அன்பே விடாமல் சேர்த்துக்கொண்டீர்
(O Love that wilt not let me go)
பாடல் பிறந்த கதை
சோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும்;
தந்தேன் என் ஜீவன் நீரே தந்தீர்
பிரவாக அன்பில் பாய்ந்தென்றும்
ஜீவாறாய்ப் பெருகும்.
2. ஜோதி! என் ஆயுள் முற்றும் நீரே;
வைத்தேன் உம்மில் என் மங்கும் தீபம்;
நீர் மூட்டுவீர் உம் ஜோதியாலே;
பேர் ஒளிக்கதிரால் உள்ளம்
மேன்மேலும் ஸ்வாலிக்கும்.
3. பேரின்பம் நோவில் என்னைத் தேடும்!
என் உள்ளம் உந்தன் வீடே என்றும்;
கார்மேகத்திலும் வான ஜோதி!
"விடியுங்காலை களிப்பாம்!"
உம் வாக்கு மெய் மெய்யே.
4. குரூசே! என் வீரம் திடன் நீயே;
உந்தன் பாதம் விட்டென்றும் நீங்கேன்;
வீண்மாயை யாவும் குப்பை நீத்தேன்;
விண் மேனியாய் நித்திய ஜீவன்
வளர்ந்து செழிக்கும்.
இப்பாடலை எழுதத் தன்னைத் தூண்டிய நிகழ்ச்சிகளைப் பற்றி டாக்டர் ஜார்ஜ் மதீசன் இவ்வாறு கூறுகிறார்:
"1882 - ம் ஆண்டு ஜீன் மாதம் ஆறாம் தேதி இனெல்லத்தில் இப்பாடலை எழுதினேன். அன்று என் சகோதரிக்கு கிளாஸ்கோவில் திருமணம் நடைபெற்றது. எனவே, என் உறவினர் அனைவரும் அங்கே தங்கியிருக்க, நான் மட்டும் தனித்து விடப்பட்டவனாக, தனிமையில் இருந்தேன். அப்போது தான் அந்த பயங்கர துயர அனுபவம் எனக்கு நேரிட்டது. நான் மட்டுமே அறிந்த, அந்த துயர அனுபவம் என்னை மிகவும் வாட்டியது.
மிகவும் சஞ்சலப்பட்டு, சோர்வுற்ற மனநிலையில், தனித்து விடப்பட்ட அந்த சூழ்நிலையில் தான், இப்பாடல் என் உள்ளத்தில் உருவானது. அதை நான் எழுதினேன் என்று சொல்வதைக் காட்டிலும், என் உள்ளத்தில் பேசிய ஒரு குரல், வார்த்தைகளைச் சொல்லச்சொல்ல, அவற்றை அப்படியே, என் கை ஒரு தாளில் துரிதமாக எழுதிவிட்டது. பாடல் முழுவதையும் எழுதி முடிக்க, மொத்தம் ஐந்தே நிமிடங்கள் தான் ஆயின. பொங்கி வரும் நீரூற்றைப் போல என் உள்ளத்தில் கொடுக்கப்பட்ட இப்பாடலை, நான் மேலும் மெருகேற்றத் தேவை ஒன்றுமில்லாமல், தனிப் பொலிவுடன் அமைந்திருந்தது.
இப்படிப்பட்டதோர் சிறந்த அனுவத்தை என் வாழ்நாளில் நான் அதன்பின் பெற்றதேயில்லை."
சிறுவயதிலேயே கண்பார்வை குறைவுபட்ட மதீசனுக்கு, மருத்துவர்கள் சரியான சிகிச்சை அளிக்காததால், தனது 18-வது வயதிலேயே பார்வையிழந்தார். இப்பெருங்குறையுடனும் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் சிறந்த மாணவனாகத் தேறி, தனது 19வது வயதிலேயே பட்டம் பெற்றார். 1866-ம் ஆண்டு, தனது 24-ம் வயதில், உதவிகுருவாக பொறுப்பேற்று, பின் இரண்டு ஆண்டுகளில் இனெல்லம் என்ற இடத்திலுள்ள சிற்றாலயத்தின் போதகரானார்.
இனெல்லத்தில் 18 ஆண்டுகள் திறமையாகப் பணியாற்றி, "சிறந்த பிரசங்கியார்" என்ற மதிப்பும் பாராட்டும் பெற்றார். திருமறைக்கட்டுரைகள் பல எழுதி, திருச்சபை மக்களின் அன்பையும் பேராதரவையும் பெற்றார். இதையறிந்த இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி, அவரைத் தன் பால்மோரல் கோட்டை அரண்மனை ஆலயத்தில் தேவ செய்தியளிக்க அழைத்தார். மதீசனின் செய்தியால் புத்துணர்ச்சி பெற்ற ராணி அவருக்கு நன்றி கூறினார்.
பின்னர் 1886-ம் ஆண்டு எடின்பர்கில் உள்ள, 2000 அங்கத்தினர்களைக் கொண்ட தூய பெர்னார்டு பேராலயத்திற்குப் போதகராக நியமிக்கப்பட்டார்.
1899 - ம் ஆண்டில் அவர் ஓய்வு பெறும் வரை அந்த ஆலயத்தில் மிகச் சிறப்பாக ஊழியம் செய்தார். அவரது கிறிஸ்தவ இலக்கியத் தொண்டு அவர் ஓய்வு பெற்ற பின்னரும் தொடர்ந்தது.
இப்பாடலுக்கு இசை அமைத்ததும் ஒரு வித்தியாசமான அனுபவம் தான். 1885 - ம் ஆண்டு, ஸ்காட்லாந்து தேசத்தின் அசான் கடற்கரை மணலில் உட்கார்ந்து, டாக்டர் ஆல்பர்ட் லிஸ்டர் பீஸ் இப்பாடலை வாசித்துக் கொண்டிருந்தார். திடீரென்று அவர் உள்ளத்தில் தொனித்த ராகத்தை, அப்படியே சில நிமிடங்களில் எழுதி முடித்துவிட்டார்.