ஈனச் சிலுவை என் மேன்மையே
(The Old rugged cross)
பாடல் : ஜார்ஜ் பென்னார்டு
பாடல் பிறந்த கதை
நிந்தனை வேதனைச் சின்னமே;
உலகின் பாவத்தைச் சுமந்து தீர்க்கவே
இறை மைந்தன் தம்மை ஈந்தாரே.
ஈனச் சிலுவை என் மேன்மையே,
வெற்றியின் இறுதி வரை;
கிரீடமாய் மாறிடும் நாள் வரை
நம்பிப் பற்றிடுவேன் அதையே.
2. உலகோர் வெறுக்கும் ஈனச் சிலுவையே
என்னைக் கவர்ந்திடும் தியாகமே;
மகிமை துறந்த தெய்வ ஆட்டுக்குட்டி
கொல்கொதா மலைக்கே சுமந்தார்.
-ஈனச் சிலுவை
3. அழகாய் நிற்குதே ஈனச் சிலுவையே
தூய ரத்தக் கறை படிந்தே;
வேதனை சகித்து மரித்த இயேசென்னை
மன்னித்தே தூயனாக்கினாரே
-ஈனச் சிலுவை
4. ஈனச் சிலுவைக்கே நன்றியுள்ளவனாய்
அதின் நிந்தனையைச் சுமப்பேன்;
நித்திய வீட்டிற்கே என்னை அழைப்பாரே
பெறுவேன் அவரின் மகிமை.
-ஈனச் சிலுவை
பெரிய வெள்ளிக் கிழமை மும்மணி ஆராதனை!
ஆலயம் நிரம்பி வழிகின்றது. சிலுவைக் காட்சியின் அடிப்படையில் செய்திகள் தொடர்ந்து கொடுக்கப்படுகின்றன.
"என்ன? கிறிஸ்தவர்கள் விக்கிரகத்திற்குப் பதிலாக சிலுவையை வணங்குகிறார்களோ?"
தப்புக் கணக்குப் போடவேண்டாம்! சிலுவைக் காட்சியின் மையக் கதாநாயகனான, தியாகச் செம்மல் இறைமகன் இயேசுவையே தியானம் செய்கிறோம். ஆம், இறைவனின் தியாக அன்பை அறிய, சிலுவைத்தியானம் அவசியமே. இதன் அருமையை அறிந்த பவுல், "ரோமர்களும் மற்றவர்களும் கீழ்த்தரமாக மதித்த இந்த ஈனச் சிலுவையைக் குறித்தே மேன்மை பாராட்டுவேன்", என்று வெற்றிப் பெருமிதம் கொள்ளுகிறான்.
எனவே, 20-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த பாடலாகிய இப்பாடலும், சிலுவையின் பின்ணணியில் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. பாடுகள் நிறைந்த தன் வாழ்க்கையின் பிரச்சனைகளின் மத்தியில், ஆறுதலைத் தேடி, சிலுவைத்தியானத்தை மேற்கொண்ட, ஒரு தேவ மனிதனின் உள்ளத்தில் எழுந்ததே இப்பாடலாகும்.
இப்பாடலை எழுதிய ஜார்ஜ் பென்னார்டு 1873 - ம் ஆண்டு ஓகியோவிலுள்ள யங்ஸ்டவுனில் பிறந்தார். பின்னர் அயோவாவிலுள்ள லூக்காஸ் என்ற ஊரில் சிறுவனாக இருக்கும்போதே, இயேசு கிறிஸ்துவைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்டார். பதினாறு வயதாகுமுன்பே தந்தையை இழந்தார். உடனே இரட்சண்ய சேனையில் சேர்ந்தார்.
பென்னார்டு மெதடிஸ்ட் சபை போதகராக சிறப்பாக ஊழியம் செய்தார். பின்னர் மிச்சிகன், நியூயார்க் மாநிலங்களில் உயிர் மீட்சிப்பணியில் ஈடுபட்டார். மீண்டும் மிச்சிகனுக்கு வந்த அவர், கடினமான சூழ்நிலையில் சிக்கித் தவித்தார். அந்நாட்களில் கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளைப் பற்றி, பவுல் எழுதிய வேத வசனங்களை தியானித்தார். சிலுவையைப் பற்றிய உபதேசம், நற்செய்தியின் மையக் கருத்தாக இருப்பதை பென்னார்டு உணர்ந்தார்.
இச்சிலுவைத் தியானங்களின் போது, 1913-ம் ஆண்டு ஒரு நாள் இப்பாடலை எழுத ஆரம்பித்தார். அதை எழுதியவுடன், தன் சொந்த வாழ்க்கைப் பிரச்சனைகளைச் சந்திக்கவே, தேவன் இப்பாடலைக் கொடுத்ததாக எண்ணினார். பின்னர் 7.6.1913 அன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் இப்பாடல் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் சிக்காகோ நற்செய்திக் கல்லூரியில் நடைபெற்ற கூட்டங்களில் பாடப்பட்டு பிரபலமானது.
இப்பாடலின் ராகத்தையும் பென்னார்டே அமைத்தார். உலகப்பிரசித்தி பெற்ற இப்பாடலை எழுதிய பென்னார்டு, 85-ம் வயதில், 9.10.1958 அன்று, தனது இவ்வுலக வாழ்வின் சிலுவையை, பரலோகத்தின் பொற்கிரீடமாக மாற்றிக் கொண்டார். எனவே, சிலுவைத் தியானம் நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது, என்பதை இப்பாடலின் மூலம் உணர்ந்து கொள்வோமா?