தேவனுடைய வார்த்தையிலிருந்து ஆதாயம் பெறுதல்

வேதவாக்கியங்களும் கிறிஸ்துவும்

 

இந்த தொடரிலே நாம் பின்பற்றும் வரிசை அனுபவத்தை சார்ந்தது. ஒரு மனிதன் தன்னை முற்றிலும் வெறுக்காதவரை, தேவனை பின்பற்ற விரும்பமாட்டான். சாத்தானால் ஏமாற்றப்பட்டு, விழுந்துபோன சிருஷ்டியானது (மனிதன்), தன்னுடைய பாவத்தினால் குருடாக்கப்பட்ட கண்கள் திறக்கப்பட்டு, தன்னுடைய உண்மையான நிலையைப் பார்க்கும்வரை தன்னில்தானே திருப்தியடைந்தவனாகவே இருக்கிறான். நாம் உண்மையான ஞானத்தையும், பரிபூணர நல்ல தன்மையையும், உண்மையான ஆசீர்வாதங்களையும், பழுதற்ற நீதியையும் தேவனில் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியுமென்ற அறிவையும் ஏற்றுக்கொள்ளுதலையும் நம்மில் ஏற்படுத்தும் முன்னர், நம்முடைய அறியாமையையும், பெருமையையும், ஏழ்மையையும், நன்னடத்தையற்ற தன்மையையும்பற்றிய அறிவை பரிசுத்த ஆவியானவர் நம்மில் ஏற்படுத்துகிறார். நம்முடைய குறைவுள்ளதன்மையை நாம் உணர்ந்து கொள்ளும்பொழுதுதான் தெவீக பரிபூரணதன்மையை நாம் போற்ற முடியும். தேவனுடைய பரிபூரணத்தை நினைக்கும் பொழுதுதான், மனிதன் தான் உன்னதமானவரிடத்திலிருந்து முடிவில்லாத் தொலைவிற்கு பிரிக்கப்பட்டிருப்பதைக்குறித்த இன்னும் அதிகமான விழிப்புணர்வுக்கு வருகிறான். தேவன் தன்னிடத்தில் எதிர்பார்ப்பவைகளில் சிலவற்றைபற்றி அவன் அறிந்துகொள்ளும்பொழுது, அவைகளைக்குறித்த தன்னுடைய இயலாமையை அவன் புரிந்துகொள்ளும்பொழுது, தன்னை விசுவாசிக்கும் எல்லாருக்காகவும் வேறொருவர் அந்த எதிர்பார்ப்புகளையெல்லாம் செய்து முடித்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டு அந்த நற்செய்தியை வரவேற்க அவன் ஆயத்தப்படுகிறான்.

‘வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்’ என்று சொன்ன இயேசு, ‘என்னைக்குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே’ (யோவா 5:39) என்றும் சொன்னார். அழிந்துகொண்டிருக்கும் பாவிகளுக்கு ஒரே இரட்சகர், தேவனுக்கும் மனிதனுக்குமான மத்தியஸ்தர், அவர் மூலமாகவே நாம் தேவனிடத்தில் சேரமுடியும் என்று அவரைக்குறித்து அவைகள் சாட்சி பகருகின்றன. அதிசயமான அவருடைய பரிபூரணத் தன்மையையும், அவருடைய பலதரப்பட்ட மகிமையின் பணியையும், அவருடைய செய்துமுடிக்கப்பட்ட போதுமானத்தன்மையையும்குறித்து அவைகள் சாட்சி பகருகின்றன. வேதவாக்கியங்களின் மூலமே கிறிஸ்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர், கிறிஸ்துவினுடைய காரியங்களை தன்னுடைய ஜனங்களுக்கு எடுத்துக்காட்டும்பொழுது, எழுதப்பட்டிருக்கும் வேதவாக்கியங்களைத்தவிர வேறு எதையும் அவர் பயன்படுத்துகிறதில்லை. வேதவாக்கியங்களுக்கு கிறிஸ்துவே மூலப்பொருளாய் இருக்கிறார் என்பது உண்மையாயிருக்கும்பொழுது, வேதவாக்கியங்களே ‘கிறிஸ்துவின் இரகசியத்திற்கு’ (எபே 3:5) வாசல் என்பதும் அதற்கு நிகரான உண்மையே.

நம்முடைய வேதவாசிப்பும், வேதஆராய்ச்சியும் எந்த அளவிற்கு நமக்கு ஆதாயம் தருகிறது என்பது, கிறிஸ்து எந்த அளவிற்கு நமக்கு நிஜமாகிறார், மேலும் நம்முடைய இருதயத்திற்கு விலைமதிப்பற்ற பொருளாக மாறுகிறார் என்பதைப்பொறுத்து அளவிட்டுவிடலாம். ‘கிருபையில் வளருதல்’ என்பது, ‘இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவு’ (2பேது 3:18) என்பதாக வரையறுக்கப்படுகிறது, இதில் இரண்டாவது பிரிவு, ஏதோ முதலாவது பிரிவுடன் (கிருபையில் வளருதலுடன்) இணைக்கப்பட்ட ஒன்றல்ல, மாறாக அதனுடைய விளக்கம். கிறிஸ்துவை ‘அறிதலே’ (பிலி 3:10) அப்போஸ்தலனாகிய பவுலின் உயரிய ஏக்கமாகவும், நோக்கமாகவும் இருந்ததினாலே, அதற்காக அவர் எல்லாவற்றையும் கீழ்ப்படுத்தினார். ஆனால் குறித்து வைத்துக்கொள்ளுங்கள், இந்த வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிற ‘அறிவு’ என்பது உலகம் சார்ந்த பகுத்தறிவல்ல, மாறாக ஆவிக்குறியது; புத்தக அறிவல்ல, நடைமுறையானது; பொதுவான ஒன்றல்ல, தனி நபர் சம்பந்தப்பட்டது. இயற்கைக்கு அப்பாற்பட்ட இந்த அறிவை, மறுபடியும் பிறந்த இருதயத்துக்குள் பரிசுத்த ஆவியானவரே வைத்து, கிறிஸ்துவைக்குறித்த வேதவாக்கியங்களை நமக்கு விளக்கிக்காட்டி அவைகளை நடைமுறைப்படுத்துகிறார்.

ஆசீர்வதிக்கப்பட்ட ஆவியானவர் வேதவாக்கியங்களின் மூலம் கிறிஸ்துவைப்பற்றிய அறிவை ஒரு விசுவாசியின் இருதயத்தில் வைப்பது, அவனுடைய மாறுபடும் சூழ்நிலைகளுக்கேற்ப, தேவைகளுக்கேற்ப அவனுக்குப் பல வழிகளில் ஆசீர்வாதத்தைத் தருகிறது, இஸ்ரவேல் மக்களின் வனாந்திரப்பிரயாணத்தின்போது தேவன் அவர்களுக்கு கொடுத்த அப்பத்தைக்குறித்து, ‘சிலர் மிகுதியாயும், சிலர் கொஞ்சமாயும் சேர்த்தார்கள்’ (யாத் 16:17) என்று எழுதப்பட்டிருக்கிறது. மன்னாவை அவர்கள் சேர்த்ததுபோலவே, கிறிஸ்துவை நாம் பற்றிக்கொள்வதும் இருக்கிறது. நம்முடைய ஒவ்வொரு நிலைக்கும், ஒவ்வொரு சூழ்நிலைக்கும், ஒவ்வொரு தேவைக்கும், இம்மைக்கும் மறுமைக்கும் மிகவும் பொருத்தமானது, அதிசயமான கிறிஸ்து என்ற நபரிலே இருக்கிறது; அனால் நாம் அதை மெதுவாக உணர்ந்து கொள்கிறோம்; மெதுவாக அதைக்குறித்து செயல்படுகிறோம். ஒருபோதும் தீர்ந்துபோகாத பரிபூரணம் கிறிஸ்துவிலே இருக்கிறது (யோவா 1:16), நாம் அதிலிருந்து எடுத்துக்கொள்ளும்படிக்கு அது இருக்கிறது, எந்த அளவிற்கு நாம் ‘கிறிஸ்து இயேசுவில் உள்ள கிருபையில் பலப்படு’ வோம் (2 தீமோ 2:1) என்பது நம்முடைய விசுவாசத்திற்குதக்கதாக அமைகிறது (மத் 9:29).

1. ஒரு தனிப்பட்ட மனிதன் வேதவாக்கியங்களின் மூலம் கிறிஸ்து தனக்குத் தேவை என்ற வெளிப்படுத்தலைப் பெற்றுக்கொள்ளும்பொழுது அவன் ஆதாயமடைகிறான்.

மனிதன் தன்னுடைய இயற்கையான சுபாவத்தில் சுய திருப்தியடைந்தவனாகவே காணப்படுகிறான். அவனுக்கும் தேவனுக்குமிடையே எல்லாம் முற்றிலும் சரியாக இல்லை என்பதைப்பற்றி ஒரு மங்கிய உணர்வே அவனுக்கு இருக்கிறது என்பது உண்மையானாலும், தன்னுடைய அந்த வழி மூலம் தேவனைத் திருப்திபடுத்தலாம் என்று தன்னை நடத்துவதில் அவனுக்கு எந்த கடினமும் இல்லை. காயீனால் ஆரம்பிக்கப்பட்ட எல்லா மனிதருடைய சமயத்தின் அஸ்திபாரத்திலே அது இருக்கிறது, அந்த அவனுடைய ‘வழியிலே’ (யூதா 1:11) பலர் இன்னும் நடக்கிறார்கள். ‘மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்’ என்று சமய பக்தனிடம் சொல்லி அவன் பாவியாக இருக்கிறான் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. ‘நம்முடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைகளாயிருக்கிறது’ என்ற உண்மையை அவனுக்குக் காட்டும்பொழுது, அவனுடைய மாயமான முன்னேற்றமடைந்ததன்மை முதலில் அவனுக்கு கோபமூட்டுகிறது. கிறிஸ்து இந்த உலகத்தில் இருந்தபோதும் அப்படித்தான் இருந்தது. எல்லாரையும் விட அதிக பக்தியுள்ளவர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்ட யூதர்கள், எந்த உள் அறிவும் இல்லாமல், அவர்களும் ‘இழந்துபோனவர்களாக’ வல்லமையுள்ள இரட்சகரின் தேவையுள்ளவர்களாகவே இருந்தனர்.

‘பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல், சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை’ (மத் 9:12). பாவிகளின் உதவியற்ற நிலையை அவர்களுக்கு உணர்த்தி, ‘உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைவரை அதிலே சுகமே இல்லை’ ஆனால், ‘அது காயமும், வீக்கமும் நொதிக்கிற இரணமுமுள்ளது’ (ஏசா 1:6) என்பதை அவர்களைக் காணவைப்பது, வேதவாக்கியங்களை பயன்படுத்தி பரிசுத்த ஆவியானவர் செய்யும் வித்தியாசமான பணியாயிருக்கிறது. தேவனிடம் நம்முடைய நன்றியற்றதன்மை – அவருக்கு எதிரான நம்முடைய முறுமுறுப்புகள், அவரிடமிருந்து பிரிந்து செல்லுதல் – நம்முடைய அன்பு, கீழ்ப்படிதல் மற்றும் துதித்தலின் மீது அவருடைய உரிமை – அவருக்கு நாம் செலுத்த வேண்டியவைகளில் துக்ககரமான தோல்வி போன்ற நம்முடைய பாவங்களைக்குறித்து ஆவியானவர் நமக்கு உணர்த்தும்பொழுது, கிறிஸ்துவே நம்முடைய நம்பிக்கை என்பதை நமக்கு உணர்த்திக்காட்டி, அவரிடத்தில் அடைக்கலம் பெற ஓடுவதைத்தவிர, தேவனுடைய நீதியுள்ள கோபம் நிச்சயமாக நம்மேல் விழும் என்பதை தெரியப்படுத்துகிறார்.

ஆரம்பநிலை அனுபவமாகிய இந்த ஒரு தரிசனத்தோடு இது நிறுத்திக்கொள்ளப்பட வேண்டியதல்ல. ஆவியானவர் தன்னுடைய கிருபையின் பணியை மறுபிறப்படைந்த ஆத்துமாவில் அதிகமாக ஆழப்படுத்தும்பொழுது, அந்த மனிதன் தன்னுடைய அசுத்தத்தைக்குறித்தும், தன்னுடைய பாவத்தைக்குறித்தும், தன்னுடைய ஒன்றுமில்லாமையைக்குறித்தும் அதிகமாக உணர்ந்துகொள்கிறான்; மேலும், எல்லா பாவத்திலிருந்தும் தன்னைக் கழுவ அந்த விலையுயர்ந்த இரத்தம் தேவை என்பதை அறிந்து, அதற்கு அதிகமாக மதிப்பளிக்க வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்கிறான். கிறிஸ்துவை மகிமைப்படுத்த இங்கே இருக்கும் பரிசுத்த ஆவியானவர், கிறிஸ்து யாருக்காக மரித்தாரோ, அவர்கள் மோசமான, நாற்றமெடுத்த, நரகத்திற்கு பாத்திரமான தங்கள் நிலைமைக்கு, கிறிஸ்து எவ்வளவு தேவையானவர் என்பதைப் பார்க்கும்படிக்கு, அவர்கள் கண்களை மேலும் மேலும் அகலமாகத் திறப்பதின் மூலம் கிறிஸ்துவை மகிமைப்படுத்துகிறார். ஆம், வேதவாக்கியங்களை படிப்பதில் நாம் அதிக ஆதாயம் பெறுகிறோம் என்றால், கிறிஸ்து நமக்குத் தேவை என்பதைப்பற்றி அதிகம் உணர்ந்துக்கொள்வது தான்.

2. ஒரு தனி மனிதன் வேதவாக்கியங்களின் மூலம் கிறிஸ்துவைத் தனக்கு அதிகமாக உண்மையாக்கிக்கொள்ளும்பொழுது ஆதாயம்பெறுகிறான்.

இஸ்ரவேல் நாட்டின் பெருந்திரளான மக்கள் தேவன் கொடுத்த சடங்காச்சாரங்களிலும் கடமைகளிலும் வெளிப்புறமான ஒரு ஓட்டைத் தவிர வேறு எதையும் பார்க்கவில்லை, ஆனால் மறுபடியும் பிறந்த சிலர் கிறிஸ்துவையே அவைகளில் பார்க்கும் சிலாக்கியத்தைப் பெற்றிருந்தார்கள். ‘ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்’ (யோவா 8:56) என்று கிறிஸ்து சொன்னார். மோசே எகிப்தின் பொக்கிஷங்களிலும், ‘கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையையே’ அதிக பாக்கியமென்று எண்ணினான்’ (எபி 11:26). கிறிஸ்தவ உலகம் அப்படியே இருக்கிறது. பலருக்கு கிறிஸ்து ஒரு பெயர் அவ்வளவுதான், அதிகப்படியாக சரித்திரத்தில் ஒரு நபர். அவர்கள் தனிப்பட்டவிதத்திலே அவருடன் எந்த கொடுக்கல் வாங்கலும் வைத்துக்கொள்ளுகிறதில்லை, அவருடன் ஆவிக்குறிய தொடர்பிலும் மகிழுவதில்லை. அவருடைய சிறப்பைப்பற்றிய ஒரு குதூகலமான பேச்சை கேட்கும்பொழுது அவரை ஒரு உற்சாகமூட்டுபவராக, மகிழ்ச்சியூட்டுபவராக பார்க்கிறார்கள். அவர்களுக்கு கிறிஸ்து ஒரு மாயத்தோற்றம், தெளிவில்லாதவர், புரிந்துகொள்ளமுடியாதவர். அனால் ஒரு உண்மையான கிறிஸ்தவனுக்கு இது அப்படியே எதிர்மாறானது.
"நான் இயேசுவின் தொனியைக் கேட்டேன்
அதைத்தவிர எதையும் சொல்ல வேண்டாம்
நான் இயேசுவின் முகத்தைப் பார்த்தேன்
என் ஆத்துமா திருப்தியடைந்தது"

என்பதே அவனுடைய இருதயத்தின் வார்த்தையாயிருக்கிறது.

ஆனாலும் பரிசுத்தவான்களின் அந்த சொல்லிமுடியாத மகிழ்ச்சியின் பார்வையானது தொடர்ச்சியானதோ அல்லது ஒரு மாறாத அனுபவமோ அல்ல. சூரியனுக்கும் பூமிக்கும் இடைய மேகம் வருவது போல, நம்முடைய நடக்கையின் தோல்விகள் கிறிஸ்துவுடனான ஐக்கியத்தில் குறுக்கிட்டு, அவருடைய சமூகத்தின் வெளிச்சத்திலிருந்து நம்மை மறைந்துகொள்ளச் செய்கிறது. ‘என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான்; என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனிடத்தில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்’ (யோவா 14:21). ஆம், கிருபையினாலே கீழ்ப்படிதலின் பாதையில் அடியெடுத்து வைப்பவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவே தன்னுடைய வெளிப்பாட்டைத் தருகிறார். இந்த வெளிப்பாடுகள் எவ்வளவு அதிகமாக, நீளமாக நடைபெறுகிறதோ, அந்த அளவிற்கு அவர் அந்த ஆத்துமாவிற்கு அதிக உண்மையாகிறார், ‘என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது’ (யோபு 42:5) என்று யோபு சொன்னபடி நாமும் சொல்லும் வரை. கிறிஸ்து எந்த அளவிற்கு எனக்கு வாழும் உண்மையாக மாறுகிறாரோ, அந்த அளவிற்கு நான் அவருடைய வார்த்தையிலிருந்து ஆதாயம் பெறுகிறேன்.

3. ஒரு தனிப்பட்ட மனிதன் வேதவாக்கியங்களின் மூலம் கிறிஸ்துவின் பரிபூரணத்தில் தன்னை அதிகமாக ஈடுபடுத்திக்கொள்ளும்பொழுது அவன் ஆதாயம்பெறுகிறான்.

முதலாவது அவருடைய தேவையின் உணர்வு கிறிஸ்துவுக்கு நேராக ஒரு ஆத்துமாவை நடத்துகிறது, ஆனால் அவருடைய சிறப்பியல்புகளை உணர்ந்துகொள்ளுதல் அவரைப் பின்பற்றி ஓட நம்மை இழுக்கிறது. எந்த அளவிற்கு கிறிஸ்து நமக்கு உண்மையாகிறாரோ, அந்த அளவிற்கு நாம் அவருடைய பரிபூரணத்தினால் கவரப்படுவோம். ஆரம்பத்தில் அவர் ஒரு இரட்சகராக மட்டுமே பார்க்கப்படுவார், ஆனால் ஆவியானவர் தொடர்ந்து கிறிஸ்துவின் காரியங்களை எடுத்து நமக்கு காட்டும்பொழுது, அவருடைய தலையின்மீது ‘அனேக கிரீடங்கள்’ (வெளி 19:12) இருப்பதை நாம் கண்டுபிடிப்போம். ‘அவர் நாமம் அதிசயமானவர்’ (ஏசா 9:6) என்று முன்னரே அவரைக்குறித்துச் சொல்லப்படிருக்கிறது. வேதவாக்கியங்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறபடி, அவரே எல்லாமுமாய் இருக்கிறதை அவருடைய நாமம் முக்கியப்படுத்துகிறது. அவருடைய வேலைகள், அவைகளின் எண்ணிக்கை, வகைகள், போதுமானத்தன்மை அனைத்தும் ‘அதிசயமானவைகள்’. நம்முடைய ஒவ்வொரு தேவையின் நேரத்திலும் உதவிசெய்யும்படியாக, சகோதரனிலும் அதிக சொந்தமாய் சினேகிப்பவர். நம்முடைய பெலவீனத்தின் உணர்வுகளால் தொடப்பட்ட மகா பிரதான ஆசாரியர். சாத்தான் நம்மீது குற்றம்சாட்டும்பொழுது நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவர்.

நம்முடைய உன்னதமான தேவை கிறிஸ்துவுடன் தரித்திருப்பது, மரியாளைப்போல அவருடைய பாதத்தில் அமர்ந்து, அவருடைய நிறைவைப் பெற்றுக்கொள்வது. நாம் தொடர அவர் கொடுத்திருக்கிற பலத்தொடர்புகளை முடிக்கவும், அவர் கொடுத்திருக்கிற பல ஆசீர்வாதங்களை தியானிக்கவும், அவர் நம்மீது கொண்டுள்ள மாறாத அதிசயமான அன்பில் நாம் தங்கியிருக்கவும்: ‘அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பார்பதே’ (எபி 3:1) நம்முடைய முதன்மை மகிழ்ச்சியாயிருக்கவேண்டும். இதை நாம் செய்யும்பொழுது, நாம் தேவனுக்குள்ளாக நம்மில் நாமே மகிழ்ந்திருப்போம், இந்த உலகத்தின் கவர்ந்திழுக்கும் சத்தங்கள் நம்மீது கொண்டிருக்கும் கவர்ச்சியை விட்டுவிடும். என்னுடைய வாசகரே, இப்படி ஏதேனும் உங்களுடைய சொந்த உண்மையான அனுபவத்தைப்பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கிறதா? அவர் உங்கள் ஆத்துமாவிற்கு பதினாயிரங்களில் சிறந்தவராக இருக்கிறாரா? அவர் உங்கள் இருதயத்தை வென்றிருக்கிறாரா? அவருடன் தனிமையிலே தரித்திருப்பதே உங்களுடைய மேலான மகிழ்ச்சியாயிருக்கிறதா? இல்லையென்றால், உங்கள் வேதவாசிப்பும், வேத ஆராய்ச்சியும் உங்களுக்கு சிறிதளவும் பயனளிக்கவில்லை.

4. ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு வேதவாக்கியங்களின் மூலம் கிறிஸ்து விலையுயர்ந்தவராக மாறும்பொழுது அவன் ஆதாயம்பெறுகிறான்.

எல்லா உண்மையான விசுவாசிகளின் எண்ணத்திலும் கிறிஸ்து விலையேறப்பெற்றவர் (2 பேது 2:7). ‘கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணுபவர்கள்’ (பிலி 3:8). அவர்களுக்கு அவருடைய நாமம் ‘ஊற்றுண்ட பரிமளத்தைலமாயிருக்கிறது’ (உன் 1:3). தேவாலயத்தின் அதிசயமான அழகிலேயும், சாலமோனின் ஞானத்திலும், புகழிலும் காணப்பட்ட தேவமகிமையானது, உலகத்தின் கடையாந்திரங்களிலிருந்தும் அவனை சேவிக்க ஆட்களை கவர்ந்து இழுத்ததுபோல, தன்னுடைய ஜனங்களின் இருதயங்களை வல்லமையாக தன்னிடம் இழுக்கும்படியாக அது கிறிஸ்துவின் தன்னிகரற்ற சிறப்பிலே முன் குறிக்கப்பட்டது. இது முழுவதும் சாத்தானுக்கு நன்றாகத் தெரிந்திருப்பதால், அவர்கள் விசுவாசிக்கக்கூடாதபடிக்கு அவர்களின் சிந்தையை கிறிஸ்துவுக்கும் இந்த உலகத்தின் நயங்காட்டுதலுக்கும் இடையில் கட்டுவதில் அவன் ஓயாமல் ஈடுபட்டிருக்கிறான். விசுவாசிகளையும் தாக்கும்படியாக தேவன் அவனுக்கு அனுமதியளித்தாலும், ‘பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்; அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்’ (யாக் 4:7) என்றும் சொல்லியிருக்கிறார். உறுதியான தொடர்ச்சியான ஜெபத்தினாலும், உங்கள் ஆவியை கிறிஸ்துவில் அன்புகூறச் செய்வதின்மூலமும் சாத்தானுக்கு எதிர்த்து நில்லுங்கள்.

எந்த அளவிற்கு நாம் கிறிஸ்துவின் பரிபூரணத்தில் இணைந்திருக்கிறோமோ அந்த அளவிற்கு நாம் அவரில் அன்புகூறுவோம், அவரைத் துதிப்போம். கிறிஸ்துவுடனான ஒரு செயல்முறையான இணைப்பு இல்லாததே, நம்முடைய இருதயம் குளிர்ந்து போவதற்கான காரணம். எங்கே உண்மையான அனுதின ஐக்கியம் வளர்க்கப்படுகிறதோ, அங்கே சங்கீதக்காரனுடன் இணைந்து அந்தக் கிறிஸ்தவன் சொல்லுவான், ‘பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்திலே உம்மைத்தவிர எனக்கு வேறே விருப்பமில்லை’ (சங் 73:25). இதுதான் உண்மையான கிறிஸ்தவத்தின் முக்கியமான குணம், வேறுபடுத்தும் தன்மை. ஒற்றதலாமிலும், சீரகத்திலும், வெந்தயத்திலும் வேண்டுமானால் தசமபாகம் கொடுப்பதில் நியாயப்பிரமாணிகள் அதிக சுறுசுறுப்பாயிருக்கலாம், ஒருவனை யூதமாக்கத்தானாகும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரியலாம், ஆனாலும் அவர்களுக்கு கிறிஸ்துவுக்குள் தேவ அன்பில்லை. தேவன் பார்க்கும் இருதயம் இதுதான்: ‘மகனே உன் இருதயத்தை எனக்குத் தா’ (நீதி 23:26) என்பதே அவருடைய எதிர்பார்ப்பு. கிறிஸ்து நமக்கு அதிக விலையுயர்ந்தவராகும்பொழுது, நம்மில் அதிக மகிழ்ச்சியிருக்கும்.

5. வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறும் ஒருவன் கிறிஸ்துவின் மீது அதிகரிக்கும் நம்பிக்கைக் கொண்டிருக்கிறான்.

‘அற்பவிசுவாசமும்’ (மத் 14:31) உண்டு, ‘பெரிய விசுவாசமும்’ (மத் 8:22) உண்டு. ‘பூரண நிச்சயமுள்ள விசுவாமும்’ (எபி 10:22) உண்டு, ‘முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருப்பதும்’ (நீதி 3:5) உண்டு. ‘பலத்தின்மேல் பலமடைவது’ (சங் 84:7) போல, ‘விசுவாசத்தினால் ... விசுவாசத்திற்கென்று’ (ரோம 1:17) என்றும் படிக்கிறோம். நம்முடைய விசுவாசம் பலமாகவும் உறுதியாகவும் இருக்கும்பொழுது, கிறிஸ்து அதிகமாக மதிக்கப்படுகிறார். நான்கு சுவிசேஷங்களையும் மேலோட்டமாக படித்தால்கூட, இரட்சகரை உண்மையாகவே பின்பற்றி அவர்மீது உறுதியான நம்பிக்கை வைத்த வெகுச்சிலரைப்பற்றியே அவர் மகிழ்ந்தார் என்ற உண்மையை நாம் அறிந்துகொள்ள முடியும். அவரே விசுவாசத்தில் நடந்தார், வாழ்ந்தார்; நாமும் அப்படி செய்யும்பொழுது நம்முடைய தலைவருக்கு அதிகமானோரை சேர்க்கிறவர்களாக இருப்போம். எல்லாவற்றுக்கும்மேலாக, ஜெபத்துடன் நோக்கப்பட்டு, சிரத்தையுடன் நாடப்பட வேண்டிய ஒன்று உண்டு: அது நமது விசுவாசம் பெருக வேண்டும் என்பதே. ‘உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறது’ (2 தெச 1:3) என்று தெசலோனியாவில் இருந்த பரிசுத்தவான்களைக்குறித்து பவுல் சொல்ல முடிந்தது.

இப்பொழுது கிறிஸ்து அறிந்திருக்கப்படாவிட்டால், அவரை நம்பமுடியாது; மேலும் எந்த அளவிற்கு அவர் அறியப்பட்டிருக்கிறாரோ அந்த அளவிற்கு அவர் நம்பப்படுவார்: ‘உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்’ (சங் 9:10). கிறிஸ்து நம்முடைய இருதயத்திற்கு அதிக உண்மையானவராகும்பொழுது, அவருடைய பலமடங்கு பரிபூரணத்தில் நாம் அதிகமாக தரித்திருக்கும்பொழுது, அவர் இன்னும் அதிகமாக நமக்கு விலைமதிப்பற்றவராக மாறுகிறார், அவரை நம்புவது சுவாசத்தைப்போல இயற்கையாக மாறும் வரை அவரில் நம்முடைய நம்பிக்கை ஆழமாகிறது. கிறிஸ்தவ வாழ்க்கையானது விசுவாச நடக்கை (2 கொரி 5:6), இந்த வெளிபாடே ஒரு தொடர்ச்சியான முன்னேற்றத்தைக் குறிக்கிறது, சந்தேகத்திலிருந்தும் பயத்திலிருந்தும் அதிகமான விடுதலையைத் தருகிறது, அவர் வாக்குப்பண்ணியிருக்கிறபடி அவர் செயல்படுவார் என்ற முழுமையான உறுதியைத் தருகிறது. விசுவாசிக்கிறவர்கள் எல்லாருக்கும் ஆபிரகாம் தகப்பனாயிருக்கிறார், தேவன் மீது ஆழமான நம்பிக்கை என்றால் என்ன என்பதை அவருடைய வாழ்க்கையின் பதிவு எடுத்துக்காட்டுகிறது. முதலாவது, அவருடைய ஒரு வார்த்தையினாலே, மாம்சத்திற்கு நெருக்கமாயிருந்த அனைத்திற்கும் அவன் தனது முதுகைக்காட்டினான். இரண்டாவதாக, ஒரு ஏக்கர் நிலம் கூட தனக்கு சொந்தமாயிராவிட்டாலும், அவர் மீது சார்ந்துகொண்டு வாக்குத்தத்தத்தின் பூமியிலே அந்நியனாகவும் பரதேசியாகவும் வாழப் புறப்பட்டான். மூன்றாவதாக, தன்னுடைய முதிர்வயதின் வித்திலே வாக்குத்தத்தம்பண்ணப்பட்டபொழுது, அது நிறைவேறுதலிலே உள்ள தடைகளை அவன் கண்டுகொள்ளாமல், விசுவாசத்தில் உறுதியாயிருந்து தேவனை மகிமைப்படுத்தினான். இறுதியாக, ஈசாக்கை பலியிட கூப்பிட்டபோது, அவனிலே வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டியதாயிருந்தாலும், ‘மரித்தோரிலிருந்தெழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணினான்’ (எபி 11:19).

ஆபிரகாமின் சரித்திரத்தின் மூலம் எப்படி கிருபையானது அவிசுவாசம் என்ற தீய இருதயத்தை மேற்கொள்ளுகிறது, எப்படி ஆவி மாம்சத்தை வெல்லுகிறது, தேவன் கொடுக்கும், தேவன் நடத்தும் இயற்கைக்கு அப்பாற்பட்ட விசுவாசமாகிய இந்த கனியானது எப்படி நம்மைப்போல பாடுள்ள மனுஷனால் வெளிப்படுத்தப்பட்டது என்று காட்டப்படுகிறோம். இது நம்மை உற்சாகப் படுத்துவதற்காகவும், விசுவாசத்தின் தகப்பன் மூலமாக அவர் நடப்பித்ததை நம்மிலும் செயல்படுத்துவது தேவனுக்கு மகிழ்ச்சியைத் தருவதால் அதற்காக ஜெபம் பண்ணும்படிக்கும் இது பதிவுசெய்யப்பட்டுள்ளது. விசுவாசத்தைக் காண்பிப்பதைத்தவிர, எதுவும் அவரை பிரியப்படுத்தவோ, கனப்படுத்தவோ அல்லது மகிமைப்படுத்தவோ முடியாது, அவர்களுடைய எல்லா இருதயத்தோடும் அவரை நம்பத்தக்கதாக அவர் கொடுத்திருக்கிற எல்லா காரணங்களுக்காகவும் அவர்களிடமிருந்து நம்பிக்கையையும் சிறுபிள்ளை போன்ற விசுவாசத்தையுமே அவர் எதிர்பார்க்கிறார். கிறிஸ்துவில் அதிகரிக்கும் விசுவாசத்தைத்தவிர, வேறு எதுவும் நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம் என்பதற்கு ஆதாரமாக முடியாது.

6. ஒரு தனிப்பட்ட மனிதன் வேதவாக்கியங்களிலிருந்து கிறிஸ்துவைப் பிரியப்படுத்த ஆழமான ஆசையைப் பெற்றுக்கொள்ளும்பொழுது அவன் ஆதாயம்பெறுகிறான்.

‘கிரயத்திற்கு கொள்ளப்பட்டீர்கள், நீங்கள் உங்களுடையவர்களல்ல’ (1 கொரி 6:19,20) என்பதே ஒரு கிறிஸ்தவன் முதலாவது புரிந்துகொள்ள வேண்டிய மிகப்பெரிய உண்மை. இதன்பிறகு, ‘பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்திருக்கிறவருக்கென்று பிழைத்திருக்க’ (2கொரி 5:15) வேண்டும். அன்பு அதன் பொருளை பிரியப்படுத்த மகிழ்கிறது, எந்த அளவிற்கு நம்முடைய அன்பின் உணர்வுகள் கிறிஸ்துவை நோக்கிச் செல்கிறதோ அந்த அளவிற்கு அவருடைய வெளிப்படுத்தப்பட்டிருக்கிற சித்தத்தின் படி அவருக்கு கீழ்ப்படிந்து அவரை கனப்படுத்த நாம் ஆவலுள்ளவர்களாயிருப்போம். ‘ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்’ (யோவா 14:23). இது மகிழ்ச்சியான உணர்ச்சியின்போதோ அல்லது வெறும் வார்த்தையின் தியானத்தினாலோ அல்ல, மாறாக, அவருடைய நுகத்தின் மீதான உண்மையான நம்பிக்கை மற்றும் அவருடைய நன்னெறிகளுக்கு ஒரு நடைமுறையான அற்பணிப்பின் மூலம் கிறிஸ்து மகிமைப் படுத்தப்படுகிறார்.

குறிப்பாக இந்த நேரத்தில்தான் நம்முடைய விசுவாசத்தின் உண்மைத்தன்மை சோதிக்கப்பட்டு நிரூபிக்கப்படுகிறது. அவருடைய சித்தத்தை அறிந்துகொள்ள எந்த முயற்சியும் எடுக்காதவர்கள் அவர் மீது உண்மையான விசுவாசம் கொண்டிருக்கிறார்களா? ராஜாவின் வெளிப்படுத்தல்களை வாசிக்க மறுக்கும் அவருடைய பிரஜைகள் அவருக்கு எத்தனை அவமதிப்பைக் கொண்டுவருகிறார்கள்! எங்கே கிறிஸ்துவில் விசுவாசம் இருக்கிறதோ அங்கே அவருடைய கட்டளைகளில் மகிழ்ச்சி இருக்கும், கட்டளை மீறப்படும்பொழுது அங்கே துக்கம் இருக்கும். நாம் தேவனை துக்கப்படுத்தும்பொழுது, நம்முடைய தோல்வியிலே நாம் மனஸ்தாபப்படுவோம். நான் பாவத்தை வெறுக்காமல், என்னுடைய பாவங்களே தேவ குமாரன் தன்னுடைய விலைமதிப்பில்லா இரத்ததை சிந்தும்படி செய்தது என்று நம்புவது முடியாததாகிவிடுகிறது. கிறிஸ்து பாவத்தின் கீழ் மனவேதனை அடைந்திருப்பாரென்றால், நாமும் மனவேதனையடைந்திருப்போம். எந்த அளவிற்கு அந்த மனவேதனை உண்மையாயிருக்கிறதோ, அந்த அளவிற்கு நாம் சிரத்தையுடன் அவரை துக்கப்படுத்தும் காரியங்களிலிருந்து விடுதலைப்பெற நாம் கிருபையையும், நம்முடைய ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகரை மகிழ்ச்சிப்படுத்தும் காரியங்களைச்செய்ய பெலத்தையும் நாடுகிறவர்களாக இருப்போம்.

7. வேதவாக்கியங்கள் ஒரு தனிப்பட்ட மனிதனை கிறிஸ்துவின் வருகைக்காக ஏங்க வைக்கும்பொழுது அவன் ஆதாயம்பெறுகிறான்.

தன்னுடைய காரணப்பொருளை காண்பது ஒன்றே அன்பை திருப்திபடுத்தும். இப்பொழுதும் நாம் கிறிஸ்துவை விசுவாசத்தின் மூலம் பார்த்தாலும், அது இன்னும் ‘கண்ணாடியில் நிழலாட்டமாகத்தான்’ இருக்கிறது. ஆனால் அவருடைய வருகையின்போது அவரை ‘முகமுகமாய்ப் பார்போம்’ (2கொரி 13:12). அதன் பிறகு, ‘பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால் நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருகிறேனோ அங்கே அவர்களும் என்னோடே கூட இருக்க விரும்புகிறேன்’ (யோவா 17:24) என்ற அவருடைய சொந்த வார்த்தைகள் நிறைவேறும். இந்த சித்தம் மட்டுமே அவருடைய இருதயத்தின் வாஞ்சையை முழுவதுமாக நிறைவேற்றும், இந்த சித்தமே அவரால் விடுவிக்கப்பட்டவர்களின் வாஞ்சையையும் நிறைவேற்றும். அதன் பிறகு தான், ‘அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக்கண்டு திருப்தியாவார்’ (ஏசா 53:11); மேலும், ‘நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உம்முடைய சாயலால் திருப்தியாவேன்’ (சங் 17:15).

கிறிஸ்துவின் வருகையின்போது நாம் எல்லாப் பாவங்களையும் விட்டு நீங்கியிருப்போம். தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் தேவ குமாரனின் சாயலுக்கு ஒப்பாக முன் குறிக்கப்பட்டிருக்கிறார்கள், கிறிஸ்து தன்னுடைய ஜனங்களைத் தன்னிடமாக பெற்றுக்கொள்ளும்பொழுது மட்டுமே அந்த தேவனுடைய திட்டம் நிறைவேறும். ‘அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருகிறோம்’ (1யோவா 3:2). அவருடனான ஐக்கியம் மீண்டும் உடையாது, மீண்டும் நம்முடைய உள்ளான தீமைக்காக மனஸ்தாபப்படவோ அல்லது மன வருத்தமைடையவோ போவதில்லை; மீண்டுமாக நாம் அவிசுவாசத்தினாலே துன்பப்படுத்தப்படப் போவதில்லை. அவர் தன்னுடைய திருச்சபையைக் ‘கரைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல், பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வார்’ (எபே 5:27). அந்த மணிப்பொழுதுக்காக நாம் ஆவலுடன் காத்திருக்கிறோம். நம்முடைய இரட்சகருக்காக நாம் அன்புடன் பார்த்திருக்கிறோம். வருகிறவருக்காக நாம் அதிகமாக காத்திருக்கும்பொழுது, அவருடைய வருகையின் உண்மையான எதிர்பார்ப்பிலே நம்முடைய விளக்கை இன்னும் அதிகமாய் தூண்டுகிறவர்களாய், வேதவாக்கியங்களின் அறிவிலிருந்து நாம் ஆதாயம் பெறுகிறோம் என்பதற்கு இன்னும் அதிகமாய் அதாரம் சேர்க்கிறவர்களாயிருப்போம்.

இதை எழுதியவரும் வாசிப்பவரும் தேவனுடைய பிரசன்னத்திலே உண்மையாய்த் தங்களை ஆராய்ந்து பார்க்கக்கடவர்கள். பின்வரும் கேள்விகளுக்கு உண்மையான பதிலைத் தேடக்கடவோம். கிறிஸ்து தேவை என்ற ஆழமான உணர்வு நமக்கு இருக்கிறதா? அவரே நமக்கு பிரகாசமானவராகவும், வாழ்க்கையின் உண்மையாகவும் இருக்கிறாரா? அவருடைய பரிபூரணத்தில் தரித்திருப்பது நமக்கு அதிகரிக்கும் மகிழ்ச்சியைத் தருகிறதா? அனுதினமும் கிறிஸ்து நமக்கு மதிப்புமிக்கவராக மாறுகிறாரா? நாம் எல்லாவற்றுக்காகவும் உறுதியுடன் அவரை நம்பும்படிக்கு நம்முடைய விசுவாசம் அவரில் வளர்கிறதா? நம்முடைய வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் அவரை உண்மையாகவே மகிழ்விக்க நாடுகிறோமா? நிச்சயமாக அடுத்த இருபத்தினான்கு மணி நேரத்துக்குள் அவர் வருவார் என்பதை அறிந்திருந்து, அவரில் மகிழ்ச்சியாயிருக்கும்படிக்கு அவருக்காக பொறுமையுடன் காத்திருக்கிறோமா? இந்த கூர்மையான கேள்விகளுக்காக பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயங்களை ஆராயக்கடவர்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.