காரிருளில் என் நேச தீபமே
(Lead Kindly light)
பாடல் பிறந்த கதை
பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறந்த பிரசங்கியார்களில் ஒருவராகக் கருதப்படும் ஜான் ஹென்றி நியூமன், லண்டன் பட்டணத்தில், 21.2.1801 அன்று பிறந்தார். தனது பதினைந்தாவது வயதில் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்று, வேதாகமத்தையும், திருச்சபைத் தத்துவங்களையும் ஆவலோடு கற்றார். 19-வது வயதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் பட்டதாரியாகி, நான்கு வருடங்களுக்குப்பின் இங்கிலாந்து திருச்சபையின் போதகரானார். சிறந்த மேடைப் பேச்சாளராகவும் விளங்கினார். அவருடைய திறமைகளும், கம்பீரத் தோற்றமும், பலரை அவர்பால் காந்தம்போல் கவர்ந்தன.
உற்சாகமாய் ஊழியம் செய்து வந்த நியூமனை, அவரது 32-வது வயதிலேயே நோய் தாக்கியது. மற்றும், இங்கிலாந்து திருச்சபையில் அந்நாட்களில் நிலவிய, தணிந்த ஆவிக்குரிய நிலை, அவரின் உள்ளத்தை வாட்டியது. எனவே, சரீர இளைப்பாறுதலும், புதிய கண்ணோட்டமும், சவாலும் பெற, நியூமன் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணமானார். ரோமாபுரிக்கும் சென்று, கத்தோலிக்கத் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.
அந்நாட்களில், நியூமன் தன் சொந்த ஆவிக்குரிய வாழ்க்கையில், போராட்ட நிலைக்குள்ளானார். இத்தாலியில் குழம்பிய நிலையில் இருந்த அவரை, சிசிலியன் ஜுரம் தாக்கியது. மூன்று வாரங்கள் படுத்த படுக்கையாகி, பெலவீனப்பட்டார். கலக்கமுற்ற நியூமன் இங்கிலாந்து திரும்ப முயற்சித்தார். வாய்ப்புகளற்ற நிலையில், பிரான்சுக்கு ஆரஞ்சுகளை ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்றில் பயணத்தை மேற்கொண்டார். பல நாட்கள், தனிமையில், இன்னல்கள் பல அனுபவித்த நியூமனுக்குத் தன் எதிர்காலமே இருண்டதாகத் தோன்றியது. தனது நாட்டையும், தன் நண்பர்களையும் எண்ணி ஏங்கினார்.
போனிபேசியோ குடாக்கடலில், காற்றேயில்லாத நிலையில், அவருடைய கப்பல் ஒருவார காலம் தேங்கி நின்றது. நியூமன் சரீரத்திலும், உள்ளத்திலும், ஆவியிலும் சோர்ந்து போனார். இந்நிலையில் ஆண்டவரின் வழிநடத்துதலை வேண்டி, 16.6.1833 அன்று, இப்பாடலை எழுதினார். இப்பாடலின் மூன்று சரணங்களும் ஒரே நாளில் எழுதப்பட்டன. இப்பாடலுக்கு நியூமன் அளித்த தலைப்பு, "மேக ஸ்தம்பம்", என்பதே. இஸ்ரவேல் ஜனங்களை மேக ஸ்தம்பத்தின் மூலம் வழிநடத்தின ஆண்டவர், தன் எதிர்கால ஊழியப் பாதையிலும் வழிநடத்த வேண்டுமென இறைஞ்சி இப்பாடலை எழுதினார்.
இப்பாடலின் முதல் சரணம், நியூமன் பயணம் செய்த கப்பல் முன்னேற முடியாமல் தவிக்கும் நிலையை எடுத்துக்காட்டுகிறது. இரண்டாம் சரணம், நியூமனின் இளவயது அனுபவத்தைச் சித்தரிக்கிறது. இப்பாடலின் கடைசி இரண்டு வரிகள், தனக்கு அருமையான நண்பர்களை விட்டுத்தவிக்கும் அவலநிலையைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
இங்கிலாந்து வந்தடைந்த நியூமன், மீண்டும் உற்சாகமாக ஊழியத்தைத் தொடர்ந்தார். ஆனால், கிறிஸ்தவத் தத்துவங்களில் அவருடைய கண்ணோட்டம் மாறியது. இப்பாடலை எழுதி 12 ஆண்டுகளுக்குப்பின், கத்தோலிக்கத் திருச்சபையில் சேர்ந்து, தொடர்ந்து ஊழியம் செய்தார். 1879-ம் ஆண்டு, போப் லியோ அவருக்கு கார்டினல் பட்டமளித்துக் கௌரவித்தார்.
இப்பாடலுக்கு, டாக்டர் ஜான் பக்கஸ் டைக்ஸ் என்ற இங்கிலாந்து திருச்சபைப் போதகர், 1867-ம் ஆண்டு "லக்ஸ் பெனிக்னா" (தயவு காட்டும் ஒளி), என்ற ராகத்தை அமைத்தார். இசையில் டாக்டர் பட்டம் பெற்ற இப்பண்டிதர், தனது பத்தாவது வயது முதல், தன் தாத்தாவின் ஆலயத்தில் ஆர்கன் வாசித்த இசை வல்லுனர். ''தூய தூய தூயா'', ''இயேசுவே உம்மை தியானித்தால் '' ஆகிய பாடல்களுக்கும் ராகம் அமைத்த பெருமை இவரைச் சேரும்.