இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்
(Blessed Assurance)
பாடல் பிறந்த கதை
தேவகுமாரன் இரட்சை செய்தார்;
பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார்.
இயேசுவைப் பாடி போற்றுகின்றேன்;
நேசரைப் பார்த்து பூரிக்கின்றேன்;
மீட்பரை நம்பி நேசிக்கின்றேன்;
நீடூழி காலம் ஸ்தோத்தரிப்பேன்.
2. அன்பு பாராட்டி காப்பவராம்;
எந்தனைத் தாங்கி பூரணமாய்,
இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்;
இன்னும் நீங்காமல் பாதுகாப்பார்.
- இயேசுவைப் பாடி
3. மெய்ச் சமாதானம் ரம்மியமும்,
தூய தேவாவி வல்லமையும்,
புண்ணிய நாதர் தந்துவிட்டார்;
விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார்.
- இயேசுவைப் பாடி
"இந்த ராகம் என்ன கூறுகிறது?"
"ஏன், 'இயேசு என்னுடையவர்', என்ற நல் உறுதியை எடுத்துரைக்கிறது!"
இசையை மீட்டிய தன் சிநேகிதியின் கேள்விக்கு தயக்கமின்றிப் பதிலுரைத்த பார்வையற்ற பாடலாசிரியை பேனி கிறாஸ்பி, தொடர்ந்து அப்பாடலையும் இசைக் கேற்றபடி துரிதமாக எழுத ஆரம்பித்தார்!
எட்டு வயதில் தனது முதல் கவிதையை எழுதிய பேனியின் உள்ளத்திலிருந்து, பாடல்கள் வெள்ளம் போல ஊற்றெடுத்து வந்து கொண்டேயிருந்தன. கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக, நற்செய்திப்பணி ஊக்க ஆராதனைகள் அனைத்திலும், விசுவாசிகள் விரும்பிப் பாடும் பாடல்கள் இவரது பாடல்களே. அவற்றிலும் இப்பாடல் மிக அருமையானது; பிரபலமானது; நம்பிக்கையின் நங்கூரமாக அமைந்துள்ளது.
திருமதி ஜோசப் நாப் ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவன ஸ்தாபகரின் மனைவியாவார். இவர் இசை வல்லுனர்; சிறந்த பாடலாசிரியையும் கூட; ஐநூற்றுக்கும் மேற்பட்ட நற்செய்திப்பாடல்களை இயற்றியவர்; இப்பாடலின் ராகத்தை அமைத்த இவர், தமது சினேகிதியாகிய பேனியிடம் வாசித்துக் காண்பித்த மாத்திரத்தில், பேனி இப்பாடலை மின்னல் வேகத்தில் இயற்றிக் கொடுத்தார்.
95 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்து, ஆண்டவரின் திருப்பாடல் ஊழியத்தை வாஞ்சையோடு செய்து முடித்த பேனி, 12.2.1915 அன்று மரித்தார். கனெக்டிகட்டிலுள்ள பிரிட்ஜ் போர்டில் அவரை அடக்கம் செய்தார்கள். பார்வையற்றவராக வாழ்ந்தாலும், ஆண்டவர் தனக்குத் தந்த தாலந்துகள் அனைத்தையும் முழுமையாக அவருடைய நாம மகிமைக்கென அர்ப்பணித்து உபயோகித்தார்.
எனவே, பேனியின் கல்லறையில், மரியாளைப் பாராட்டி ஆண்டவர் கூறிய, கீழ்க்கண்ட வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
"இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்" - மாற்கு 14:8
பேனி எழுதிய பாடல்களில், "போற்றும் போற்றும் புண்ணிய நாதரைப் போற்றும்", "இயேசுவே கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும்", "இயேசுவின் கைகள் காக்க", போன்ற பாடல்கள் இன்றும் உலகெங்கும் பிரபலமாக உபயோகத்தில் உள்ளன.