பாடல் பிறந்த கதை
1983-ம் ஆண்டு. "ராபர்ட் சார்'' என்று தன் மாணவர்களால் அன்பாய் அழைக்கப்படும் பேராசிரியர் கே.எம். இராபர்ட் சாம்ராஜ், நாசரேத்திலிருந்து டோனாவூருக்குப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். மிஷனரி வாஞ்சை மிகுந்த இராபர்ட், இந்திய அருட்பணி இயக்கத்தின் முன்னேற்றப் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அன்றும், மிஷனரிப் பிள்ளைகளின் கல்வித் தேவையை சந்திக்க டோனாவூரில் அமைக்கப்பட்ட சந்தோஷ வித்யாலயாவிற்குச் சென்று ஊழியம் செய்யவே, இப்பயணத்தை மேற்கொண்டார். பேருந்து அலைகடலின் ஓடம்போல் அசைந்தசைந்து சென்றது. பேருந்தின் சீரான ஓட்ட அசைவு தந்த தாளத்துடன், சாம்ராஜின் உள்ளம் இணைந்தது. "அலை அலையாய், அலையினூடே'' என்ற வார்த்தைகள் அவர் உள்ளத்தில் துள்ளி எழுந்தன. மீன் பிடிக்கச் சென்ற சீடரின் நிலையும், வலை கிழியத்தக்க மீன்களும் அழகிய காட்சியாய், மிஷனரி தாகம் நிறைந்த சாம்ராஜின் உள்ளத்தில் தோன்றியது.
இந்த ஆத்தும ஆதாயத்தின் அருமையான காட்சி மனத்திரையில் நிற்க, உற்சாகம் பொங்கும் உள்ளம் வார்த்தைகளைச் சொல்ல, சாம்ராஜின் கையிலிருந்த குறிப்பேட்டில் இப்பாடல் உருவெடுத்தது. பயணம் முடிந்தபோது பாடலும் முடிவுற்றது. ஊழியத்தை முடித்து வீடுவந்த சாம்ராஜ், அன்றிரவே பாடலின் ராகத்தையும் அமைத்தார். பின்னர், மதுரையில் நடைபெற்ற "இன்னிசையில் நற்செய்தி'' விழாவில், தன் மனைவியுடன் சேர்ந்து பாடி, இப்பாடலை அரங்கேற்றம் செய்தபோது, அலைகடலின் ஆரவாரமும், அற்புதரின் ஆசியும் ஒருங்கே அசைவாடின.
நூற்றுக்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ள சகோதரர் இராபர்ட் சாம்ராஜ், 29.01.1953 அன்று மார்த்தாண்டத்தில் பிறந்தார். காலஞ்சென்ற கிராம அதிகாரி K. மனோஸ் இவரது தந்தை. இவரது தாயார் செல்லம்மாள் ஒரு பள்ளி ஆசிரியை. ஐந்து பிள்ளைகளடங்கிய பெரிய குடும்பத்தில் வளர்ந்த சாம்ராஜ், சிறு வயது முதல் இசையில் நாட்டமுள்ளவராக இருந்தார். ஆலயப்பாடகர் குழுவில் உற்சாகமாகப் பாடுவார். ஹவாய் கிட்டார் மற்றும் ஸ்பானிஷ் கிட்டார் வாசிப்பதிலும் சிறந்து விளங்குகிறார்.
இசைத்துறையில் தாலந்துகள் படைத்த வாலிபன் சாம்ராஜுக்கு, இசை மீட்டும் குழுவில் சேர்ந்து துரிதமாகப் பெரும் செல்வம் திரட்டும் வாய்ப்புகள் வந்தன. ஆனால், ஆண்டவரின் பணிக்கெனத் தன்னையும் தன் தாலந்துகளையும் அர்ப்பணித்த இராபர்ட், அவற்றை நிராகரித்தார். தமது பிள்ளைகளின் அர்ப்பணத்தைக் கனப்படுத்தும் ஆண்டவர், பாடல் வரம் பெற்ற வசந்த குமாரி (பாஹினி) யை , 24.08.1977 அன்று மணம் செய்யக் கிருபை செய்தார். அது முதல் அவர்கள் இசைத் தம்பதியராக, இசைவழி இறைப்பணியைத் தொடர்ந்தனர். தேவன் அவர்களுக்கு பினிமைலின் என்ற மகளையும், ஜெப்லின் சாம்னோஜ் என்ற மகனையும் தந்து அவர்கள் குடும்பத்தை ஆசீர்வதித்திருக்கிறார்.
இன்றும் ஆண்டவரின் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்படும் இக்குடும்பம், மார்த்தாண்டம் CSI திருச்சபையின் அங்கமாக, திருச்சபையின் ஊழியங்களையும் உற்சாகப்படுத்தி வருகிறது. பல ஒலி நாடாக்களைக் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு அளித்த இவர்கள், FEBA வானொலி, மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் இன்னிசை வழி நற்செய்திப் பணியைச் செய்து வருகிறார்கள். இவர்களது "இன்னிசையில் இயேசு" என்ற ஒலிநாடாவில் இடம் பெற்றுள்ள இப்பாடல், இன்றும் அநேகரை ஆத்தும ஆதாயப்பணிக்கென அழைக்கின்றது.