பாடல் பிறந்த கதை
J.M. பிளாக் தனது ஊரின் வாலிபர் சங்கத் தலைவராகப் பணியாற்றினார். பக்தி வளர்ச்சிக்கேதுவான காரியங்களில், வாலிபர்களை வழிநடத்தி வந்தார்.
ஒருமுறை, 14 வயது நிரம்பிய ஒரு வாலிபப் பெண், அழுக்கான ஆடை அணிந்து நிற்பதைக் கண்டார். அவளுடைய தகப்பன் ஒரு குடிகாரனென்று அறிந்து, அவளைத் தன் வாலிபர் சங்கத்தில் சேர்த்து, ஞாயிறு பள்ளியில் கலந்துகொள்ளுமாறு அவளை உற்சாகப்படுத்தினார். அவளும் இக்கூட்டங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தாள். இவ்வாறு நாட்கள் கடந்தன.
பிளாக் நடத்திய ஞாயிறு பள்ளியில் முதலில் பிள்ளைகளின் பெயர்களை வாசிப்பார்கள். அப்போது ஒவ்வொரு பிள்ளையும், பதிலுக்கு, ஒரு வேத வசனத்தை மனப்பாடமாய் கூறி, அமரும் வழக்கம் இருந்தது. ஒரு நாள், பிளாக் ஒவ்வொரு பெயராய் வாசித்தபோது, அந்த வாலிபப்பெண் வரவில்லை, என்பதை அறிந்து, விசனமடைந்தார்.
அன்று தன் செய்தியில், ''கடைசி நாளில் புத்தங்கள் திறக்கப்படும். அப்போது, ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள பெயர்கள் வாசிக்கப்படும். இவ்வாறு அழைக்கப்படாதவர்கள் பரலோகத்திற்குள் பிரவேசிக்க முடியாது. எனவே, உங்கள் பெயர் வாசிக்கப்படுமா? அப்போது சந்தோஷமாய் பதில் கூறுவீர்களா?'' என்று சவால் விடுத்தார். பின்னர் ஜெபத்திலும், ''இப்படிப்பட்ட பாக்கியத்தை, எங்கள் ஒவ்வொருவருக்கும் அருளும்'' என்று கூறினார், அதன்பின், முடிவுப்பாடலைப் பாட, பாடல் புத்தகத்தில் இந்த செய்திக்கு ஏற்ற பாடலைத் தேடினார். ஒன்றும் கிடைக்கவில்லை.
இக்குறையும், அந்தப் பெண்ணின் நிலையும் தன் உள்ளத்தில் மிகுந்த பாரமாக அழுத்த, அதையே சிந்தித்தவராக வீடு திரும்பினார். வீட்டில் நுழைந்தவுடன், தன் மனைவியிடம் கூட ஒரு வார்த்தையும் பேசாமல், தன் அறைக்குச் சென்று, இப்பாடலின் முதல் சரணத்தை, மடமடவென்று எழுதினார். மீதி இரண்டு சரணங்களும் அடுத்த 15 நிமிடங்களில் உருவாயின. பின்னர், தனது பியானோ இசைக்கருவியில் உட்கார்ந்தவுடன், இப்போது நாம் பாடுகிற அதே ராகத்தை, புதிதாக, அப்பொழுதே அமைத்து முடித்தார். நித்திய ராஜ்ஜியத்தில், நமது பங்கு என்ன என்று, நம்மை இப்பாடல் சிந்திக்கத் தூண்டுகிறது.