பிற பாடல்கள்
பாடல்: தயானந்தன் பிரான்சிஸ்

பாடல் பிறந்த கதை

 1. ஆயிரம் ஆயிரம் பாடல்களை
ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களே!
யாவரும் தேமொழிப் பாடல்களால்
இயேசுவைப் பாடிட வாருங்களே!
 
              பல்லவி
அல்லேலூயா! அல்லேலூயா! - என்று
எல்லாரும் பாடிடுவோம்!
அல்லலில்லை! அல்லலில்லை!
ஆனந்தமாய்ப் பாடிடுவோம்!
 
2. புதிய புதிய பாடல்களைப்
புனைந்தே பண்களும் சேருங்களே!
துதிகள் நிறையும் கானங்களால்
தொழுதே இறைவனைக் காணுங்களே!
                - அல்லேலூயா!
 
3. நெஞ்சின் நாவின் நாதங்களே
நன்றி கூறும் கீதங்களாம்!
மிஞ்சும் ஓசைத் தாளங்களால்
மேலும் பரவசம் நாடுங்களே!
                - அல்லேலூயா!
 
4. எந்த நாளும் காலங்களும்
இறைவனைப் போற்றும் நேரங்களே!
சிந்தை குளிர்ந்தே ஆண்டுகளாய்ச்
சீயோனின் கீதம் பாடுங்களே!
                - அல்லேலூயா!

கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின் பொதுக் காரியதரிசியாகத் திருப்பணியாற்றிய மறைதிரு. டாக்டர். தயானந்தன் பிரான்சிஸ், ஆண்டவர் தன் வாழ்வில் தந்த அநேக ஆசீர்வாதங்களுக்காகவும், பாதுகாப்புக்காகவும், அவரைப் போற்றிப் புகழ்ந்து, நன்றி செலுத்தும் வண்ணம், அச்சூழ்நிலைகளின் அடிப்படையில், இசைப்பாடல்கள் பலவற்றை இயற்றியிருக்கிறார். ஒருமுறை சென்னையிலுள்ள அவரது நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தார்.  அவரது நண்பரும் அவர் மனைவியாரும் தங்கள் குழந்தைகளை டாக்டர். தயாவுக்கு அறிமுகம் செய்தனர்.  பின்னர் தங்கள் கடைக்குட்டியைப் பார்த்து, டாக்டர். தயாவுக்கு ஒரு பாட்டுப் பாடிக் காட்டும்படி கேட்டுக் கொண்டார்கள்.  அந்தக் குழந்தை உடனே ஒரு பாடலைப் பாடியது.

''மிக நன்றாய்ப் பாடினாய்!'' என்று டாக்டர். தயா தன் பாராட்டுக்களைத் தெரிவித்து, அவர்களிடமிருந்து விடைபெற்றார். டாக்டர். தயா அன்று அவர்களிடம் பகிர்ந்து கொள்ளாத உண்மை என்னவெனில், அப்பாடல் அவர் இயற்றிய இப்பாடலாகும்.  திருமறையின் சங்கீதப் புத்தகப் பாடல்களின் சாயலில் அவர் இப்பாடலை எழுதினார்.

தமிழ் நாடு இறையியல் கல்லூரியின் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்காக, டாக்டர். தயா இப்பாடலை எழுதினார்.  அவரது நண்பரும், இசைவல்லுனரும், அக்கல்லூரியின் பேராசிரியருமான டாக்டர். மெ. தாமஸ் தங்கராஜ், இப்பாடலுக்கு இனிய இசை அமைத்துக் கொடுத்தார்.  இந்த இசையமைப்பின் காரணமாக இப்பாடல் வெகுவிரைவில் பல இடங்களில் பரவியது.  திருமறைத் தொடர்கள், திருமறை சார்ந்த கருத்துக்கள் காரணமாகவும் இப்பாடல்  செல்வாக்குப் பெற்றிருக்க வேண்டும்.  இப்பாடலைச் சகோதரி பி. வசந்தா இசைத்தட்டில் பாடியிருக்கிறார்கள்.

மற்றுமொரு முறை, டாக்டர். தயா கிறிஸ்தவக் கலைத் தொடர்பு நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நாட்களில், 3.11.1970 அன்று, சென்னை அண்ணா சாலையில் தனது ஸ்கூட்டரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.  அப்போது குறுக்கே ஒரு சைக்கிள் வந்ததால், பிரேக்கை அழுத்தி வண்டியை நிறுத்த முயன்றபோது, அவர் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.  அப்போது அவருக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த பேருந்தில் அடிபட்டு நொறுங்கிவிடாமல், மயிரிழையில் உயிர் தப்பினார்.

பல நாள் சிகிச்சைக்குப் பிறகு, இரண்டு மாத காலம் மஞ்சள் காமாலை வியாதியினால் பாதிக்கப்பட்டு, மூன்று மாதகாலம் படுத்த படுக்கையானார்.  அப்படுக்கையில் அவர் சுகம் பெற்று வந்த நாட்களில், ஆண்டவருக்கு நன்றி சொல்லிக் கீழ்க்கண்ட பாடலை இயற்றினார்:

எடுப்பு
உன்னைப் போல இயேசுவே - உலகிலே
என்னைத் தாங்குவார் யாரே?
 
தொடுப்பு
அன்னை வயிற்றில் இருந்த நாள்முதல்
ஆளாய் வாழும் காலம் முழுதும்
முன்னும் பின்னும் சூழ்ந்தே அன்பால்
மோசம் நாசம் யாவிலும் காக்கும்!
                - உன்னை
 
1. விரைந்து ஓடியே விபத்தில் சிக்கி நான்
வீழ்ந்து மடியும் வேளை வந்தாய்;
பரிந்தே என்னைப் பற்றி யெடுத்தாய்;
பசுமை வாழ்வும் பலமும் தந்தாய்!
                - உன்னை
 
2. கொடிய நோயின் பிடியில் சிக்கி நான்
குமுறி யழுத வேளை வந்தாய்;
மடிய மாட்டாய் மகனே என்றாய்;
மனதில் உடலில் நலனைத் தந்தாய்!
                - உன்னை.

இப்பாடலுக்குத் திருவாளர்கள் பீட்டர்- ரூபன் இசையமைத்து, CACS நிறுவனத்தில் திரு. J.M. ராஜு பாட, ஒலிப்பதிவானது. FEBA மற்றும் CACS இசை நிகழ்ச்சிகளில் இப்பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.  மேலும் அருள்திரு. எசேக்கியேல் ஜார்ஜ் இப்பாடலைப் பல இடங்களிலும் பாடிப் பிரபல்யப்படுத்தினார்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.