பாடல் பிறந்த கதை
இப்பாடல் 1811-ம் ஆண்டு, வேதநாயக சாஸ்திரியார் இலங்கைக்கு நற்செய்திப் பணி செய்யக் குடும்பமாய்ச் சென்ற போது அவரால் எழுதப்பட்டது.
சாஸ்திரியாரின் இலங்கைப் பயணம் முழுவதுமே, பல தடைகளை மேற்கொண்டு செய்ய நேரிட்டது. பாம்பனை அவர்கள் அடைந்த போது, காற்று சாதகமாக அமையாத காரணத்தால், சுமார் ஒரு மாத காலம் பாம்பனிலேயே தங்க வேண்டியதாயிற்று. அவர் கையிலிருந்த, பணமனைத்தும் செலவாகி, ஒரே ஒரு காசு மட்டும் மீதமிருந்தது. இந்நிலையில், சாஸ்திரியார், "தேவனால் எல்லாம் கூடும்,'' என்ற வேத வாக்கை நம்பியவராய், படகோட்டியைத் தயாராக இருக்கக் கூறி, தேவனைத் துதித்து, "வட காற்றருள் திரியேகா'' என்ற பாடலை எழுதிப் பாடினார். அவர் பாடி முடிக்கு முன்னரே, காற்று அவர்களுக்குச் சாதகமாய் மாறியது.
யாழ்ப்பாணத்தில் போதகர் கிறிஸ்தியான் தாவீது, அவர்களை வரவேற்று, அவர்கள் அங்கு தங்கிய நாட்களெல்லாம், செலவுக்குப் பணம் கொடுத்துப் பராமரித்தார். அங்கு தங்கியிருந்த போது, வேதநாயக சாஸ்திரியார் குழுவினர், சலவைக் காரனிடம் தங்கள் துணிகள் அனைத்தையும் தோய்க்கக் கொடுத்தனர். சலவைக்காரன் வீட்டில் திருடன் நுழைந்து, சாஸ்திரியாரின் குடும்பத்தினருடைய துணிமணிகள் அனைத்தையும் திருடிக் கொண்டு சென்றான். சலவைக்காரன் ஓடிவந்து, செய்தியைச் சாஸ்திரியாருக்கு அறிவித்தான்.
வேதநாயக சாஸ்திரியார் தீர விசாரித்து, தனது இக்கட்டான நிலையை அறிந்தார். அப்போது அவர் உள்ளம் திகைப்புற்றது. உடனே, தன்னைத் தேற்றிக் கொள்ள, ஆண்டவன் துணையை நாடி, இப்பாடலை, அவ்வீட்டின் திண்ணையில் அமர்ந்தவாறு பாடலானார். அப்போது, அத்தெருவின் வழியே வந்த ராமசாமி என்ற இந்து புகையிலை வியாபாரி, சாஸ்திரியாரின் பாடலைக் கேட்டு ரசித்து மயங்கினார். அப்பாட்டின் வார்த்தைகளின் மூலம், சாஸ்திரியாரின் நிலைமையைப் புரிந்து கொண்டார். ஆண்டவர் அனுப்பிய நல்ல சமாரியனாக, அவர், இரண்டு புடவைகளையும், நானூறு ரூபாய் பணத்தையும் கொடுத்து உதவினார். இன்னும் தேவைகள் இருப்பின், அதையும் தாம் தருவதாக வாக்களித்தார். ஆண்டவரின் அதிசய வழிநடத்துதலால் அகமகிழ்ந்த வேதநாயக சாஸ்திரியார், இலங்கையின் நகரங்கள், கிராமங்கள் தோறும் சென்று, நற்செய்தித் தொண்டாற்றினார்.