பாடல் பிறந்த கதை
17.09.1997 அன்று மதியம் 2 மணி.
''கடல் மட்டத்திலிருந்து மிக ஆழமான நிலப்பரப்பு'' என்று கூறப்படும் சவக்கடலின் கரையோரம், ''தம்பி ! என் பைபிள் கீழே விழுந்திருச்சு. எடுத்துக் கொடு.'' தனது விலையுயர்ந்த பொக்கிஷமாக, தன் வாழ்நாள் முழுவதும் கையை விட்டுப் பிரியாதிருந்த, தன் வேத புத்தகத்தை இழந்த அந்தப் பெரியவரின் கடைசி வார்த்தைகள் அவை. ஆம், அத்துடன் வானகத்தின் வார்த்தையானவருடன் சேர்ந்து விட்டார். இந்தியக் கிறிஸ்தவ இன்னிசையின் சிறப்புக் கலைஞர் AJR. சத்யா!
''கிரேஸ் லாட்ஜ் ஆர்க்கெஸ்ட்ரா'' என்றும், பின்னர் ''ஹெலன் சத்யா குழுவினர்'' என்றும் கிறிஸ்தவ சமுதாயத்தில் சிறந்த இசைத் தொண்டாற்றிய இசைக்குழுவின் தலைவரான சத்யா, 12.02.1925 அன்று சென்னையில் பிறந்தார். ஆயினும், அவரது பெற்றோர், பாலசிங்கம் சத்யா-பீட்ரிஸ் அன்னலட்சுமி தம்பதியருக்கு, தூத்துக்குடிக்கு அருகிலுள்ள சேர்வைகாரன்மடம் தான் சொந்த ஊராகும். சத்யா வேப்பேரி தூய பவுல் பள்ளியில் படித்து, தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் முதுநிலைப் பட்டம் பெற்று, பின்னர் சட்டக்கல்லூரியிலும் பயின்று வழக்கறிஞரானார்.
சத்யாவின் பெற்றோர் ஊழிய வாஞ்சை நிறைந்தவர்கள். 1940-ம் ஆண்டுக்கு முன்பே, நானூறுக்கும் அதிகமான பிள்ளைகள் கொண்ட கிரேஸ் லாட்ஜ் ஞாயிறு பள்ளியைத் தங்கள் வீட்டு வளாகத்தில் நடத்தி வந்தார்கள். ஆனால், வாலிபனான சத்யாவோ ஆண்டவரைத் தன் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ள விருப்பமின்றி, தன் இசைப் பயிற்சியில் ஆர்வத்துடன், முழுமுயற்சியோடு ஈடுபாடுகொள்ள ஆரம்பித்தான். லண்டன் திரித்துவ இசைக் கல்லூரியின் ACTL என்ற இசைக்கலைஞர் பட்டமும் பெற்றான். தன் சகோதரர்கள், உறவினர், மற்றும் நண்பர்களைக் கூட்டிச் சேர்த்து, ''கிரேஸ் லாட்ஜ் ஆர்க்கெஸ்ட்ரா'' வை 1947-ம் ஆண்டு ஆரம்பித்தான். எந்தவிதப் பாடல்களையும் தடையின்றி உற்சாகமாய்ப் பாடிவந்த இக்குழுவிற்கு, இறைவனின் திட்டம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை.
ஆயினும், பிறப்பதற்கு முன்பே முன்குறித்துப் பெயர் சொல்லி அழைக்கும் ஆண்டவர், சத்யாவின் பெற்றோரின் ஜெபத்தைக் கேட்காமலில்லை; சத்யாவை அவர் விருப்பத்தின் பாதையிலேயே சந்திக்கச் சித்தம் கொண்டார். சினிமாப் பாடல்களுக்குப் பியானோ மற்றும் பியானோ, அக்கார்டியனைத் திறமையாக வாசித்த சத்யா, ஒருநாள் சனிக்கிழமை மாலை, திரைப்படப் பாடல் பதிவு செய்யும் வாஹினி ஸ்டூடியோவுக்கு இசைக் கருவிகள் வாசிக்கச் சென்றார். பதிவு நிகழ்ச்சி ஆரம்பத்திற்கு, சரியான நேரத்தில் சென்ற சத்யாவின் உள்ளம் அன்று சற்று சோர்ந்து போயிற்று. ஏனெனில், அவரோடு இசைக்கருவிகள் வாசிப்போர், மற்றும் பதிவு செய்பவர், பாடகர் குழு, முதலான அனைவரும், குடிவெறி போதையில் தெளிவின்றி இருந்தனர்.
ஒலிப்பதிவு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் காத்திருந்த சத்யாவுக்கு, காலம் தாமதமாவது வருத்தத்தைத் தந்தது. அன்று, அந்நிலையில், சத்யா தான் இருக்கும் இடத்தின் சூழ்நிலையையும், தன் நண்பர்களையும் பற்றித் தன் உள்ளத்தில் சிந்திக்க ஆரம்பித்தார். முதலாம் சங்கீதத்தின் முதல் வசனத்தின் அடிப்படையில், தவறான இடத்தில் தான் இருப்பதை உணர்ந்த சத்யா, ஓர் தீர்மானத்துடன் அவ்விடத்தை விட்டு எழுந்தார். அன்றிலிருந்து சினிமாப் பாடல்கள் ஒலிப்பதிவு செய்வதற்கு சத்யா இசைக்கருவி வாசிக்கவேயில்லை.
அன்றிரவு, சத்யாவின் உள்ளத்தில், ஆண்டவரின் அன்பின் அழைப்பு தெளிவாகக் கேட்டது. அந்த அழைப்புக்குக் கீழ்ப்படிந்து, ''இயேசுவின் பின்னே போகத் துணிந்த'' சத்யா, ஒருபோதும் பின் நோக்கவேயில்லை. மறுநாள் ஞாயிறு காலை தன் தந்தையிடம் சென்ற சத்யா, தன் தீர்மானத்தை எடுத்துரைத்தார். அவர் பெற்றோர் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தனர். தங்கள் விண்ணப்பத்தைக் கேட்ட ஆண்டவருக்கு நன்றி செலுத்தினர்.
அதுமுதல் தனது கிரேஸ் லாட்ஜ் ஆர்க்கெஸ்ட்ராவில் முழுக்கவனமும் செலுத்திய சத்யா, தொடர்ந்து இசைக்கச்சேரிகள் நடத்த ஆரம்பித்தார். ஆரம்ப நாட்களில் சினிமாப் பாடல்களும் கிறிஸ்தவப் பாடல்களும் அக்கச்சேரிகளில் கலந்தே ஒலிக்கும். இந்நிலையில், பாடல் வரம் பெற்ற ஹெலனை, சத்யா 12.04.1956 அன்று திருமணம் செய்தார். அதுமுதல் பல கல்லூரிகளிலும், சமூக நல நிகழ்ச்சிகளிலும் இக்குழுவின் பெயர் ஜொலிக்க ஆரம்பித்தது.
1973-ஆம் ஆண்டு, கேரளாவில் மணலாறு எஸ்டேட்டில் நடைபெறும் வருடாந்தர நற்செய்திக் கூட்டங்களில் பாடல்கள் பாட, சகோதரன் மதுரம் இக்குழுவை அழைத்து சென்றார். அக்கூட்டத் தொடரில், ஆண்டவர் சத்யாவைத் தன் இசைத் தொண்டு ஆண்டவரின் சேவைக்கு மட்டுமே, என்ற தீர்மானத்தை எடுக்க ஏவினார். அன்று முதல் இக்குழு, சத்யாவின் குடும்பக்குழுவாக, இயேசுவை மட்டுமே துதித்துப் பாடும் குழுவாக மாறியது. பல்லாண்டுகளாக பல திருச்சபைகளுக்குச் சென்று இசைவழி புத்தெழுச்சிக் கூட்டங்களை உற்சாகமாய் நடத்தி, திருச்சபையின் உயிர் மீட்சிக்கு ஆண்டவரின் வாய்க்காலாக இக்குழு செயல்பட்டது.
சென்னை தூய பவுல் ஆலயத் திருச்சபை அங்கத்தினர்களான சத்யாவின் குடும்பம் முழுவதுமே, இந்த இசைப் பணியில் சேர்ந்து ஈடுபடுகிறது. சத்யாவின் ஐந்து பிள்ளைகளும், அவர்களது துணைவர்களும், இன்றும் சேர்ந்தே இப்பணியில் ஈடுபடுவது கிறிஸ்தவக் குடும்பங்களின் ஐக்கியத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ஒவ்வொருவரும், தேவன் தங்களுக்குத் தந்த தாலந்துகளின் அடிப்படையில், பாடல் எழுதுவது, ராகம் அமைப்பது, இசை அமைப்பது, இசைக்கருவிகள் வாசிப்பது, மற்றும் இணைந்து பாடுவது, என வெவ்வேறு பங்கேற்று, ஒரே குழுவாக, ஒருமித்து ஆண்டவரை மகிமைப்படுத்துகிறார்கள்.
சத்யா குடும்பத்தினர், இதுவரை 15 ஒலி நாடாக்களையும், 6 நீளநேர ரெக்கார்டுகளையும், வெளியிட்டிருக்கின்றனர். இன்னும் பல பாடல்களை இசைக் கம்பெனிகளின் மூலமாகவும் வெளியிட்டிருக்கின்றனர். பல பாடலாசிரியர்களின் பாடல்களை, இக்குழு பாடி, பிரபலப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, ''இயேசு ராஜனின் திருவடிக்கு சரணம்'' என்ற இப்பாடலை, இக்குழு தன் இன்னிசை நிகழ்ச்சிகளின் ஆரம்பப்பாடலாக, செல்லுமிடமெங்கும் பாடுவது வழக்கம்.
ஒருமுறை வேலூருக்கருகில் உள்ள காட்பாடியில், மூன்று நாட்கள் இசை நிகழ்ச்சி நடத்த சத்யா குழுவினர் சென்றிருந்தனர். முதலாம் நாள் நிகழ்ச்சி இப்பாடலுடன் ஆரம்பமானது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், இப்பாடலை விட்டு வேறு பல பாடல்களைப் பாடினர். கூட்டத்தின் முடிவில், நிகழ்ச்சிக்கு வந்திருந்த இந்து சகோதரர் ஒருவர் சத்யாவை அணுகி, இப்பாடலை ஏன் ஆரம்பப் பாடலாக அன்று பாடவில்லை என்று கேட்டுத் தன் ஏமாற்றத்தைப் பகிர்ந்து கொண்டார். எனவே, கடைசி நாள் நிகழ்ச்சி, மீண்டும் இப்பாடலுடன் ஆரம்பமானது.
இப்பாடலை, சென்னையில் ''வாலிபர் விருந்து'' என்ற நிகழ்ச்சியின் மூலம் அநேக வாலிபர்களை ஆண்டவரிடம் வழிநடத்திய, காலம் சென்ற சகோதரன் DT. ராஜா இக்குழுவிற்குக் கொடுத்தார். இக்குழுவின் மூலமாக இப்பாடல் மிகவும் பிரபலமானது. இன்றும் ஆண்டவரைத் துதிக்கும் ஆரம்பப்பாடலாக, திருச்சபைகளிலும், நற்செய்திக் கூட்டங்களிலும், குடும்பக் கூடுகைகளிலும் உற்சாகமாகப் பாடப்பட்டு வருகிறது. இப்பாடலின் எளிய வசன நடையும், உற்சாகமளிக்கும் ராகம் மற்றும் பின்னிசையும், இதைப்பாடும் இக்குழுவின் ஆர்வமும், இப்பாடலை அனைவரும் விரும்பிப் பாடும் துதிப்பாடலாக மாற்றியுள்ளது.