எந்தன் ஆத்ம நேசரே
(Jesus, Lover of my soul)
பாடல் பிறந்த கதை
1881-ம் ஆண்டு ஒரு சுற்றுலாக்குழு வட அமெரிக்காவில் வாஷிங்டனிலிருந்து போட்டோமாக் நதியில் பயணம் செய்து கொண்டிருந்தது. அழகான இயற்கைக் காட்சிகளை ரசித்தவண்ணம், அக்குழுவிலிருந்த ஒருவர் இப்பாடலைப் பாட ஆரம்பித்தார். இரண்டு சரணங்களைப் பாடி முடிக்குமுன், அப்படகிலிருந்த, அவருக்கு அறிமுகமில்லாத ஒருவர், அவரிடம் வந்து, "மன்னிக்கவும்; கடந்த யுத்தத்தில் நீங்கள் பணிபுரிந்தீர்களா?" என்று கேட்டார். பாடியவர், "ஆம்; ஜெனரல் கிராண்ட் தலைமையில் பணிபுரிந்தேன்." என்றார்.
அப்போது அந்த மனிதர், "நான் தென்ராணுவத்தில் பணி செய்தேன். 18 ஆண்டுகளுக்கு முன், இதே மாதம், ஒரு நாள் இரவில், நல்ல நிலா வெளிச்சத்தில், உங்களுக்கு வெகு அருகில் மறைந்திருந்தேன். அன்று இரவு நீங்கள் காவல் பொறுப்பிலிருந்தீர்கள். நான் என் கையிலிருந்த துப்பாக்கியுடன் உங்களை நெருங்கினேன். நீங்கள் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தவாறு இப்பாடலைப் பாடிக் கொண்டிருந்தீர்கள். நான் என் துப்பாக்கியை எடுத்துக் குறிபார்த்தபோது, அச்சமயம் நீங்கள், 'ஏதுமற்ற ஏழையை (பாதுகாப்பற்ற என் தலையை) செட்டையாலே மூடுவீர்' என்ற வரியைப் பாடினீர்கள். அதைக் கேட்ட என்னால், உங்களைச் சுடமுடியவில்லை. உங்கள் முகாமைத் தாக்காமல் நாங்கள் விட்டுச் சென்றோம்" என்றார்.
இதைக் கேட்ட பாடகர், அவர் கையைக் குலுக்கி, "அந்த இரவை நான் நன்கு அறிவேன். இரவு காவல் வேலைக்குச் செல்லும்போது, நான் மிகவும் சோர்வுற்றிருந்தேன். அந்த இடம் மிகவும் அபாயகரமானது என அறிந்திருந்தேன். எனவே, உலாவிக்கொண்டிருந்த அவ்வேளையில், என் மனக்கண்முன் என் குடும்பமும், என் நண்பர்களும் தோன்றினார்கள். அத்துடன் இறைவனின் பாதுகாப்பையும் எண்ணினேன். உடனே இப்பாடலைப் பாடினேன். இப்போது உங்களை சந்திக்கும் வரை, என் ஜெபத்திற்கு ஆண்டவர் இவ்வாறு பதிலளித்தார் என்றே எனக்குத் தெரியாது." என்று கூறினார்.
உலகெங்கும் பிரபல்யமான இப்பாடலை எழுதியவர் சார்லெஸ் வெஸ்லி. இவர் மெதடிஸ்ட் திருச்சபையை ஸ்தாபித்த பிரபல பிரங்கியார் ஜான் வெஸ்லியின் சகோதரராவார். இவரது தந்தை சாமுவேல் வெஸ்லி எப்வொர்த்தின் திருச்சபைப் போதகராகப் பணியாற்றினார். சாமுவேல் வெஸ்லியும் அவர் மனைவி சூசன்னாளும் ஏழ்மையில் குடும்பத்தை நடத்தினாலும், தங்கள் பிள்ளைகள் நன்றாகப் பாடுவதற்கு பயிற்சி அளித்துவந்தார்கள். இப்படிப்பட்ட சங்கீத சூழலில் வளர்ந்ததால், சார்லெஸ் வெஸ்லி பெரியவனானபோது, 6500 - க்கும் அதிகமான பாடல்களை எழுத முடிந்தது.
சார்லெஸ் எழுதிய பாடல்கள் அனைத்திலும், இப்பாடல் முதன்மையானதாக சிறந்து விளங்குகிறது. டாக்டர் போடைன் இப்பாடலை, "ஆங்கில மொழியின் இதய கீதம்" என்று கூறுகிறார். இப்பாடல் எண்ணற்ற மக்களுக்கு ஆறுதலையும், ஆவியில் உற்சாகத்தையும் அளித்துள்ளது. மரணத் தறுவாயிலிருந்த பலர், இப்பாடலைப் பாடியபடியே, நிறைவான சமாதானத்துடன் இவ்வுலகைக் கடந்து சென்றனர். எளிமையான, முழுமையான, கருத்து நிறைந்த, உயிரூட்டும் பாடலாக இது விளங்குகிறது. எனினும், இப்பாடலை எழுதியவுடன், சார்லெஸ் தன் சகோதரன் ஜான் வெஸ்லியிடம் காட்டியபோது, அவர் "இப்பாடல் மிகவும் உணர்ச்சிவசப்பட வைக்கிறது" என்று கூறி நிராகரித்துவிட்டார். எனவே, சார்லெஸ் வெஸ்லி வாழ்ந்த நாட்களில் இப்பாடல் பிரபலமாகவில்லை.
ஜானும் சார்லெசும் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்தனர். அந்நாட்களில், மாணவ சமுதாயம் ஆவிக்குரிய காரியங்களில் நாட்டம் காட்டவில்லையே என்று வருந்திய இச்சகோதரர்கள், "பரிசுத்தர் குழு" என்ற குழுவை ஆரம்பித்தனர். இக்குழுவின் அங்கத்தினர்கள் எல்லாக் காரியங்களையும் ஒழுங்கும் கிரமமுமாய் செய்வதைப் பார்த்த மற்ற மாணவர்கள், அவர்களை "மெதடிஸ்டுகள்" என்று கேலியாக அழைத்தனர்.
படிப்பை முடித்த சார்லெஸ், 1735-ல் இங்கிலாந்து திருச்சபையின் போதகராக நியமிக்கப்பட்டார். பின்னர் அமெரிக்காவின் ஜார்ஜியா குடியிருப்புகளில் வாழும் மக்களின் ஆவிக்குரிய மறுமலர்ச்சிக்கெனவும், அங்குள்ள இந்தியரிடையே நற்செய்திப் பணியாற்றவும், இங்கிலாந்து திருச்சபை ஜானையும் சார்லெûஸயும் அனுப்பி வைத்தது. அந்நாட்களில் இவர்கள் ஊழிய வாஞ்சை நிறைந்தவர்களாக இருந்தாலும், இயேசு கிறிஸ்துவைத் தங்கள் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்ட அனுபவம் இவர்களுக்கு இல்லை.
இந்நிலையில் அவர்கள் அட்லாண்டிக் மகா சமுத்திரத்தைக் கடந்து கொண்டிருந்த போது, அவர்களோடு பயணம் செய்த "ஜெர்மானிய மொரோவியர்கள்" என்ற குழுவின் மூலம் அவர்களுக்கு ஒரு அனுபவம் கிடைத்தது. உற்சாகமாக எப்போதும் பாடிக்கொண்டிருந்த அந்த விசுவாசிகளின் ஆவிக்குரிய வளர்ச்சி நிலையை, எதிர்பாராதவிதமாக அவர்கள் சந்தித்த கடும்புயலின் மூலம் அறிந்தனர்.
கப்பலில் ஆராதனையை ஆரம்பித்து சங்கீதங்களைப் பாடும்போது கடல் கொந்தளித்து பாய்மரத்தை உடைத்தது. தண்ணீர் உள்ளே வர ஆரம்பித்தது. உடனே, ஆராதனையிலிருந்த ஆங்கிலேயர் அனைவரும், உரத்த சத்தமாய் அலறி ஓலமிட்டனர். ஆனால், மொரோவியர்கள் புயலின் கொடூரத்தைப் பார்த்தும் கூட, சங்கீதம் பாடுவதை நிறுத்தாமல் தொடர்ந்தனர். புயல் ஓய்ந்தபின், வெஸ்லி சகோதரர்கள் அவர்களிடம், "உங்களுக்குப் பயமாக இருக்கவில்லையா?" என்று கேட்டனர். அதற்கு அவர்கள், "இல்லை." என்று பதில் கூறி, ஆண்டவருக்கு நன்றி செலுத்தினார்கள்.
வெஸ்லி சகோதரரின் அமெரிக்க ஊழியம் வெற்றிகரமாக நடைபெறவில்லை. எனவே, சோர்வுற்ற அவர்கள், சீக்கிரமே இங்கிலாந்து திரும்பினார்கள். அப்பொழுது, மீண்டுமாக, பக்தி வைராக்கியம் மிகுந்த மொரோவியர் குழுவினரை, லண்டனிலுள்ள ஆல்டெர்ஸ்கேட்டில் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றனர்.
1738-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி, இச்சகோதரர்கள் ரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்று, புத்துணர்ச்சி பெற்றனர். தேவ ஆவியின் வல்லமையால், தினமும் 15 முதல் 18 மணி நேரத்தை ஆண்டவருடைய ஊழியத்திற்கென செலவிட்டனர்.
இங்கிலாந்தில் மட்டும், 1739 முதல் 1756-க்குள் சுமார் 2,50,000 மைல்கள் குதிரைகளில் பயணம் செய்து,
40,000-க்கும் மேற்பட்ட நற்செய்திக்கூட்டங்களை நடத்தினார்கள். எதிர்ப்புகள் பெருகின சூழ்நிலைகளிலும், சோர்ந்து போகாமல் தொடர்ந்து ஊழியம் செய்தனர். இடைவெளியின்றி அயராது உழைத்த இந்நாட்களில், சார்லெஸ் இவ்வளவு பாடல்களை எழுதினார் என்பது அவரின் ஊழிய தாகத்தைக் காட்டுகிறது. பாடல் எழுதுவதில் அவருக்கிருந்த வாஞ்சையை அவர் கூறிய, பின்வரும் சம்பவத்திலிருந்து நாம் அறியலாம்:
ஒரு நாள் சார்லெஸ் குதிரையிலிருந்து தூக்கி எறியப்பட்டார். தலை, கை கால்களில் அடிபட்ட அவர், அதிர்ச்சியால் அந்த நாள் முழுவதும் அசையாமல் படுக்கையில் இருந்தார். மறுநாள் காலையில் விழித்த அவர், "ஒரு பாடலும் எழுதாமல் ஒரு நாளைக் கழித்து விட்டேனே!" என்று வருந்தினாராம்.
இப்பாடல் எழுதப்பட்ட சூழ்நிலையைப் பற்றிப் பல கதைகள் உண்டு. உணர்ச்சி ததும்பும் இப்பாடலுக்கேற்றதாக, ஒரு புறாவோ, கழுகோ புயலிருந்து தப்ப அடைக்கலம் தேடி, சார்லெஸ் தங்கியிருந்த கப்பலறையில், அவர் மார்பில் தஞ்சம் புகுந்தது என்று ஒரு கதை கூறப்படுகிறது. வேறு சிலர், சார்லெஸ் எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்டு, குணமடைய இளைப்பாறிய நாட்களில் அவர் எழுதியதாகக் கருதுகின்றனர். மற்றும் சிலர் ஆல்டெர்ஸ்கேட் ரட்சிப்பின் அனுபவ நாட்களில் உள்ளமுருக இப்பாடலை எழுதினார் என்று எண்ணுகிறார்கள்.
எனினும், தன் வாழ்வின் ஆரம்ப கால அனுபவங்களின் அடிப்படையில், நெகிழ்ந்த உள்ளத்தின் உணர்ச்சிக் குவியலாக இப்பாடலை சார்லெஸ் எழுதினார். 1740-ம் ஆண்டு வெளிவந்த, "பாடல்களும் புனித கவிதைகளும்" என்ற புத்தகத்தில் இப்பாடல் இடம் பெற்றது. இது தொடர்பான அவரது ஆரம்ப கால அனுபவங்களில் முக்கியமான மூன்றை நாம் பார்ப்போம்:-
முதலாவதாக, 1736-ம் ஆண்டு அமெரிக்காவில் கவர்னர் ஓகில்தோர்ப்புக்கு செயலாளராக இருந்த சார்லெஸ், அவரோடு ஒத்துப்போக முடியாத காரணத்தால் தன் பதவியை இழந்தார். உடலிலும் உள்ளத்திலும் சோர்வுற்று, ஜார்ஜியாவிலிருந்து இங்கிலாந்து திரும்பும் வழியில், அவர் பயணம் செய்த கப்பல் கடும்புயலில் சிக்கியது. உயிர் தப்புவோம் என்ற நம்பிக்கையை இழந்து சார்லெஸ் தவித்துப்போனார். அவர் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்த இச்சம்பவத்தின் அடிப்படையில், இப்பாடலின் முதலிரண்டு சரணங்கள் அமைந்துள்ளன.
இரண்டாவதாக, அவர் 21-5-1738 அன்று ஆல்டெர்ஸ்கேட்டில் பெற்ற ஆவிக்குரிய புத்தெழுச்சி அனுபவம், சார்லெசின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அந்நாட்களில் அவர் அடிக்கடி சுகவீனப்பட்டுக் கொண்டிருந்தார். குறிப்பாக, அவர் இரட்சிப்பின் அனுபவம் பெற்ற நாளன்று, தன் விடுதி அறையில் மிகுந்த பெலவீனத்துடன் படுத்திருந்தார். அப்போது ஒரு தரிசனத்தின் மூலம், ஆண்டவர் அவரைத் தேற்றி, அற்புத சுகமளித்தார். அந்நேரமே அவர் புது பெலனடைந்தார். இப்பாடலின் மூன்றாம், நான்காம் சரணங்கள் இதைக் குறிப்பிடுகின்றன.
கடைசியாக, நியூகேட் சிறைக்கைதிகள் மத்தியில் அவர் ஊழியம் செய்தபோது அக்கைதிகளின் அவல நிலை சார்லெஸின் உள்ளத்தை வாட்டியது. குறிப்பாக 1738-ம் ஆண்டு ஜுலை மாதம், அங்கிருந்த 10 கைதிகள் ஆண்டவரை ஏற்றுக்கொண்டு, இரட்சிப்பின் அனுபவம் பெற்றவர்களாக, டைபர்ன் குன்றில் தூக்கிலிடப்பட்டபோது, அவர் உள்ளம் நெகிழ்ந்தது.
இப்படிப்பட்ட ஆழ்ந்த அனுபவங்களே, இப்பாடலை எழுத சார்லெûஸத் தூண்டின. நித்திய தேவனை அண்டி வாழ வேண்டுமென்ற மனிதனின் உள்ளக் கிளர்ச்சியை, இப்பாடல் தெளிவாகக் காட்டுகிறது. சிமியோன் B. மார்ஸ் என்பவர் அமைத்த, "மார்டின்" என்ற ராகத்தை தாமஸ் ஹேஸ்டிங்ஸ் என்பவர் இப்பாடலுடன் இணைத்தார்.