பாமாலைகள்

நல்மீட்பர் பட்சம் நில்லும்

(Stand up, stand up for Jesus)

பாடல்: டப்பீல்டு

பாடல் பிறந்த கதை

1. நல் மீட்பர் பட்சம் நில்லும்!
ரட்சணிய வீரரே!
ராஜாவின் கொடியேற்றி
போராட்டம் செய்யுமே!
சேனாதிபதி இயேசு
மாற்றாரை மேற்கொள்வார்;
பின் வெற்றி கிரீடம் சூடி
செங்கோலும் ஓச்சுவார்.
 
2. நல் மீட்பர் பட்சம் நில்லும்!
எக்காளம் ஊதுங்கால்,
போர்க் கோலத்தோடு சென்று
மெய் விசுவாசத்தால்
அஞ்சாமல் ஆண்மையோடே
போராடி வாருமேன்;
பிசாசின் திரள் சேனை
நீர் வீழ்த்தி வெல்லுமேன்.
 
3. நல் மீட்பர் பட்சம் நில்லும்!
எவ்வீர சூரமும்
நம்பாமல், திவ்விய சக்தி
பெற்றே பிரயோகியும்;
சர்வாயுதத்தை ஈயும்
கர்த்தாவை சாருவீர்;
எம்மோசமும் பாராமல்
முன் தண்டில் செல்லுவீர்.
 
4. நல் மீட்பர் பட்சம் நில்லும்!
போராட்டம் ஓயுமே;
வெம்போரின் கோஷ்டம், வெற்றி
பாட்டாக மாறுமே!
மேற்கொள்ளும் வீரர் ஜீவ
பொற்கிரீடம் சூடுவார்;
விண்லோக நாதரோடே
வீற்றரசாளுவார்.

அந்த அறையில் மயான அமைதி நிலவியது.  நடுவில் மரணத்தோடு போராடியவாறு படுத்திருந்தார் ஒரு வாலிபப்  பிரசங்கியார்.  சோகமே உருவாக சுற்றி அமர்ந்திருந்த உடன் ஊழியர்களில் ஒரு போதகர் கேட்டார். ''டாக்டர் டிங், உங்கள் உடன் ஊழியர்களுக்கும், மற்ற சபை மக்களுக்கும் நீங்கள் அளிக்க விரும்பும் கடைசிச் செய்தி என்ன?''.

மரணத்தைத் தழுவும் நிலையிலும், ஆண்டவருக்காக வைராக்கியம்  பாராட்டும் உறுதி, தன் வார்த்தைகளில் பளிச்சிடும் வண்ணம், டாக்டர் டிங் கூறினார், ''அனைவரும் நம் நல்மீட்பரின் பட்சம் உறுதியாய் தரித்து நிற்க வேண்டும்  என்று கூறுங்கள்.'' இவ்வாறு, சாத்தானின் சேனைகளுக்கெதிராய் போர்முரசெழுப்பிய வண்ணம், தனது உலக வாழ்க்கையை, வெற்றித் தொனியுடன் முடித்தார் டாக்டர் டிங்.

அவரது கடைசிச் சவாலின் எதிரொலிதான் இப்பாடல்!.

அமெரிக்காவில் உள்நாட்டுப்போர் நடந்து கொண்டிருந்த காலமது.  ஐரோப்பாவிலிருந்து  வந்து குடியேறினவர்கள், அமெரிக்காவில் பெரிய பண்ணைகளை நிறுவி, புகையிலை பயிரிட்டு வந்தனர்.  இப்பண்ணைகளில்  வேலை செய்ய ஆட்கள் தேவை.  எனவே, அடிமை வியாபாரிகள் ஆப்பிரிக்க நாடுகளில்  நீக்ரோக்களை, மிருகங்களை வேட்டையாடுவது போலப் பிடித்து, இப்பண்ணை முதலாளிகளுக்கு விற்று, மிகுந்த பணம் சம்பாதித்து வந்தனர்.

அந்நாட்களில், பிலடெல்பியா நகரில் உள்ள, மகிமை நிறை ஆலயத்தின் இளம் போதகராக, 29 வயதே நிரம்பிய டாக்டர் . டட்லி A. டிங் பணியாற்றி வந்தார்.  அவரது சபையில், பல பண்ணை முதலாளிகளும், அடிமை வியாபாரிகளும் முக்கிய அங்கத்தினர்களாக இருந்தனர்.  சுவிசேஷ வாஞ்சையும், உயர்ந்த பண்புகளும் நிறைந்த போதகர் டிங், இந்த அடிமைகளின் அவல வாழ்வைக் கண்டு, பரிதபித்தார். எனவே, ''அடிமை முறையானது  கிறிஸ்தவ தத்துவங்களுக்கு ஒவ்வாதது; சக மனிதனை அடிமையாக்குவது ஒரு பாவச் செயல்!'' என பிரசங்க பீடத்தில் பகிரங்கமாகப் போதிக்க ஆரம்பித்தார்.

போதகர் டிங்கின் செய்தியால் அதிர்ச்சியுற்ற பண்ணை முதலாளிகளும்,  அடிமை வியாபாரிகளும், அவரிடம் சென்று,  இம்முயற்சியைக் கைவிடுமாறு பணிவுடன் கேட்டனர்;  முறையிட்டனர்; பின்னர் பயமுறுத்தியும் பார்த்தனர்.  போதகரோ, அவர்கள் வற்புறுத்தலுக்கு இணங்க மறுத்துவிட்டார்.  கொதித்தெழுந்த அந்த செல்வாக்கு மிகுந்த, பண வசதி படைத்த கூட்டத்தினர், சூழ்ச்சி செய்து, ஆலயப் பொறுப்பிலிருந்து டாக்டர் டிங்கை வெளியேற்றினார்கள்.

நேர்மையான போதகரை வெளியேற்றியதற்குக் கண்டனம் தெரிவித்து, டாக்டர் டிங்கின் ஆதரவாளர்கள் பலர், சபையிலிருந்து விலகினார்கள்.  அவர்கள் அனைவரும்  சேர்ந்து, YMCA உதவியுடன், 5000 பேர் அமரக்கூடிய ஜேய்ன் அரங்கத்தில்,  1857-58-ம் ஆண்டு, மதியக் கூட்டங்களை நடத்தினார்கள்.  இவ்வாறு ஆரம்பமான உடன்படிக்கைத் திருச்சபையில், டாக்டர் டப்பீல்ட் போன்ற பல போதகர்களும் சேர்ந்தனர்.  புத்தெழுச்சி பெற்ற இத்திருச்சபை, நாளுக்குநாள் வளர்ந்து பெருகியது.

30.3.1858 அன்று, திரளாகக் கூடியிருந்த வாலிபர்களுக்கு, யாத்திராகமம் 10:11 வசனத்தை மையமாகக் கொண்டு செய்தியளித்த டாக்டர். டிங், கர்த்தருக்கு ஊழியம் செய்ய, சவால் விடுத்தார்.  அந்த ஆராதனையின் முடிவில், 1000 வாலிபர்கள் தேவனுக்குத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்து உறுதி மொழிந்தனர்.

அதைத் தொடர்ந்த புதன்கிழமை, டிங் தன் தியான அறையிலிருந்து, சிறிது நேரம் ஓய்வெடுக்க வெளியே வந்தார்.  அருகிலிருந்த களத்தில், சோளத்தைப் பிரித்தெடுக்கும் எந்திரத்தில் வேலை செய்த மட்டக்குதிரையிடம் சென்றார்.  அதின் கழுத்தில் அன்போடு தட்டிக் கொடுத்தார்.  அப்போது அவர் அறியாமல், அவர் அணிந்திருந்த பட்டு அங்கியின்  நீளக்கைப்பகுதி, எந்திரத்தின்  சக்கரத்தில் சிக்கி, இழுத்துச் செல்லப்பட்டது.  அதினால் அவர் கை முழுவதும் துண்டிக்கப்பட்டது.  இந்தக் கோர விபத்தால், டாக்டர் டிங் 19.4.1858 அன்று மரித்துப் போனார்.

டாக்டர் டிங்கின் மரணப்படுக்கையருகே இருந்து, அவரின் பிரியாவிடைச் சவாலை போதகர் டாக்டர் டப்பீல்டு  கேட்டுக் கொண்டிருந்தார்.  டாக்டர் டிங்கின் அடக்க ஆராதனையின் போதும் இச்சூளுரை அவர் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டேயிருந்தது. 

அதன் விளைவு? டாக்டர் டிங்கின் பிரிவு வார்த்தைகளே ''நல் மீட்பர் பட்சம் நில்லும்'' என்ற அழகிய பாடலாக, டாக்டர் டப்பீல்டின் பேனாவிலிருந்து உருவெடுத்தது.

அடுத்த ஞாயிறன்று, டாக்டர் டிங்கின் நினைவு தோத்திர ஆராதனை நடைபெற்றது.  எபேசியர் 6:16- ஐ மையமாகக் கொண்டு, ''தரித்து நில்லுங்கள்'' என்ற தலைப்பில், வல்லமை நிறைந்த தேவ செய்தியளித்த டாக்டர் டப்பீல்டு, அச்செய்தியின் நிறைவாக, தான் இயற்றிய இப்பாடலை வாசித்தார்.

பின்னர், இப்பாடலின் பிரதியை, ஆலய ஞாயிறு பள்ளிக் கண்காணிப்பாளரிடம் டாக்டர் டப்பீல்டு கொடுத்தார்.  அவர் அதை அச்சிட்டு, ஞாயிறுபள்ளியில் பாட வழி வகுத்தார்.  துரிதமாக இப்பாடல் பிரபல்யமானது.  அமெரிக்க உள் நாட்டுப் போர் வீரர்களின் விருப்பப் பாடலாகவும், பின்னர் அமெரிக்கா முழுவதும் பாடப்படும் சிறப்புப் பாடலாகவும்  பெயர்பெற்றது.

இப்பாடலுக்கு, 1867-ல் ஜார்ஜ் J. வெப் ராகம் அமைத்தார்.  ரோமப் போர் வீரனைக் கருத்தில் கொண்டு, பவுல் எழுதிய ஆவிக்குரிய போராட்டத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட இப்பாடல், ஒரு போரெழுச்சிப் பாடலாக விளங்குகிறது.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.