கள் எல்லாவிதமான சடங்காச் சராசரங்களையும், பாரம்பரியங்களையும், நேர்த்திக் கடன்களையும், ஞானஸ்நானங்களையும், மிருக பலிகளையும், திருவிழாக்களையும், உபவாசங்களையும், பாவத்தை கழுவ உறைந்த நதியில் முங்குதல், முழங்காலில் பல மைல்கள் நடத்தல் போன்றவைகளையும் தோற்றுவித்திருந்தார்கள். போலியான சமய முறைகள், பரவசப் பேச்சுகள் மற்றும் தரிசனங்கள் எல்லாம் அவர்களின் வழிபாட்டு முறையின் அங்கமாக இருந்தது. இவைகளெல்லாம் கொரிந்தியரின் கலாச்சாரத்திலும் காணப்பட்டதால், இப்போது கொரிந்திய மக்கள் ஒரு சபையாக கூடி வரும்போது, இதே கூச்சலும் குழப்பமும் சபையிலும் நிலவின. நம்முடைய கலாச்சாரத்தோடு ஒப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், இன்று எப்படி புறஜாதியார் வழக்கமான ஜாதி பிசாசு, நல்ல நேரம் பார்த்தல், முகூர்த்த நேரம் பார்த்தல், ஜாதகம் பார்த்தல் போன்றவை திருச்சபை மற்றும் விசுவாசிகளின் வாழ்க்கையிலும் காணப்படுவதைப் போல, அன்று மேற்சொன்ன காரியங்கள் கொரிந்து திருச்சபையில் ஊடுருவி இருந்தன.
12-ஆம் அதிகாரத்தில், உங்களுக்கு தெரியுமா? அங்கே கூடியிருந்த மக்கள் எழுந்து நின்று அந்நியபாஷை என்ற பெயரில் இயேசுவை சபித்துக் கொண்டிருந்தார்கள் என்று, அங்கிருந்த மக்களில் சிலர் இது பரிசுத்த ஆவியா? என்று கேட்டதால்தான் “தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்று” என்று பவுல் எழுதுகிறார். கிரேக்க மத வழிபாட்டு முறைகளின் காட்டுமிராண்டித்தனம், கொரிந்து திருச்சபையின் பைத்தியக்கார போக்கிற்கு காரணமாயிற்று.
இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, இன்றைய பெந்தேகோஸ்தே திருச்சபையும் புறஜாதி மதத்தின் வழக்கங்களில் மூழ்கி இருப்பதை நம்மால் காண முடியும். தங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வராத ஒரு திருச்சபையில், நீண்ட நாட்கள் இருந்த மக்களின் உணர்ச்சியை, பரவச வழிபாட்டு முறை தூண்டி விடுவதால் போலியானது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதை சரி செய்யவே 14-ஆம் அதிகாரத்தை பவுல் எழுதுகிறார்.