பாடல் பிறந்த கதை
அமெரிக்காவின் லேக் ஹர்ஸ்ட் கிராம மக்கள் அனைவரும், அங்குள்ள மெதடிஸ்ட் ஆலயத்தில், சோகமே உருவாக அமைதியுடன் அமர்ந்திருந்தனர். அடக்க ஆராதனையின் மெதுநடை இசையை வாசிக்க, ஆர்கன் வாசிப்பவரைத் தேடித் தவித்துக்கொண்டிருந்தார் ஆலயப் போதகர். அவரின் இக்கட்டான நிலையை உணர்ந்த 12 வயது சிறுவன் மைல்ஸ், தனக்குத் தெரிந்த ஒரே மெதுநடை இசையை, ஆர்கனில் வாசிக்க முன்வந்தான். ஆராதனை சிறப்பாக நிறைவுற்றது. போதகரும் மற்றவரும் அச்சிறுவனை மிகவும் பாராட்டினார்கள் அதைக்கேட்ட அவனது தாய், அளவற்ற மகிழ்ச்சியும், பெருமிதமும் கொண்டாள்! தான் வாசித்த இசையின் தலைப்பை அறியாத மைல்ஸ், பெரியவனானபோது, அது லோகென்கிரின்னின் திருமண மெதுநடை இசை, என்பதைப் பின்னர் அறிந்து கொண்டான்!
நற்செய்திப் பாடல்களில், இரண்டாவது சிறந்த பாடலாகக் கருதப்படும் இப்பாடலை எழுதி, அதற்கு ராகமும் அமைத்த, இ. ஆஸ்டின் மைல்ஸ் 1868-ம் ஆண்டு பிறந்தார். தன் சிறுவயது முதல், இசையில் ஆர்வமுள்ளவராக விளங்கினார்.
1912-ம் ஆண்டு மார்ச் மாதம், இசைத்துறையில் புகழ் பெற்ற, டாக்டர் ஆடம் கெய்பெல், மைல்ஸ்ஐ ஒரு பாடல் எழுதக் கோரினார். "இப்பாடல், அனுதாபம் தொனிக்கும் இசையோடு இருக்கவேண்டும்; ஒவ்வொரு வரியும், மென்மையை உணர்த்த வேண்டும்; நம்பிக்கையற்றவர்களுக்கு, நம்பிக்கையூட்ட வேண்டும்; களைத்த உள்ளங்களுக்கு, இளைப்பாறுதல் அளிக்க வேண்டும்; மரணப்படுக்கையில் உள்ளவர்களுக்கும், கேட்பதற்கு மிருதுவானதாய் அமைய வேண்டும்." என்று தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.
இந்தப் பொறுப்பை ஏற்ற மைல்ஸ், படமெடுக்கும் கருவிகளும், ஆர்கனும் இருந்த, தன் இருட்டறைக்குள் சென்று அமர்ந்தார். அவர் தன் வேதாகமத்தைத் திறந்தபோது, அவர் மிகவும் விரும்பி வாசிக்கும் வேத பகுதியான, யோவான் 20-ம் அதிகாரம் வந்தது. அதில் உயிர்த்தெழுந்த இயேசுவும், அவரது சடலத்திற்கு மரியாதை செய்ய, அதிகாலையில் ஆவலோடு கல்லறைக்கு ஓடி வந்த மரியாளும் சந்திக்கும் காட்சி, அவரது மனக்கண்முன் வந்தது. அந்த வேத பகுதியை, அவர் அப்போது வாசிக்க ஆரம்பித்தபோது, உயிருள்ள அக்காட்சிக்குள், தான் நுழைவதாக உணர்ந்தார். தன்னைச் சுற்றியுள்ள வெளிச்சம் மறைய, ஒரு தரிசனமாக அதைப் பார்த்தார். கல்லறைத் தோட்ட வாசலில், தான் நிற்பதாக அறிந்தார்.
ஒலிவ மரக் கிளைகளின் நிழலில், வளைந்து சென்ற ஒற்றையடிப்பாதையிலே, வெள்ளை ஆடை தரித்த மகதலேனா மரியாள், தலை குனிந்தவளாக, தன் விம்மல்களை அடக்கியவண்ணம் சென்றாள். கல்லறையின் மீது கை வைத்து, உள்ளே எட்டிப்பார்த்து, பின் விரைந்து சென்று விட்டாள். பின்னர், யோவான் கல்லறைக்கு ஓடி வந்தான். அவனுக்குப் பின் வந்த பேதுரு கல்லறைக்குள் செல்ல, யோவானும் நுழைந்தான். பின்னர், அவ்விருவரும் திரும்பிச் சென்றனர்.
அப்போது, மகதலேனா மரியாள் மீண்டும் தோன்றினாள். கல்லறைக்குச் சென்று, அதின்மேல் தன் கைகளை வைத்து, தலையைச் சாய்த்தவளாக அழ ஆரம்பித்தாள். பின்னர், திரும்பி நோக்கிப் பார்த்தாள். இயேசு நிற்பதை, அவள் கண்டாள். தோட்டத்தின் வாசலருகே பார்த்துக் கொண்டிருந்த மைல்சும் இயேசுவை அடையாளம் கண்டு கொண்டார். மரியாள் இயேசுவின் பாதத்தருகே மண்டியிட்டு, கைகள் விரிவாய்த் திறந்திருக்க, அவர் முகத்தை உற்றுநோக்கி, "ரபூனி!" என்று உரத்த சத்தமாய்க் கூப்பிட்டாள்.
திடுக்கிட்டுத் தன் தரிசனத்திலிருந்து நனவுலகிற்குத் திரும்பிய மைல்ஸ், முழு வெளிச்சத்தில் தன் வேதபுத்தகத்தோடு, அவர் அமர்ந்திருப்பதை உணர்ந்தார். இத்தரிசனம் தந்த புத்துணர்ச்சியில், மடமடவென்று, வேகமாக எழுத ஆரம்பித்தார். நொடிப்பொழுதில், வார்த்தைகள் வளர்ந்து, பாடலாக முடிந்தன. அன்று மாலையிலேயே, அப்பாடலின் ராகத்தையும், மைல்ஸ் அமைத்து முடித்தார்.
இப்பாடலை, பிரபல பிரசங்கியாரான பில்லி சன்டேயின் கூட்டங்களில், சிறந்த பாடகரான ஹோமர் ரோட்ஹீவர், பாடிப் பிரபலமாக்கினார்.