இயேசென்னை நேசிக்கிறார்
(Jesus loves even me)
பாடல் : பிலிப் ட. பிளிஸ்
பாடல் பிறந்த கதை
அவர் தந்த வேதத்தில் வாசிக்கின்றேன்;
அதிசயமானவை அதிலே உண்டு;
இயேசென்னை நேசிப்பது நிச்சயம்.
மகிழுவேன்! நேசிக்கிறார்!
நேசிக்கிறார்! நேசிக்கிறார்!
மகிழுவேன்! நேசிக்கிறார்!
இயேசென்னை நேசிக்கிறார்!
தூரமாய் விலகிச் சென்றபோதும்
தேடித் தொடர்ந்ததே தேவ அன்பு;
நேசிக்கும் அன்பரை நான் நினைத்தே
நேசக் கரத்தில் தஞ்சம் புகுவேன்.
- மகிழுவேன்
ராஜாதி ராஜனைக் காணும்போது
பாடலொன்று மட்டும் பாடச் சொன்னால்,
இயேசென்னை நேசிக்கும் அற்புதத்தை
நித்தியத்தில் நானும் பாடிடுவேன்
- மகிழுவேன்
நவயுக ஞாயிறுபள்ளிகளின் தந்தை என அழைக்கப்படும் ராபர்ட் ரேய்க்ஸின் ஊழியங்கள் மூலம், 18ம் நூற்றாண்டில், சிறுவர் சுவிசேஷ நற்பணியின் முக்கியத்துவத்தை திருச்சபை உணர்ந்தது. இச்சிறுபிள்ளைகளின் ஊழியத்தை, பாடல்களின் மூலமே சிறப்பாகச் செய்ய முடியும் என்பதையும், திருச்சபை நன்கு கண்டு கொண்டது.
இத்தேவையைச் சந்திக்க, 19-ம் நூற்றாண்டின் நற்செய்தி இசை வல்லுனர்களான சாங்கி, பேனி கிராஸ்பி, மற்றும் பிலிப் ட. பிளிஸ் ஆகியோர் பல பாடல்களை சிறுவர்களுக்கென்றே இயற்றினார்கள். வேத போதனைகளை சிறுபிள்ளைகள் கற்றுக்கொள்ள இப்பாடல்கள் பெரிதும் உதவின. "இப்பாடலாசிரியர்களில், குறிப்பாக, நற்செய்தியின் அடிப்படைச் சத்தியங்களை அழகாகப் பாடக்கூடிய வகையில் பாடலமைப்பதில் சிறந்த தாலந்து படைத்தவர், பிளிஸ்ûஸப்போல் வேறு எவருமில்லை", என அவரது இசைத்துறை நண்பர் ஜார்ஜ் இ. ஸ்டெப்பின்ஸ் கூறியிருக்கிறார்.
ஒருமுறை, பிளிஸ் ஒரு கூட்டத்தில், "நான் இயேசுவை எவ்வளவாய் நேசிக்கிறேன்", என்ற பல்லவியை மீண்டும் மீண்டும் பாடக் கேட்டுக்கொண்டேயிருந்தார். அப்பொழுது அவர் உள்ளத்தில் ஒரு கேள்வி எழுந்தது. "என் ஆண்டவரின் நித்திய அன்பைப் புகழ்ந்து பாடாமல், அவரிடம் நான் வைத்திருக்கும் சாதாரண அன்பை மீண்டும் மீண்டும் பெரிதாகப் பாடுவதேன்"? என்பதே. இந்தக் கேள்வியின் அடிப்படையில் தான், இப்பாடல் அவர் உள்ளத்தில் உருவானது.
இந்த அழகான பாடல் எழுதப்பட்டவுடனே, சீக்கிரத்தில், பல நாடுகளிலும் பிள்ளைகள் விரும்பிப் பாடும் பாடலென சிறப்புப் பெற்றது. சிறுவர் ஊழியத்தில் வாஞ்சை மிக்க பிளிஸ், அனைத்து ஞாயிறு பள்ளிகளின் உபயோகத்திற்கென்றே, 1871 - ம் ஆண்டு "ஞாயிறு பள்ளிகளின் அலங்காரம்", என்ற தலைப்பில் ஒரு சிறுவர் பாடல் புத்தகத்தை வெளியிட்டார். இப்புத்தகத்தில் இந்தப் பாடல் சேர்க்கப்பட்டது. இப்பாடல் இன்றும் சிறுவர் விரும்பிப் பாடும் பாடலாக விளங்குகிறது.