பாடல்: முனைவர். சார்லஸ் மணி
பாடல் பிறந்த கதை
ஒவ்வொரு மனிதனும் சகோதரன்
ஒவ்வொரு மனிதனும் சகோதரன் என் சகோதரன்
1. வறுமையில் வாழ்பவன் என் நண்பன்
வருத்தத்தில் இருப்பவன் சகோதரன் (2)
அல்லல் படுபவன் என் நண்பன்
ஆபத்தில் இருப்பவன் சகோதரன்
- காரணம் அவனும் மனிதன்
2. பிறர் குலம் சேர்ந்தாலும் என் நண்பன்
பிற இனம் சேர்ந்தாலும் சகோதரன் (2)
பிற மொழி பேசினாலும் என் நண்பன்
பிற மதம் சார்ந்தாலும் சகோதரன்
- காரணம் அவனும் மனிதன்
3. அழகை இழந்தவன் என் நண்பன்
அறிவை இழந்தவன் சகோதரன் (2)
ஊனமாய் இருப்பவன் என் நண்பன்
ஊமையாய்ப் பிறந்தவன் சகோதரன்
- காரணம் அவனும் மனிதன்
1974 ஆம் ஆண்டு, பெங்களுரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கின் தலைப்பு: “Every man is my brother” இக்கருத்தரங்கை நடத்திய திரு.சேவியர் பிரான்சிஸ் என்பவர், முனைவர் திரு.சார்லஸ் மணியிடம், இத்தலைப்பில் ஒரு பாடல் ஒன்றை எழுதி இசையமைக்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க, “ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்” என்ற பாடலை எழுதி இசையமைத்தார். சத்தி விக்டர் இசை இயக்கத்தில், B.S.சசிரேகா, கோவை சவுந்தராஜன் பாடி வெளிவந்தது. 1976 ஆம் ஆண்டு, சென்னை வியாசர்பாடியில் நடைபெற்ற ஒரு கட்டிட திறப்பு விழாவில், முனைவர் திரு.சார்லஸ் மணி அவர்கள், இந்தப் பாடலை இறைவணக்கப் பாடலாகப் பாடியபோது, அவ்விழாவிற்கு தலைமையேற்ற முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், இந்தப் பாடல் வரிகள் அடங்கிய புத்தகத்தை மேடையிலேயே வாங்கி, அவருடைய தலைமை உரையில், “இந்தப் பாடலில் என்ன கூறப்பட்டுள்ளதோ, இதுதான் மதம்” என்று முழுக்க முழுக்க இந்தப் பாடலைப் பற்றியே பேசினார்.