பாமாலைகள்
(Silent Night! Holy Night!)
பாடல். ஜோசப் மோஹ்ர்

பாடல் பிறந்த கதை

 1. ஒப்பில்லா - திரு இரா
இதில் தான் மா பிதா
ஏக மைந்தனை லோகத்துக்கு
மீட்பராக அனுப்பினது
அன்பின் அதிசயமாம் -
அன்பின் அதிசயமாம்.
 
2. ஒப்பில்லா - திரு இரா
யாவையும் ஆளும் மா
தெய்வ மைந்தனார் பாவிகளை
மீட்டு விண்ணுக்குயர்த்த, தம்மை
எத்தனை தாழ்த்துகிறார்!
எத்தனை தாழ்த்துகிறார்!
 
3. ஒப்பில்லா - திரு இரா!
ஜென்மித்தார் மேசியா;
தெய்வ தூதரின் சேனைகளை
நாமும் சேர்ந்து, பராபரனை
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம் -
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்.

"மோஹ்ர்! என் ஆருயிர் நண்பனே! மிகப் பொருத்தமான பாடலைக் கண்டுபிடித்து விட்டாய்! தேவனுக்கே மகிமை!"

என மகிழ்ச்சியில் கூச்சலிட்டார் கிரப்பர்.

சில நாட்களுக்கு முன்தான், "கிறிஸ்மஸின் அர்த்தத்தைச் சரியாக எடுத்துக் கூறும், பொருத்தமான பாடல் ஒன்றும் இல்லையே!" என்று ஏங்கின இந்நண்பர்களுக்கு இறைவன் அளித்த கிறிஸ்மஸ் பரிசுதான் இப்பாடலோ!

இப்பாடலை எழுதிய பங்குத்தந்தை ஜோசப் மோஹ்ர், 1792-ம் ஆண்டு  ஆஸ்திரியாவிலுள்ள  சாலிஸ்பர்க் என்ற பட்டணத்தில் பிறந்தார்.  மோஹ்ர் சிறுவனாயிருந்தபோதே, அப்பட்டணத்தின் தேவாலயப் பாடகர் குழுவில் உற்சாகமாகப் பாடுவார்.  இசையில் விருப்பமுள்ள மோஹ்ர், பொது இடங்களில் பாடல் பாடியும், வயலின், மற்றும் கித்தார் இசைக்கருவிகள் வாசித்தும், தனது படிப்புக்குத் தேவையான பணத்தொகையைச் சம்பாதித்தார்.  பின்னர் கத்தோலிக்க மடத்தில் சேர்ந்தார்.

1815-ம் ஆண்டு, மோஹ்ர் கத்தோலிக்கச் சபையின் பாதிரியாரானார்.  1817-ம் ஆண்டு, அவர் அருகிலிருந்த ஓபெர்ன்டார்ப் கிராமத்தின் தூய நிக்கொலஸ் ஆலய உதவி குருவாகப் பொறுப்பேற்றார்.

இயற்கை எழில் நிறைந்த ஓபெர்ன்டார்ப் கிராமத்தில், அமைதியாகக் காட்சியளித்த தூய நிக்கொலஸ் ஆலயத்தில், 1818-ம் ஆண்டின் கிறிஸ்மஸýக்கு முன்தினம் ஒரு பிரச்சினை புயலென உருவெடுத்தது! ஆம், ஆலய ஆர்கன், ஒலியெழுப்ப மறுத்தது!  மோஹ்ர் அதைச் சரிசெய்ய எவ்வளவோ முயற்சி செய்தும் பலனில்லை.  இரவு பண்டிகை ஆராதனையில், இசையின்றி, சபைமக்கள் சோர்ந்து போய்விடுவார்களே!'' என்ற கலக்கம் மோஹ்ரின் உள்ளத்தில் தோன்றியது.  அதுவரை அவர்கள் பாடிவந்த கிறிஸ்மஸ் பாடல்களெல்லாம், ஆர்கன் இசைக்கேற்றதாக அமைந்ததால், கித்தார் இசைத்துப் பாட, அவை ஏற்றதாக இல்லை.

இப்பிரச்சினையைத் தீர்க்க வழிதேடிய  மோஹ்ர், புதுப்பாடலொன்றை உடனடியாகக் கித்தார் இசைக்கேற்றபடி எழுத வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானார்.  அமைதி நிலவும் தன் படிப்பறையில் அமர்ந்த மோஹ்ரின் உள்ளத்தில், சமீபத்தில் அவரது சபை அங்கத்தினர் வீட்டில் பிறந்த குழந்தையை ஆசீர்வதிக்கச் சென்ற நிகழ்ச்சி நினைவில் வந்தது.  குளிர்காலமானதால், துணிகளால் அழகாகச்

சுற்றப்பட்டிருந்த அக்குழந்தை, கிறிஸ்மஸ் காட்சியைத் தந்தது.  அத்துடன், கப்பல் கட்டும் தொழிலதிபரான, மற்றொரு சபை அங்கத்தினரின் வீட்டில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற கிறிஸ்மஸ் நாடகத்திற்கு, அவர் தலைமை தாங்கச் சென்றபோது, பக்கத்துக் கிராம வாலிபர் நடித்த அந்நாடகத்தின் காட்சிகள் அவர் நினைவில் வந்தன.

இவற்றைச் சிந்தித்துக் கொண்டிருந்த மோஹ்ருக்கு, அவர் அன்று நள்ளிரவில் நடத்தவிருக்கும் ஆராதனை மீண்டும் எண்ணத்தில் வரவே,"' அமைதியான இரவு! தூய இரவு!'' என்று அவரறியாமல் எழுதினார்.  இப்படி ஆரம்பமான இப்பாடலின் பிற வரிகளையும் தொடர்ந்து சீக்கிரமே எழுதி, 6 சரணங்கள் கொண்ட, அழகிய புது கிறிஸ்மஸ் பாடலை இயற்றி முடித்தார்.

தனது புதிய கிறிஸ்மஸ் கீதத்தை, ஆலய ஆர்கன் இசைப்பவரும், பாடகர் குழுத்தலைவருமான, தன் நண்பர் பிரான்ஸ் கிரப்பரிடம் எடுத்துச் சென்றார். அதைத் தனது கிறிஸ்மஸ் அன்பளிப்பாகக் கொடுத்து, அதற்கு ராகம் அமைக்குமாறு  வேண்டினார்.  எளிய நடையில், பொருத்தமான வார்த்தைகளுடன் அமைந்த அப்பாடல், கிரப்பருக்கு மிகவும் பிடித்திருந்தது.  எனவே, உடனடியாகத் தன் பியானோவுக்குச் சென்று, அப்பாடலுக்கேற்ற சிறந்த ராகத்தைத் துரிதமாக அமைத்தார்.  அப்போது அவரது இல்லத்திற்கு வந்திருந்த, பிரபல பாடகிகளான ஸ்ட்ரேசர் சகோதரிகள் இசை அமைப்பதில் அவருக்கு உதவி செய்தனர்.

அன்றிரவு, கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனைக்குத் திரளாய் வந்திருந்த சபை மக்களிடம், ஆலய ஆர்கனின் நிலையை மோஹ்ர் எடுத்துக் கூறினார்.  பின்னர் இப்பாடலை, கித்தார் பின்இசையுடன்  மோஹ்ரும், கிரப்பரும் இணைந்து பாடி, முதன்முறையாக அறிமுகம் செய்தனர் நிசப்தமான நள்ளிரவில், தெய்வீக கானமாய், அப்பாடல், கேட்டவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.

சில மாதங்களில், ஆலய ஆர்கன் பழுது பார்க்கப்பட்டது.  மோஹ்ரும் அங்கிருந்து வேறு ஆலயத்திற்கு மாற்றலாகிச் சென்றார்.  எனவே, இப்பாடல் கவனிப்பாரற்று, அந்த ஆலயத்தில் கிடந்தது.  ஆனால், மீண்டும் ஆர்கன் பழுதடையவே, 1824-ம் ஆண்டு, கார்ல் மாராசெர் என்ற இசை வல்லுனர், ஆர்கனைச் சரிசெய்யும் பொறுப்பை மேற்கொண்டார்.  தெய்வச் செயலாய்  அவரது கரத்தில், கவனிப்பாரற்றுக் கிடந்த இப்பாடல், ராகத்துடன்  கிடைத்தது.  அழகான இப்பாடலையும், அதற்கேற்ற சிறந்த ராகத்தையும் கண்ட கார்ல், கிரப்பரின் அனுமதிபெற்று, அதைப் பொக்கிஷமாகத் தன்னோடு எடுத்துக் சென்றார்.

பின்னர், அவர் பகுதியிலிருந்த நடமாடும் கிராமியப் பாடகர் குழுவினர், இப்பாடலை ஐரோப்பாவின் பல இடங்களுக்கும் எடுத்துச் சென்று பாடினார்கள்.  பிரபல ஸ்ட்ரேசர் குழுவினர்,  இப்பாடலை 1831-ம் ஆண்டு ஜெர்மனியின் லீட்சிக் நகரக் கண்காட்சி விழாவில் பாடிப் பிரபலப்படுத்தினர்.  அதன்பின் இப்பாடல், ""கிராமியப் பாடல்"" என்ற தலைப்பில், அச்சிடப்பட்டு வெளிவந்தது.  பின்னர், "ரெயினர்" என்ற பிரபல பாடகர் குடும்பம்,

1839-ம் ஆண்டு, இப்பாடலை அமெரிக்காவின் பல பட்டணங்களில் பாடி, உலகெங்கும் பரவ வழிவகுத்தனர்.

தாங்கள் இயற்றி இசையமைத்த இப்பாடல், உலகப் புகழ்பெற்றுவிட்டதை, மோஹ்ரும், கிரப்பரும் சிறிதும் அறியாதிருந்தனர்.  இந்நிலையில் பங்குத் தந்தை மோஹ்ர், 1848-ம் ஆண்டு, நிமோனியாக் காய்ச்சலினால் மரித்தார்.   இப்பாடல் உருவானதின் பின்னணியை, கிரப்பர் 1854-ம் ஆண்டு பெர்லினுக்குக் கடிதம் எழுதித் தெரிவித்தார்.  முதலில் ஏற்க மறுத்த சமுதாயம், இப்பாடலுக்கு இசை அமைத்த கிரப்பரும் 1863-ம் ஆண்டு மறைந்தபின், இவ்வுண்மையை ஏற்றுக் கொண்டது.  ஆஸ்திரியாவில் இவ்விருவருக்கும் நினைவுச் சின்னம் அமைத்துக் கௌரவித்தது.

1863-ம் ஆண்டு, அமெரிக்காவின் பிளாரிடா மாநிலப் பேராயர் ஜான் பிரீமன் யங், இப்பாடலின் மூன்று சரணங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.  கிறிஸ்மஸ் பாடல்களின் சிறப்பு நிபுணரான வில்லியம் ஸ்டட்வெல் இப்பாடலை "'கிறிஸ்மஸ் பண்டிகையின்  இசைச் சின்னம் "' என்று வர்ணிக்கிறார்.

கிறிஸ்மஸ் நள்ளிரவில் அமைதிப்பாடலாக, முதன்முறையாக அறிமுகமான இப்பாடல், பின்னர் இப்பரம அமைதியை போர்க்களங்களிலும் கூட அளித்தது. 1914-ம் ஆண்டு, போர்முனையில் கிறிஸ்மஸýக்காகக் கொடுக்கப்பட்ட இடைவேளையில்,  ஜெர்மானியப் போர்வீரர்கள் இப்பாடலைத் தங்கள்  பாதுகாப்புக் குழிகளிலிருந்து பாட ஆரம்பித்தனர்.  உடனே, அதின் எதிரொலியாக, எதிர்த்தரப்புக் குழிகளிலிருந்து, ஆங்கிலேயப் படை வீரர்களும், இப்பாடலை அவர்களோடு  இணைந்து பாடினர்.

அதே யுத்த நாட்களில், சைபீரியாவின் சிறைக்கைதிகள் முகாமில், ஜெர்மானிய, ஆஸ்திரிய, ஹங்கேரிக் கைதிகள் அனைவரும் சேர்ந்து இப்பாடலைப் பாடினார்கள்.  அதைக் கேட்டுக்கொண்டிருந்த ரஷ்யச் சிறை அதிகாரி, பாடல் முடிந்தவுடன், தனக்குத் தெரிந்த அரைகுறை ஜெர்மன் மொழியில்,''கடந்த ஓராண்டில், முதன்முறையாக, இன்றிரவுதான் நான் உங்களை, ''என் எதிரிகள்'' என்ற எண்ணத்தை மறந்து, மனிதர்களாகப் பார்க்கிறேன்'' என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.