பாடல் பிறந்த கதை
நற்செய்திப் பணியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் இப்பாடலை எழுதியவர், அருள்திரு வே. சந்தியாகு ஐயராவார். இவர் பாடல் இயற்றுவதில் தாலந்து படைத்த இந்துப் பெற்றோருக்குப் பிறந்தார். தன் வாலிப வயதிலே, தன் இரு சகோதரரோடும், தந்தையோடும், இயேசு கிறிஸ்துவைச் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார். இந்துப் பின்னணியிலிருந்து வந்ததால், ஆண்டவருக்காக முழுவதும் வைராக்கியத்துடன் ஊழியம் செய்யத் தன்னை அர்ப்பணித்தார். எனவே, இப்பாடலைப் போன்ற மீட்புப்பணிப் பாடல்களை அவர் இயற்றியதில் ஆச்சரியமொன்றுமில்லை.
சந்தியாகு கணிதப் பேராசிரியராக இருந்து, பின்னர் மதுரையில் திருச்சபைப் போதகராக, முழு நேரப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். திருச்சபையின் ஒருமைப்பாட்டிற்காக மிகவும் பாடுபட்டார். சந்தியாகு இயற்றிய பாடல்கள் அனைத்தும், எளிமையானவைகளாக, திருமறைச் சத்தியங்களை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதப்பட்டுள்ளன.
இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் வாழ்ந்த சந்தியாகு, இந்திய தேச சமுதாயத்தின் இழிநிலை கண்டு வேதனையுற்றார். இச்சமுதாயத்தைச் சீர்திருத்த ஒரே வழி, இயேசு கிறிஸ்துவின் இறையாட்சி மட்டுமே, என்று நிச்சயமாக நம்பினார். எனவே, இப்பாடலில், சமுதாயத்திற்குக் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஆற்ற வேண்டிய திருப்பணியை எடுத்துக் கூறுகிறார்.
பசியுற்ற மக்களுக்கும், வியாதியஸ்தருக்கும், சமுதாயத்தின் சாதி வேற்றுமைகளால் நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டவர்களுக்கும், சத்திய வழியைவிட்டு மார்க்கம் தப்பி நடப்பவர்களுக்கும், தாங்க முடியாத துன்பத்திலும், படுகுழியான நிலைகளிலும் இருப்பவர்களுக்கும், தேவையான ஒன்று, இயேசுவின் அன்பின் நற்செய்தியே; எனவே, "இறைமகன் இயேசுவை, இந்திய தேசத்தின் இளவரசராக்குவோம்," என்று பாடுகிறார்.
சமுதாயச் சீர்திருத்தமும் தேசப்பற்றும் மிகுந்த இப்பாடலை எழுதிய சந்தியாகு, தன் சொந்த வாழ்விலும் பல பதவிகளில் இருந்து, சமுதாயத்திற்குத் தொண்டாற்றினார். ஊராட்சி மன்றத் தலைவராகவும், தென்னிந்திய ஐக்கியத் திருச்சபையின் நடுவராகவும் பணியாற்றினார்.
சமுதாயத்தில் நடைமுறைக்கிறிஸ்தவனாக சாட்சியுள்ள வாழ்க்கை வாழவேண்டுமென, எடுத்துக் கூறும் இப்பாடலின் சிறப்பை உணர்ந்த, Dr. D.T. நைல்ஸ் இப்பாடலை, ஆங்கிலத்தில் "கிறிஸ்துவுக்கு அடிமைகள்'' என்ற தலைப்பில் வெளியிட்டு, ஆசியக் கண்டத்தின் பல நாடுகளிலும், உலகின் பல பகுதிகளிலும் பாடுமளவிற்குச் சிறப்புப் பெறச் செய்திருக்கிறார்.
மேனாட்டுப் பாமாலைப் பாடல்களையும் விரும்பிப் பாடிய சந்தியாகு, அப்பாடல்களை அப்படியே தமிழ் மொழியாக்கம் செய்து பாடுவதோடு நிறுத்திவிடாமல், அக்கருத்துக்களனைத்தும் சிறிதும் குறையாது, தமிழில் புதுமைப் பாடல்களாக எழுதி, தமிழ்ப் பண் அமைத்து வெளியிட்டார். இவற்றில் சிறப்பாக, ""என் அருள் நாதா இயேசுவே'' என்ற மொழியாக்கத்தின் மூல ஆங்கிலப்பாடலின் கருத்துச் செறிவுடன், "விந்தைக் கிறிஸ்தேசு ராஜா'' என்ற பாடலை, தமிழ்க் கிறிஸ்தவ சமுதாயத்திற்குத் தந்தார்.
இவ்வாறு ஆங்கிலப்பாடலின் கருத்து, சிறிதும் குறையாத வண்ணம், தமிழில் புதுப்பாடல்கள் இயற்றி, அவற்றிற்கு அருமையான தமிழ்ப்பண் அமைக்கும் இவரது சிறப்பை, அவர் எழுதிய மற்றொரு பிரபல பாடலாகிய, "தேவனே நான் உமதண்டையில்'' என்ற கீர்த்தனையில் காணலாம். பாமாலையில் அனைவரும் விரும்பிப் பாடும் "உம்மண்டை கர்த்தரே'' என்ற பாடலின் தமிழிசைப் பிரதிபலிப்பாக இக்கீர்த்தனை விளங்குகிறதல்லவா?
சந்தியாகு 1929-ம் ஆண்டு, தமது 60வது வயதில் மரித்தார். விந்தைக் கிறிஸ்தேசுவின் சிலுவையின் மேன்மையைப் பாடிய சந்தியாகுவின் கல்லறையில், 10 அடி உயரச் சிலுவையை, நினைவுச் சின்னமாக, வத்தலக்குண்டில் எழுப்பியிருக்கின்றனர். அவரது அடக்க ஆராதனையின் சிறப்பென்னவெனில், அவர் இயற்றிய பாடல்களே அந்த ஆராதனையில் பாடப்பட்டன.