பாமாலைகள்
(Onward Christian Soldiers)
 பாடல் : பாரிங் கூல்டு

பாடல் பிறந்த கதை

 1. யுத்தம் செய்வோம், வாரும்,
கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர்
பின்னே செல்வோமே!
வெற்றி வேந்தராக
முன்னே போகிறார்;
ஜெயக் கொடி ஏற்றி
போர் நடத்துவார்.
 
   யுத்தம் செய்வோம், வாரும்,
   கிறிஸ்து வீரரே!
   இயேசு சேனை கர்த்தர்
   பின்னே செல்வோமே!
 
2. கிறிஸ்து வீரர்காள், நீர்
வெல்ல முயலும்;
பின்னிடாமல் நின்று
ஆரவாரியும்!
சாத்தான் கூட்டம் அந்த
தொனிக்கதிரும்;
நரகாஸ்திவாரம்
அஞ்சி அசையும்!          
    - யுத்தம் செய்வோம்
 
3. கிறிஸ்து சபை வல்ல
சேனை போன்றதாம்;
பக்தர் சென்ற பாதை
செல்கின்றோமே நாம்;
கிறிஸ்து தாசர் யாரும்
ஓர் சரீரமே;
விசுவாசம், அன்பு,
நம்பிக்கை ஒன்றே.        
    - யுத்தம் செய்வோம்
 
4. கிரீடம் ராஜ மேன்மை
யாவும் சிதையும்,
கிறிஸ்து சபை தானே
என்றும் நிலைக்கும்;
"நரகத்தின் வாசல்
ஜெயங் கொள்ளாதே,''
என்ற திவ்விய வாக்கு
வீணாய்ப் போகாதே.      
   - யுத்தம் செய்வோம்
 
5. பக்தரே, ஒன்றாக
கூட்டம் கூடுமேன்;
எங்களோடு சேர்ந்து
ஆர்ப்பரியுமேன்!
விண்ணோர் மண்ணோர் கூட்டம்
இயேசு ராயர்க்கே
கீர்த்தி, புகழ், மேன்மை
என்றும் பாடுமே.          
  - யுத்தம் செய்வோம்

1865-ம் ஆண்டு.

"ஐயா போதகரே! நம்ம ஊர் பள்ளிப் பிள்ளைகள், நாளைக்கு பக்கத்து ஊர் பள்ளிக்குச் சென்று விழா கொண்டாடப் போகிறார்கள் தெரியுமா?''

"அப்படியா? தெரியாதே! நம்ம ஊர் பிள்ளைகள் அணிவகுத்துப் போகும்போது, ஏதேனும் பாடிச் செல்வார்களா?''

"அவர்களுக்குத் தெரிந்த சில பழைய பாடல்களைப் பாட வேண்டியது தான்!''

ஹோஸ்பரியின் புதிய போதகராக சமீபத்தில் பொறுப்பேற்ற சபைன் பாரிங் கூல்டுக்கு அன்றிரவு தூக்கம் வரவில்லை. இரவில் வெகுநேரம் விழித்திருந்து, பிள்ளைகள் அணிவகுத்துச் செல்லும்போது, உற்சாகமாய்ப் பாடுவதற்கென்று, இப்பாடலை எழுதி முடித்தார். பிள்ளைகளும் மறுநாள் மகிழ்வுடன், இப்பாடலைப் பாடிச் சென்றனர்.

பாரிங் கூல்டு 1834-ம் ஆண்டு பிறந்தார். ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளில் தொடர்ந்து படித்து, முடிவில் கேம்பிரிட்ஜ் பட்டம் பெற்றபின், திருச்சபையின் முழுநேரப் பணியில் போதகராக நியமிக்கப்பட்டார். யார்க்ஷையரிலுள்ள ஹோஸ்பரி என்ற கிராமத்தின் எளிய திருச்சபையின் போதகராக, உற்சாகமாக ஊழியம் செய்துவந்தார்.

ஒருமுறை, வெள்ளத்தில் சிக்கிய கிரேஸ் டெய்லர் என்ற பணிப்பெண்ணைக் காப்பாற்றினார். பின்னர் அவளை நேசித்ததால், படிப்பறிவில்லாத அவளைப் பள்ளியில் சேர்த்து, அவள் படித்துத் தேறியபின், அவளை 1869-ம் ஆண்டு திருமணம் செய்தார். 48 ஆண்டுகளாக அவளுடன் இனிய திருமண வாழ்க்கையை நடத்திய அவர், தன் மனைவியை அதிகமாய் நேசித்ததால் அவள் கல்லறையில், ''என் ஆத்துமாவின் மறுபாதி'' என்று பொறித்து வைத்தார்.

பாரிங் கூல்டு ஒரு சிறந்த எழுத்தாளர். பல துறைகளிலும் சிறந்த அறிவு பெற்ற அவர், சரித்திரம், கற்பனைக் கதைகள், பயணக்கதைகள், வாழ்க்கைச் சரித்திரங்கள், புராணக் கதைகள், கிராமியக் கதைகள், மதக் கோட்பாடுகள், என்ற பல தலைப்புகளில், 85 புத்தகங்களை வெளியிட்டார்.

இப்பாடலை அவர் அவசரமாக இயற்றியதால், சில பிழைகள் இருப்பினும், பாரிங் கூல்டே வியக்கும் வண்ணம், இப்பாடல் மிகவும் பிரபலமானது. பிற்காலத்தில் 10.8.1941 அன்று, ''வேல்ஸ் இளவரசர்'' என்ற ஆங்கிலேய போர்க்கப்பலில், சரித்திரப் புகழ்பெற்ற அட்லான்டிக் ஒப்பந்தத்தில் கையொப்பமிட வந்த வின்ஸ்டன் சர்ச்சிலும், பிராங்லின் ரூஸ்வெல்ட்டும், இருவரது படைகளும் இணைந்து நிற்க, உற்சாகமாய்ப் பாடியது இப்பாடலைத்தான். இப்பாடலுக்கு, சர் ஆர்தர் ந. சல்லிவான், ''தூய ஜெர்ட்ரூட்'' என்ற ராகத்தை,

1871-ம் ஆண்டு அமைத்து, இப்பாடலை இன்னும் பிரபலமாக்கினார்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.