கீர்த்தனைகள்
பாடல் : ஆபிரகாம் பண்டிதர்

பாடல் பிறந்த கதை

பல்லவி
மங்களம் செழிக்க கிருபையருளும் மங்கள நாதனே
சரணம்
1. மங்கள நித்திய மங்கள நீ
மங்கள முத்தியும் நாதனும் நீ,
எங்கள் புங்கவ நீ, எங்கள் துங்கவ நீ,
உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ
அத்தனுக்கத்தனாம் ஆபிராம் தேவ நீ,
                                            - மங்களம்
 
2. மங்கள மணமகன் .................க்கும்
மங்கள மணமகள் ..................க்கும்
மானுவேலர்க்கும், மகானுபவர்க்கும்,
பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே, உனை
துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும்.
                                            - மங்களம்

தேவாலயத்தில் மணமகனும் மணமகளும், "வாழ்விலும் தாழ்விலும் இணைந்து வாழுவோம்," என்று வாக்குக் கொடுத்து, இறையருள் வேண்டி நிற்கின்றனர். அப்பொழுது மங்களகரமாக ஒலிக்கும் பாடல் எது தெரியுமா?

"மங்களம் செழிக்கக் கிருபையருளும் மங்கள நாதனே" என்ற இப்பாடலே!

"இப்பாடல் பாடப்படாத கிறிஸ்தவத் திருமணமே தமிழ் உலகில் இல்லை," எனக் கூறலாம்! திருமண வைபவங்களில் அனைவரும் விரும்பிப் பாடும் இப்பாடலை இயற்றியவர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் ஆவார்.

ஆபிரகாம் பண்டிதர் தன் பிள்ளைகளின் திருமணங்களை நடத்தியபோது, இயேசு பெருமானுக்கு முதல் அழைப்புப் பத்திரிகையை வைத்து, திருமண அழைப்புக் கொடுப்பது வழக்கம். இறைவனை அவர் எவ்வளவு உரிமையோடு அழைக்கிறார் என்பதை அவர் இயற்றிய மற்றொரு திருமணப் பாடலில் காணலாம்.

"ஸ்ரீ மா தேவா -
திருவருள் புரிய இத்தருணமிங்கு நீயும் வா
வானம் பூமி வாழவந்த மானுவேலனே
தீனத் துயர் நின்று மீட்ட தேவ பாலனே
ஞான மணவாளனான நாதன் நீர் வர
கானம் பாடிக் காத்திருந்து கனிந்து கும்பிட்டேன்
 
-ஸ்ரீ மா
எண்ணும் நன்மை யாவும் தர என்னோடே இரும்
இன்னதென்று சொல்லு முன்பே தந்து கொண்டிரும்
முன்னம் சென்று தங்குமிடம் காத்துக் கொண்டிரும்
இந்த வேலைக் காருமில்லை என்று கூப்பிட்டேன்
-ஸ்ரீமா"

திருமண வைபவ ஆயத்தங்களின் பலவித வேலைகளில் அமிழ்ந்து தவிக்கும் வேளையில், அழைப்பை ஏற்று , கானா ஊர்க் கலியாணத்தில் வந்திருந்து , குறைவை நிறைவாக்கிய நம் இறைவன் இயேசு, இம்மானுவேலாக நம்மோடு இருக்கிறார், என்ற நல்நம்பிக்கை, எத்தனை ஆனந்தத்தையும் புதுபெலனையும் நமக்களிக்கின்றது!

ஆபிரகாம் பண்டிதரின் வேண்டுகோளுக்கிணங்கி , அவரது இல்லத்தில் நடந்த திருமணத்திற்கு இறைவன் ஒருமுறை ஓர் ஏழைச் சிறுவனாக வந்ததாகவும், யாரென அச்சிறுவனை அவர் வினவியபோது, மரியின் மைந்தனெனக் கூறி மறைந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தையே ஆபிரகாம் அவரெழுதிய ஒரு பாடலில் வெளிப்படுத்துகிறார்:

"வந்ததார் இங்கு எந்தன் வீடு தேடி
சிந்தை கோயிலாகக் கொண்ட நாதனோ."

ஆபிரகாம் எழுதிய மற்றுமொரு திருமணப் பாடல் லாலிப் பாடலாகும். தமிழ் நாட்டில் மணமகனையும் மணமகளையும் ஊஞ்சலில் இருத்தி, பெண்கள் அவ்வூஞ்சலை ஆட்டி, லாலி பாடுவது மரபாகும். இதையே, ஆபிரகாம் ஞான மணவாளனான இறைவனைத் தம் உள்ளமெனும் ஊஞ்சலில் இருத்தி, லாலி பாடி மகிழ்கிறார்!

வானம் புவி யாவும் செய்த வல்லவா தேவா
ஏழையுருவாக வந்த - ஏழையுருவாக வந்த
இன்பமே வா வா - லாலிலா லையா லாலி.

நாதவடிவான இறைவனை ஆராதிக்க மிகச்சிறந்த வழி, அவரைப் போற்றிப் பாடுவதே. எனவே, நம் வாழ்வின் அனைத்து வைபவங்களிலும், நாத நற்சொரூபனை நாமும் பாடித் துதிப்போமா?

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.