கீர்த்தனைகள்
பாடல் : ஆபிரகாம் பண்டிதர்
               
பல்லவி
கண்டேனென் கண்குளிர - கர்த்தனை யின்று
 
அனுபல்லவி
கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக்
            - கண்டேனென்
 
சரணங்கள்
1. பெத்தலேம் - சத்திர முன்னணையில்
உற்றோருக் - குயிர் தரும் உண்மையாம் என் ரட்சகனைக்
                - கண்டேனென்
2. தேவாதி - தேவனை, தேவ சேனை
ஓயாது - தோத்திரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக்
                - கண்டேனென்
3. பாவேந்தர் - தேடிவரும் பக்தர் பரனை,
ஆவேந்தர் - அடிதொழும் அன்பனை, என் இன்பனை நான்
                - கண்டேனென்
4. முத்தொழிற் - கர்த்தாவாம் முன்னவனை,
இத்தரை - மீட்க எனை நத்தி வந்த மன்னவனைக்
                - கண்டேனென்
5. மண்ணோர் - இருள் போக்கும் மாமணியை,
விண்ணோரும் - வேண்டிநிற்கும் விண்மணியைக் கண்மணியைக்
                - கண்டேனென்
6. அண்டினோர்க் - கன்புருவாம் ஆரணனை,
கண்டோர்கள் - கலிதீர்க்கும் காரணனை, பூரணனைக்
                - கண்டேனென்
7. அன்னையாம் - கன்னியும் ஐயனுடன்
முன்னறி - யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக்
               - கண்டேனென்

 

சென்னை பெரியார் திடலில் கிறிஸ்மஸ் இன்னிசை முழங்கிக் கொண்டிருந்தது. சிமியோனின் ஆனந்தக் களிப்பை இசைமழையாகப் பொழிந்து கொண்டிருந்தனர் தஞ்சை இம்மானுவேல் இசைக் குழுவினர்.

"கண்டேன் என் கண் குளிர

கர்த்தனையின்று கண்டேன் என் கண் குளிர"

கூடியிருந்த மக்கள் அவ்விசையின் இனிமையை ரசித்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென மின்சாரம் தடைப்பட, பெரியார் திடல் இருளில் மூழ்கியது!

இசைக் குழுவின் தலைவர் திரு. T.A.G. துரைப்பாண்டியனும், குழுவின் மற்ற அங்கத்தினர்களும் கணப்பொழுது திகைத்தனர். ஆயினும், இசைக்குறியீடுகளைப் பாராமலே, ஒலி பெருக்கியின்றித் தொடர்ந்து பாடினர். நேரம்  செல்லச்செல்ல, பாடகர்களில் ஆண்களும், பெண்களும் மாறி மாறி, "கண்டேன் கர்த்தனை இன்று," என்று உற்சாகத்துடன் உரத்த சத்தமாய்ப் பாட, பாடலின் உச்சக்கட்டத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து, "கண்டேன்!" என்று முழங்க, "பளிச்" என விளக்குகள் திடலில் ஒளிர்ந்தன. அவையோரின் முகங்களும் மலர்ந்தன. இருள் சூழ்ந்த வேளையில், "கண்டேன் கர்த்தனை இன்று," என்ற பாடல், ஜெய தொனியாக என்னைப் பரவசப்படுத்தியது. என்றார் ஒருவர்!

கிறிஸ்மஸ் காலங்களில் அனைவரும் மிகவும் விரும்பி பாடும் இப்பாடலை இயற்றியவர் இசை மாமேதை ஆபிரகாம் பண்டிதர் ஆவார்.

ஆபிரகாம் பண்டிதர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சாம்பவர் வடகரை என்னும் ஊரில், முத்துசாமி-அன்னம்மாள் தம்பதியருக்குப் புதல்வராக

2-8-1859 அன்று பிறந்தார். எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும், தமது அயராத உழைப்பாலும், விடா முயற்சியாலும், சிறப்பாகக் கற்றுத் தேர்ந்து ஆசிரியரானார். அச்சுக்கலை, தோட்டக்கலை, சித்த வைத்தியம், இசை ஆராய்ச்சி என்று, பல துறைகளிலும் சிறந்து விளங்கினார்.

இளமையிலேயே பக்தி நெறியில் சிறந்து விளங்கிய ஆபிரகாம், தித்திக்கும் செந்தமிழில் இறைவனைப் போற்றிப் பாடல்கள் இயற்ற ஆரம்பித்தார். வாழ்விலும், தாழ்விலும், இறைவனோடு ஒன்றி வாழக் கற்றுக் கொண்ட அவர், வறுமையில் வாடும்போது,

"ஏழை எனக்கிரங்க இன்னும் மனதில்லையா?"

என்று பாடுவார். வளம் பெருகியபோது,

"இல்லான் எந்தனுக்கு என்றும் நிறைவாய்

எல்லாம் தந்த உன்னை என்றும் துதிப்பேன்."

எனப் போற்றிப் பாடுவார். பாவ உணர்வால் தவிக்கும் போதோ,

"மண்ணுலக மீதில் மா பாவி நான்

மா தயாளு நீ - மன்னித்தாளுவாய்"

எனப் பாடுவார்.

ஆபிரகாம் பண்டிதர் தஞ்சையை மையமாகக் கொண்டு வாழ்ந்ததால், அவ்வூர் அவரது பெயருடன் இணைந்து புகழ் பெற்றது. அவர் ஏழு  இசைமாநாடுகளைத் தஞ்சையில் தம் சொந்தச் செலவில் நடத்தினார்.  இசைத்தமிழை ஆராய்ந்து, தாம் கண்டுபிடித்த உண்மைகளை 1917-ம் ஆண்டு கருணாமிர்த சாகரம் - முதல் புத்தகத்தில் வெளியிட்டார். 22 அலகுகள் ஓர் இயக்கில் பூர்த்தியடையாதென்பதும், ஓர் இயக்கில் 24 அலகுகள் உள்ளன என்பதும் அவர் கண்டறிந்த மாபெரும் உண்மையாகும். கருணாமிர்த சாகரம் - இரண்டாம் புத்தகத்தில் ராகங்களைப் பற்றிய முழு விபரங்களையும் கொடுத்துள்ளார்.

இவ்விரு ஆராய்ச்சி நூல்களின் அடிப்படையில் பண்டிதரின் பேரனான திரு. D.A. தனபாண்டியன், தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் சார்பாக, "நுண்ணலகுகளும் இராகங்களும்'' என்ற தலைப்பில், மேலும் ஆராய்ச்சி செய்து, ஆபிரகாம் பண்டிதரின் கண்டுபிடிப்புகளை உபகரணங்களுடன் நிரூபித்தார். இம்முயற்சியைப் பாராட்டி, தமிழக அரசு 1990-ம் ஆண்டு அவருக்குக் ""கலைமாமணி'' பட்டம் அளித்து  கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இசையில் சிறந்து விளங்கிய ஆபிரகாம், இயேசு பெருமானின் நாமத்தைத் துதிப்பதையே தன் வாழ்வின் பேரின்பமாகக் கருதினார். அவரது,

"திரு நாமம் துதிக்க வரமருள்

கருணாமிர்த சாகரத் தயாளோ"

என்ற பாடலும்,

"வரந்தரவே வாவா தேவா

நிரந்தரமாக நின்னை நான் புகழ

மறந்திடா துனை வாழ்த்தியே மகிழ"

என்ற பாடலும், அவரது இதயத்தின் வாஞ்சையை வெளிப்படுத்துகின்றன.

தெலுங்கில் பிற தெய்வங்களைப் போற்றி எழுதப்பட்ட கீதங்கள், சுரஜதிகள், வர்ணங்கள், கீர்த்தனைகளைக் கண்ட ஆபிரகாம் பண்டிதர், இயேசு பெருமானைப் போற்றும் வகையில், இவற்றிற்குத் தமிழில் கிறிஸ்தவ சாகித்தியங்களை இயற்றி அரும்பணி புரிந்தார். எடுத்துக்காட்டாக, "பதும நாபா பரம புருஷா" என்ற மலஹரி கீதம், "உன்னத வாசா உச்சித நேசா," என மாறிற்று. பிலஹரி சுரஜதி, "வாரும் தேவதேவா இங்கு, வாரும் உனதடிமை மன மகிழ," என இறைவனை வருந்தி அழைக்கும் ஜெபப் பாடலாக மாறியது. இவ்வாறு, கிறிஸ்தவ நெறி பிறழாமல் கர்நாடக சங்கீதம் பயில, ஆபிரகாம் பண்டிதர் வழிவகுத்தார்.

இறைவனின் பேரன்பில் மூழ்கித் திளைத்து எழுதப்பட்ட இத்தமிழிசைப் பாடல்களை நாமும் பயின்று, பாடி, பரமனருள் பெறுவோமா?

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.