பாடல் : J.S. அற்புதராஜ் மர்காஷிஷ்
பாடல் பிறந்த கதை
பேரொளி வீசிடும் தூயக் கண்கள்
என்னை நோக்கிப் பார்க்கின்றன – தம்
காயங்களையும் பார்க்கின்றன
தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே
தீய வழியில் என் கால்கள் சென்றால்
தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே
ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்
வீண் பெருமை என்னில் இடம் பெற்றால்
முள்முடி பார்த்திட ஏங்குகின்றார்
வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்
தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட
கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார்
அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்
கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்
கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்
’காலம் கடந்த கிறித்தவப் பாடல்கள்’ என்றாலே சில பிரபலங்களின் பெயர்கள் தான் ஞாபகத்திற்கு வரும். அத்தகையோரின் வரிசையில் இல்லாத, ஆனால் அநேகருடைய உள்ளத்தில் கிறிஸ்தவ இராஜ்ஜியத்தை தனது பாடல்களின் வழியாகக் கடத்தியவர் சகோ. மர்காஸிஸ் அற்புதராஜ் அவர்கள்.
அவர் எழுதின ’சிலுவை நாதர் இயேசுவின்’ மற்றும் ’அர்பணித்தேன் என்னை முற்றிலுமாய்’ என்ற இரு பாடல்களும் காலம் கடந்தவை என்றால் மிகையாகாது. இந்த இரு பாடல்களையும் கிறித்தவ உலகத்திற்கு அர்ப்பணிக்கும் போது அவர்கள் அருகில் இருந்தது தேவனுடைய கிருபையே.
ஒரு வானொலி நிகழ்ச்சிக்காக 1978 ம் ஆண்டு கிறிஸ்தவ கலைத் தொடர்பு நிலையத்திலே முதலாவது பதிவு செய்யப் பட்டது தான் ‘சிலுவை நாதர் இயேசுவின்’ என்ற பாடல். இந்த பாடலை ஒலிப் பதிவு செய்ய நாங்கள் தயார் ஆகும் போது இந்த பாடலை எவ்வாறு ஒரு தரிசனத்தின் மூலமாக கொடுத்தார் என்று விவரித்தார்.
சிலுவையில் இயேசு ஆணிகளால் கடாவப் பட்டு இருக்க ஒரு முரடன் அவரைத் தன் முரட்டுக் கைகளால் அந்த சிலுவையை அதிகமாக அசைப்பதைக் கண்டாராம். இதனால் இயேசு அதிகமாக கஷ்டப் படுவதைக் கண்டு இந்த தரிசனத்தைக் கண்ட சகோ அற்புதராஜ் அதிகமாகத் துடித்துப் போனாராம். அப்போது இயேசு சொன்ன வார்த்தைகளே பாடல் கவிகளாக மாறினது. இந்த பாடலுக்கான முகவுரையுடனும், ஜெபத்துடனும் இந்த பாடலை ஒலிப் பதிவைச் செய்யும் போது எங்கள் எல்லாரையும் கல்வாரிக்கு அழைத்துச் சென்றதாக இருந்தது.
FMPB க்காக ஒரு இடைவெளிக்குப் பின்னர் அறைகூவல் வானொலி நிகழ்ச்சியைத் தயார் செய்த போது தான் ’அர்ப்பணித்தேன்’ என்ற பாடல் முதலாவதாக ஒலிச் சுருளிலே பதிவு செய்யப் பட்டது. இந்த பாடலை தூத்துக்குடி கத்தோலிக்க ஒலிப் பதிவு நிலையத்தில் 1980 ஆம் ஆண்டு ஒலிப் பதிவு செய்யும் போது தமிழகத்தில் இருந்து அருட்பணியாளர்கள் இந்தியா முழுவதும் செல்ல வேண்டும் என்ற ஆவலுடன் தான் இந்த பாடல் எழுதப்பட்டது என்ற முகவுரையுடன் இந்தப் பாடலும் பதிவு செய்யப் பட்டது.
அற்புதராஜ் ஐயாவின் பெருவாரியான பாடல்களுக்கு பின்னிசை அமைத்தது திரு. விக்டர் தங்கதுரை அவர்கள்.