பிற பாடல்கள்

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள்

(Count your blessings)
பாடல் : ஜான்சன் ஓட்மன்

பாடல் பிறந்த கதை

1. துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக் கழித்தாலும்
இன்பம் இழந்தேன் என்றெண்ணி சோர்ந்தாலும்
எண்ணிப்பார் நீ பெற்ற பேராசீர்வாதம்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்
 
    எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள்
    கர்த்தர் செய்த நன்மைகள் யாவும்
    ஆசீர்வாதம்! எண்ணு ஒவ்வொன்றாய்
    கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்
 
2. கவலைச்சுமை நீ சுமக்கும் போதும்
சிலுவை உனக்கு பளுவாகும் போதும்
எண்ணிப்பார் நீ பெற்ற பேராசீர்வாதம்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் - எண்ணி
 
3. நிலம் பொன்னுள்ளோரை நீ பார்க்கும் போது
நினை கிறிஸ்துவின் ஐசுவரியம் உண்டுனக்கு
பணங்கொள்ள பேராசீர்வாதத்தைப் பார்
பரலோக பொக்கிஷமும் வீடும் பார் - எண்ணி
 
4. அகோரத் துன்பங்கள் உன்னைச் சூழ்ந்தாலும்
அதைரியப்படாதே கர்த்தர் உன் பக்கம்
அநேகமாக நீ பெற்ற சிலாக்கியங்கள்
தூதர் உன்னை தேற்றுவார் பிரயாணத்தில் - எண்ணி

பாடல் பிறந்த கதை

"இப்பாடலை ஆண்கள் பாடுவார்கள்; சிறுவர் விசில் அடிப்பார்கள்; பெண்கள் தங்கள் பிள்ளைகளைத் தூங்க வைக்கும் தாலாட்டுப் பாடலாகப் பாடுவார்கள்!" என, "லண்டன் டெய்லி" என்ற செய்தித்தாள், ஜிப்ஸி ஸ்மித்தின் கூட்டத்தில், இப்பாடலுக்குக் கிடைத்த அறிமுகத்தை, அப்படியே வெளியிட்டிருந்தது!

ஆரம்ப நாட்களில் சிறுவருக்கென்று எழுதப்பட்ட இப்பாடலை, இன்று அனைத்து வயது மக்களும் விரும்பிப் பாடுகிறார்கள். எனவே, நமது பாடல் புத்தகங்களில் பிரபலமான பாடலாக இது விளங்குகிறது.

இப்பாடலை எழுதிய போதகர் ஜான்சன் ஓட்மன் ஜீனியர், 21.4.1856-ல் நியூஜெர்சியிலுள்ள மெட்போர்டுக்கருகில் பிறந்தார். பாடல் வரம் பெற்ற இவரது தந்தையின் மூலம், பல திருச்சபைப் பாடல்களை சிறுவயதிலேயே கற்றுக் கொண்டார். 5000 பாடல்களுக்கு மேல் இயற்றிய இவர், நியூஜெர்சியிலுள்ள பெரிய ஆயுள் காப்பு நிறுவனத்தின் பொறுப்பாளராகப் பணிபுரிந்து வந்தார். ஓட்மன் எழுதிய பாடல்கள் அனைத்திலும், இப்பாடலே சிறந்த பாடலாகும்.

1897-ல் "இளைஞர் பாடல்கள்" என்ற பாடல் புத்தகத்தில் இப்பாடல் வெளியாகி, உலகமெங்கும் பாடப்படும் பாடலாக மாறிவிட்டது. "பூமியின் இருண்ட இடங்களை ஒளிமயமாக்கும் சூரிய ஒளிக்கதிர்கள் போல இப்பாடல் விளங்குகிறது" என்று எழுத்தாளர் ஒருவர் கூறினார். அமெரிக்காவில் எழுதப்பட்ட பாடல்களிலெல்லாம், இங்கிலாந்து தேசத்தில் சிறப்பான வரவேற்புப் பெற்றது இப்பாடல் தான்.

பல இசைப் பள்ளிகளை நிறுவி, நற்செய்திக் கூட்டங்களில் பாடல் நேரங்களை முன் நின்று நடத்திப் புகழ்பெற்ற உ.ஞ. எக்செல் இப்பாடலுக்கு ராகம் அமைத்தார். இவர் தாமே 2000 பாடல்களை எழுதி, அவற்றிற்கு இசை அமைத்து, பாடல் புத்தகங்களாக வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.