இயேசுவின் கைகள் காக்க
(Safe in the arms of Jesus)
பாடல் பிறந்த கதை
மார்பினில் சாருவேன்;
பேரன்பின் நிழல் சூழ
அமர்ந்து சுகிப்பேன்.
பளிங்குக் கடல் மீதும்
மாட்சி நகர் நின்றும்
தூதரின் இன்ப கீதம்
பூரிப்புண்டாக்கிவிடும்.
இயேசுவின் கைகள் காக்க
மார்பினில் சாருவேன்;
பேரன்பின் நிழல் சூழ
அமர்ந்து சுகிப்பேன்.
2. இயேசுவின் கைகள் காக்க,
பாழ் லோகின் கவலை
சோதனை பாவக் கேடும்
தாக்காது உள்ளத்தை;
கஷ்டம் துக்கம் கண்ணீரும்
காணாமல் நீங்குமே;
வதைக்கும் துன்பம் நோவும்
விரைவில் தீருமே.
- இயேசுவின்
3. இயேசு என் இன்பக் கோட்டை!
எனக்காய் மாண்டோரை
சார்ந்தென்றும் நிற்பேன், நீரே
நித்திய கன்மலை.
காத்திருப்பேன் அமர்ந்து
ராக்காலம் நீங்கிட,
பேரின்ப கரை சேர,
மாஜோதி தோன்றிட.
- இயேசுவின்
பொதுவாகவே, பாடல்களை முதலில் எழுதி, பின்னர் அதற்கேற்ற ராகம் அமைப்பது தான் வழக்கம். ஆனால் இதிலோ, ராகமொன்று பாடலைத் தேடி அழைத்ததாம்!
பிரபல அமெரிக்கப் பாடலாசிரியையான பேனி ஜேன் கிராஸ்பி தன் அறையில் ஒரு நண்பருடன் பேசிக்கெண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தோவன் என்ற புகழ்பெற்ற இசை வல்லுனர், பேனியைப் பார்த்து, "நான் ஒரு ராகத்தை அமைத்திருக்கிறேன். அதற்குப் பாடலை இயற்றித் தர இயலுமா?" என்று கேட்டார். அங்கிருந்த ஒரு சிறிய ஆர்மோனியத்தில், ராகத்தை அவர் வாசிக்கக் கேட்ட பேனி, "இந்த ராகம், 'இயேசுவின் கைகள் காக்க' என்று கூறுகிறதே!" என்று சொன்னார். அருகிலிருந்த அறைக்குள் நுழைந்த அவர், அரைமணி நேரத்திலேயே முழுப்பாடலையும் எழுதி முடித்துவிட்டார்!
பேனி நியூயார்க் நகரில், 1820-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தார். அவர் 6 வாரக் குழந்தையாய் இருந்தபோது தவறான மருத்துவ சிகிச்சையால் கண் பார்வையை நிரந்தரமாக இழந்தார். நியூயார்க்கிலுள்ள பார்வை இழந்தோர் பள்ளியில் படித்து, பின்னர் அங்கேயே ஆசிரியையுமானார். 1858 - ல் அலெக்சந்தர் வேன் என்ற கண் பார்வையற்ற பிரபல இசை ஆசிரியரை மணந்தார்.
பக்தி நிறைந்த வாழ்க்கை நடத்திய பேனி, தன் 40-வது வயதிற்குப் பின்னரே பாடல்கள் எழுத ஆரம்பித்தார். வாரத்திற்கு 3 பாடல்களாக மொத்தம் 8000 - க்கும் மேற்பட்ட நற்செய்திப் பாடல்களை எழுதினார். ஒவ்வொரு பாடலையும் எழுதுமுன், முழங்காலில் நின்று, தெய்வீக வழிநடத்துதலை வேண்டி ஜெபிப்பது அவரது வழக்கம். அநேக போதகர்கள் தங்கள் செய்திகளின் தலைப்பைக் கொடுத்து, அதற்கு ஏற்ற பாடலை எழுதுமாறு கேட்பார்கள். சில சமயங்களில் இப்படிப்பட்ட இசையாசிரியர்கள் முதலில் ராகத்தை அமைத்து, பாடலை எழுதவும் கேட்பதுண்டு.
பேனி தனது 95-வது வயது வரை வாழ்ந்தார். அவர் இயற்றிய பாடல்கள் அனைத்திலும், இப்பாடல் சிறந்ததாகக் கருதப்பட்டு உலகெங்கும் இன்றும் பாடப்படுகிறது.