சந்தோஷம் பொங்குதே
பாடல்: மைக்கேல்
பாடல் பிறந்த கதை
சந்தோஷம் என்னில் பொங்குதே - அல்லேலூயா
இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கிப் பொங்குதே
பாவபழியதை சுமந்தலைந்தேன்
அவர் அன்புக் குரலே
அழைத்தது என்னையே
அந்த இன்ப நாளில்
எந்தன் பாவம் நீங்கிற்றே (2)
உத்தரவுடன் வருவான்
ஆனால் இயேசு கைவிடார்
தானாய் வந்து இரட்சிப்பார்
இந்த நல்ல இயேசு எந்தன்
சொந்தமானாரே (2)
பாதாளத்தில் அழிந்திடுவார்
நானோ பரலோகத்தில்
நாளும் பாடல் பாடிடுவேன்
என்னில் வாழும் இயேசுவோடு
என்றும் வாழுவேன் (2)
DME படிப்பை வெற்றியுடன் முடித்து, தன் விடுமுறை நாட்களைக் கழிக்கத் தன் அக்கா வீட்டிற்குச் சென்றான், 20-வயது நிரம்பிய வாலிபன் மைக்கேல். அக்காவின் கணவர் மறைத்திரு. D. Williams பட்டுக்கோட்டை CSI ஆலயப் போதகர். அந்நாட்களில் பிரதரன் அசெம்பிளி ஊழியர்கள் பாண்டிச்சேரியிலிருந்து அங்கு வந்து உயிர் மீட்சிக் கூட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தனர்.
மிஷினரி ஜான் கொடுத்த தேவசெய்தியின் மூலம் ஆவியானவர் பேச, 18.9.1969 அன்று மைக்கேல் இயேசுவைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டான்.
பின்னர் மைக்கேல் வேலையிலமர்ந்த போது, ஆண்டவரின் அழைப்பைத் தன் உள்ளத்தில் உணர்ந்தார். எனவே, அவருடைய ஊழியம் செய்ய, 1971-ம் ஆண்டு இந்திய இல்லந்தோறும் நற்செய்தி இயக்கத்தில் முழுநேரப் பணியாளனாகச் சேர்ந்தார்.
1972-ம் ஆண்டு இவ்வியக்கத்தின் முன்னோடி மிஷனரியாகத் தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஹரூர் சென்றார். அங்கிருந்த சிலோன் இந்தியப்பொது மிஷன் ஆலயத்தை மையமாகக் கொண்டு இல்லந்தோறும் நற்செய்தியை அறிவித்தார்.
அந்நாட்களில் அத்திருச்சபையின் ஞாயிறுபள்ளிப் பொறுப்பும் மைக்கேலிடம் கொடுக்கபப்பட்டது. அந்த ஞாயிறு பள்ளிப் பிள்ளைகள் உற்சாகமாகப் பாடுவதைப் பார்த்து, அவர்களுக்குத்தான் அறிந்த பாடல்களைக் கற்றுக் கொடுக்க முயன்றார்.
ஆனால் அவையனைத்தும் அப்பிள்ளைகளுக்கு முன்னரே தெரிந்திருந்தது. எனவே, அப்பிள்ளைகளை உற்சாகப்படுத்த, புதுப்பாடல்களை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானார்.
இந்நிலையில் தனது இரட்சிப்பின் அனுபவத்தையே தன் சாட்சிப் பாடலாகவும், அப்பிள்ளைகளுக்கு சவால் அழைப்பாகவும் இருக்க எண்ணி, இப்பாடலை இயற்றினார்.
பிள்ளைகள் புரிந்து பாடக்கூடிய எளிய நடையில் எழுதப்பட்;ட இப்பாடலின் 4 சரணங்களையும் சகோதரர் மைக்கேல் ஒரே நாளில் இயற்றி முடித்தார். இப்பாடலின் ராகத்தையும் அவரே அமைத்தார். அடுத்த ஞாயிறே, மைக்கேலின் ஆர்மோனியப் பின்னிசையுடன் ஞாயிறு பள்ளியில் இப்பாடல் அரங்கேற்றமானது. இந்த உற்சாகப் பாடலின் மூலம், பிள்ளைகள் இரட்சிப்பின் சந்தோஷத்தை அறிந்து கொண்டனர்.
பின்னர்IEHC-ன் வருடாந்திர கன்வென்ஷன் கூட்டங்களில் மிஷனரிகள் இப்பாடலைப் பாடினர்.
1974-ம் ஆண்டு IEHC நாகர்கோவில் பகுதிகளில் தங்கள் நற்செய்திப் பணியைச் செய்து வந்தனர். அக்குழுவில் IEHC-ன் முக்கிய பாடகரான சகோதரர் டி.தேவ பிச்சை முன்னோடி மிஷனரியாக இருந்தார். அந்த ஆண்டின் CSI திருமண்டல கன்வென்ஷன் கூட்டங்களின் பாடல் பொறுப்பாளர் புதுப்பாடல்களைத் தேடி தேவபிச்சையிடம் வந்தார்.
சகோதரர் தேவபிச்சை அவருக்குப் பாடிக்காட்டிய பாடல்களில் இப்பாடலும் ஒன்று. இப்பாடலைத் தெரிந்தெடுத்து திருமண்டல கன்வென்ஷன் கூட்டங்களில் பாடினர்.
பின்னர் 1975-ம் ஆண்டு, ஆசீர்வாத இளைஞர் இயக்க பிளெஸ்ஸோ முகாமிலும் இப்பாடல் பாடப்பட்டு பிரபலமானது. இதற்கு திருச்சி இசைவல்லுரனராக திரு. கூலிங் இசை அமைத்து, பிரபல பாடகியான திருமதி பாரதி பாடலைப் பாடவைத்து, பதிவு செய்து, இசைத் தட்டில் வெளியிட்டார். இதின் மூலம் இப்பாடல் பலருக்கும் அறிமுகமானது.
இப்பாடலின் வார்த்தைகளை ஆராய்ந்த நிபுணர்கள், “நானோ பரலோகத்தில்’ என்ற வரி சுய நல நோக்கை வெளிப்படுத்துகிறது,’’ எனக் கருத்துத் தெரிவித்தனர். பாடலைக் கேட்பவரின் ஆசையைத் தூண்டி, அவர்களையும் இவ்வரிக்கு உரிமையாளர்களாக மாற்றுவதே தன் எண்ணமாயிருந்தது, என சகோதரர் மைக்கேல் தெளிவுபடுத்துகிறார்