பாமாலைகள்

ஓ பெத்லெகேமே சிற்றூரே

(O little town of Bethlehem)

பாடல். பிலிப்ஸ் ப்ரூக்ஸ்

பாடல் பிறந்த கதை

 1. ஓ பெத்லெகேமே சிற்றூரே,
என்னே உன் அமைதி!
அயர்ந்தே நித்திரை செய்கையில்
ஊர்ந்திடும் வான் வெள்ளி.
விண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றே
உன் வீதியில் இன்றே:
நல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம்
உன் பாலன் இயேசுவே.
 
2. கூறும், ஓ விடி வெள்ளிகாள்!
இம்மைந்தன் ஜன்மமே!
விண் வேந்தர்க்கு மகிமையே,
பாரில் அமைதியாம்;
மா திவ்விய பாலன் தோன்றினார்
மண் மாந்தர் தூக்கத்தில்,
விழித்திருக்க தூதரும்
அன்போடு வானத்தில்.
 
3. அமைதியாய் அமைதியாய்
விண் ஈவு தோன்றினார்;
மாந்தர்க்கு ஸ்வாமி ஆசியும்
அமைதியால் ஈவார்.
கேளாதே அவர் வருகை
இப்பாவ லோகத்தில்;
மெய் பக்தர் ஏற்பார் ஸ்வாமியை
தம் சாந்த ஆன்மாவில்.
 
4. வேண்ட நற் சிறு பாலரும்
இத்தூய பாலனை,
அழைக்க ஏழை மாந்தரும்
இக்கன்னி மைந்தனை,
விஸ்வாசமும் நம் பாசமும்
வரவைப் பார்க்கவே,
இராவை நீக்கித் தோன்றுவார்
இம்மாட்சி பாலனே.
 
5. பெத்லெகேம் தூய பாலனே,
இறங்கி வருவீர்;
ஜனிப்பீர் எங்களில் இன்றும்
எம் பாவம் நீக்குவீர்;
நற்செய்தி இவ்விழா தன்னில்
இசைப்பார் தூதரே;
ஆ வாரும், வந்து தங்கிடும்
இம்மானுவேலரே.

1868-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு நாள், ''போதகரே! கிறிஸ்மஸ்  பண்டிகை நாட்கள் நெருங்கிவிட்டதே! புதுப்பாடல்கள் ஏதாவது உண்டா? நமது ஞாயிறு பள்ளியின் கிறிஸ்மஸ் நிகழ்ச்சியில் பிள்ளைகள் கற்றுப் பாட வேண்டுமே!'' என அங்கலாய்த்தார், பிலடெல்பியாவின் தூய திரித்துவ ஆலய ஞாயிறு பள்ளியின் தலைவர், லெவிஸ்

ஏ.ரெட்னெர்.  ஆலய ஆராதனையில் ஆர்கன் வாசிப்பவரும் அவரே!

இப்படிப்பட்ட, புதுப்பாடல் தேடி  அலையும் அனுபவம், ஞாயிறு பள்ளி ஆசிரியர்களுக்கும், ஆலயப் பாடல் குழுவினருக்கும், ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்மஸ் காலங்களில் உண்டல்லவா?

வாலிபனான போதகர் பிலிப்ஸ் ப்ரூக்ஸ் சிந்திக்கலானார்.  மூன்று ஆண்டுகளுக்குமுன் அவர் பெற்ற அனுபவம் அவர் மனக்கண் முன் தோன்றியது.  "பரிசுத்த பூமி," என்று அழைக்கப்படும் பாலஸ்தீன நாட்டுக்குச் சென்று, இறைமகன் இயேசு இவ்வுலகில் வாழ்ந்த இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, கிறிஸ்மஸ்  முன்னிரவில் பெத்லெகேம் சென்று, இயேசு பிறந்த இடமென்று கூறப்படும், கிறிஸ்து பிறப்பின் ஆலயத்தில்  ஆராதித்த அனுபவம், அவர் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருந்தது.   இப்போது  இப்பாடலாக உருவெடுத்தது.

இந்த அருமையான கிறிஸ்மஸ் பாடலை, ஞாயிறு பள்ளிப் பிள்ளைகளுக்கென எழுதிய  ப்ரூக்ஸ், கடந்த நூற்றாண்டின் சிறந்த பிரசங்கியார்களில் ஒருவராவார். 

6 1/2 அடி உயரமும், கம்பீரத்தோற்றமும் உடைய இவர், "பிரசங்க மேடையின் இளவரசர்" என்று புகழ் பெற்றவர்.  நிமிடத்திற்கு 250 வார்த்தைகளைச் சரளமாகப் பொழியக்கூடிய நாவன்மை படைத்தவர்.

ப்ரூக்ஸ் 1835-ம் ஆண்டு, மாசாச்சூசெட்ஸின்  போஸ்டனில் பிறந்தார். ஹார்வர்டிலும், பின்னர் வெர்ஜினியாவிலுள்ள இறையியல் கல்லூரியிலும் படித்து முடித்தபின்  1859 முதல் 1869 வரை, பிலடெல்பியாவில் போதகராகப் பணிபுரிந்தார்.  அதன்பின் 20 ஆண்டுகள் போஸ்டனிலுள்ள திருத்துவ ஆலயப் போதகராகவும்,

2 ஆண்டுகள் பேராயராகவும் ஊழியம் செய்து திடீரென மரணமடைந்தார்.

திருமணமாகாத ப்ரூக்ஸ், சிறு குழந்தைகளை மிகவும் நேசித்தார். சிறுவர்கள் எந்நேரமும் வந்து, அவரோடு நேரம் செலவிட விரும்பினார்.  எனவே, சிறுவர்களுக்கான பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்களை வாங்கி அவருடைய படிப்பறையில்  வைத்து, அங்கு வரும் பிள்ளைகளுடன் தானும் ஒரு குழந்தை போல மாறி விளையாடுவார்.

இப்பாடலுக்கு, சிறுபிள்ளைகள் எளிதாகக் கற்றுப் பாடக்கூடிய வகையில் ராகம் அமைப்பது, ரெட்னருக்குச் சற்று சிரமமாக இருந்தது.  ஞாயிறு பள்ளியின் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியின் நாள் வரை, அவரால் இப்பாடலுக்கு ராகம் அமைக்க முடியவில்லை.  அன்று மதிய வேளையில், இளைப்பாறும்படித் தூங்கிக் கொண்டிருந்த ரெட்னர், திடீரென்று விழித்தெழுந்து, பரலோக கானமொன்று தன் உள்ளத்தில் தொனிப்பதை உணர்ந்தார்.  உடனே, அந்த ராகத்தை இப்பாடலுக்கு அமைத்தார்.  அந்த நாள்முதல், இப்பாடல், உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சிறுவர், மற்றும் வாலிபர் விரும்பிப் பாடும் பாடலாக மாறியது.  1874-ம் ஆண்டு, இப்பாடல் அனைவரின் உபயோகத்திற்கென வெளியிடப்பட்டது.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.