பாடல் பிறந்த கதை
தென்கடல் தீவுகளில், டோங்கா என்ற, மிகவும் கொடூரமான, நாகரீகமற்ற நரமாமிசபட்சிணிகள் வாழ்ந்து வந்தனர். 1821-ம் ஆண்டு, ஒருநாள் பிஜித்தீவுகளில் வாழும் கிறிஸ்தவர்கள், தங்கள் கடற்கரைக்கு விரைந்து வந்து கொண்டிருந்த டோங்கா யுத்தப்படகைப் பார்த்து, திகிலடைந்து நின்றனர். ஆனால், ஆச்சரியவிதமாக, அப்படகில் வந்தவர்கள் அவர்களைக் கொல்லவில்லை. மாறாக, ''வெள்ளை மனிதனின் மதத்தைப் பற்றி அறிய விரும்புகிறோம்.'' என்று கூறி ஒரு வேத புத்தகத்தை வாங்கினார்கள்.
ஆனால், அவர்களில் ஒருவருக்கும் வாசிக்கத் தெரியாததால், ஒரு மிஷனரி தைரியமாக அவர்களோடு புறப்பட்டுச் சென்றார். அவர் அங்கு செய்த சிறந்த ஊழியத்தின் விளைவாக, 1862-ம் ஆண்டு, ஒரு பிரம்மாண்டமான கூட்டம் கூடியது. ஒரு பெரிய ஆலமரத்தின் பரந்த கிளைகளுக்கடியில், டோங்கா, பிஜி, சுமோவா இன மக்களில் சுமார் 5000 பேர் கூடி வந்தனர்.
இந்த கூட்டத்திற்கு, ஜார்ஜ் ராஜா என்ற வயதான ஆதிவாசி அரசர் தலைமை தாங்கினார். வாலிப வயதில் நரமாமிச பட்சிணியாய் இருந்த அவர், இன்றோ, இயேசு கிறிஸ்துவை உத்தமமாய் பின்பற்றுகிறவர். அவர் தன் தீவுகளைக் கிறிஸ்தவத் தீவுகளாகப் பிரகடனப்படுத்தவும், அப்புதிய ராஜ்யத்திற்குக் கிறிஸ்தவ சாசனங்களைக் கொடுப்பதற்கும், இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். இந்த முக்கிய நிகழ்ச்சியில், இச்சிறந்த பாடலை, அத்தீவுமக்கள் அனைவரும், தங்கள் தாய்மொழியில் மொழி பெயர்த்துப் பாடினார்கள்.
இப்பாடலை இயற்றிய புகழ்மிகு போதகர் டாக்டர் ஐசக் வாட்ஸ், தன் வாழ்வின் கடைசி 30 ஆண்டுகளைப் பெலனற்று, செயலிழந்த நிலையில், தன் நண்பர் சர் தாமஸ் அப்னேயின் இல்லத்தில் கழித்தார். அந்நாட்களில், ஊழிய வாஞ்சை நிறைந்தவராய், இப்பாடலை எழுதினார்.
1719-ல், டாக்டர் ஐசக் வாட்ஸ் இப்பாடலை எழுதினபோது, நற்செய்தி மிஷனரி இயக்கங்கள் இன்னும் உருவாகவேயில்லை. 70 ஆண்டுகளுக்குப்பின், 1789-ல் தான், '' நவீன கால மிஷனரி இயக்கங்களின் தந்தை'' என்று அழைக்கப்படும் வில்லியம் கேரி, இயேசுவை அறியாது இருளில் வாழும் மக்களுக்கு, நற்செய்தி அறிவிக்க வேண்டியதின் முக்கியத்துவத்தை, முதன்முறையாகத் துணிந்து எடுத்துக் கூறினார். அப்போது கூட, திருச்சபையின் மூத்த போதகர்களுக்கு இத்தகைய ஆத்தும பாரமில்லாததினால், அவரை அதட்டி, அவமானப்படுத்தி, அமரச் செய்தனர். இதின் பின்னணியில் பார்க்கும்போது, இப்பாடல் நிச்சயமாகவே மிஷனரி ஊழியத்தின் முன்னோடிப் பாடலாக விளங்குகிறது. இன்றும், மிஷனரிப் பாடல்களில் ஒரு சிறந்த பாடலாக, பல நாடுகளில், பல மொழிகளில் பாடப்பட்டு வருகிறது.
இப்பாடல், சங்கீதம் 72- ஐ மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. இப்பாடலுக்கு, ''டியூக் தெரு'' என்ற ராகத்தை ஜான் ஹட்டன் 1793-ல் அமைத்துக் கொடுத்தார். இந்த ராகத்தை, அமைத்த சில நாட்களில், ஒரு விபத்தில் இவர் மரணமடைந்தார்.