கீர்த்தனைகள்
பாடல் : தே. வேதநாயகம்

பாடல் பிறந்த கதை

பல்லவி
ஆரும் துணை  இல்லையே  எனக்
காதியான்  திருப்பாலா - உன் தன்
ஜந்து  காயத்தின்   அடைக்கலம்  கொடுத்
தாளுவாய்,  யேசுநாதா.
 
அனுபல்லவி
சீர்  உலாவு  பூங்காவில்  ஓர்  கனி
தின்ற  பாதகம்  மாற்றவே,
சிலுவை  மீதினிலே  உயிர்விடும்
தேவனே,  என்  சுவாமி.
           - ஆரும் துணை
 
சரணங்கள்
1. பத்தியேதும்  இலாது மாய  சுகத்தை  நாடிய   பித்தனாய்ப்
பாழிலே  என்றன்  நாள் எலாங் கெடுத் தேழையாகினேன், என் செய்வேன்?
சத்ருவான  பிசாசினால்  வரும் தந்திரம்  கொடிதல்லவோ?
தஞ்சம் அற்றவன் ஆகினேன், உனதஞ்சல்  கூறும் அனாதியே.
              - ஆரும் துணை
2. கள்ளனாயினும்  வெள்ளனாயினும்  பிள்ளை நான் உனக்கல்லவோ?
கர்த்தனே, வலப்பக்கமேவிய கள்ளனுக் கருள் செய்தையே;
தள்ளி என்னை விடாமல் உன்னடி தந்து காத்தருள், அப்பனே,
தயவாய் ஒரு குருசில் ஏறிய சருவ ஜீவ தயா பரா.
             - ஆரும் துணை
3. நன்றி அற்றவனாகிலும், எனைக் கொன்றுபோடுவதாகுமோ?
நட்டமே  படும்  கெட்ட  மைந்தனின்  கிட்ட  ஓடினதில்லையோ?
கொன்றவர்க்  கருள்  செய்யும்  என்று  பிதாவை  நோக்கிய கொற்றவா,
குற்றம்  ஏது  செய்தாலும்  நீ,  எனைப்  பெற்றவா, பொறுத்தாள்வையே.
             - ஆரும் துணை
4. தந்தை தாயரும், மைந்தர்  மாதரும்  சகலரும்  உதவார்களே;
சாகும்  நாளதில்  நீ  அலால்  எனைத்  தாங்குவார்களும் உண்டுமோ?
சொந்தம் நீ எனக்கன்றி, வேறொரு சொந்தமானவர் இல்லையே,
சுற்றமும்,  பொருள்  அத்தமும்  முழபத்தமே  என  தத்தனே
             - ஆரும் துணை

இப்பாடல் கவிராயர் வேதநாயக சாஸ்திரியாரால் 1830-ம்   ஆண்டு   எழுதப்பட்டது. அது தஞ்சையில் மிஷனரி ஊழிய ஆரம்ப காலம். அந்நாட்களில் இந்திய மக்கள் ஜாதி வைராக்கியம் மிகுந்தவர்களாய் இருந்தனர். இது கிறிஸ்தவ தத்துவத்திற்குப் புறம்பானது. எனவே, 1827-ம் ஆண்டு, தஞ்சையில் மிஷனரிப் போதகராகப் பணியாற்றிய ஐ.பீ. ஆவரோ ஐயர், ஆண்டவரை ஏற்றுக் கொண்ட இந்தியத் திருச்சபை மக்கள்,  ஜாதி வேறுபாடின்றி, சமத்துவ சகோதர அன்புடன் பழக வேண்டுமென வற்புறுத்தினார்.

இந்நிலையில், உயர் ஜாதிக் கிறிஸ்தவர்கள், தங்களுக்கு மட்டும் தனி இருக்கைகள், மற்றும் தனி ராப்போஜனம் தரும்படி, ஐயரை வேண்டினர். அவரோ, "ஆலய ஆராதனையில் அனைவருக்கும் ஒரே பாய்; ஒரே ராப்போஜனம்," எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார். வெகுண்டெழுந்து,  திருச்சபையிலிருந்து வெளிநடப்புச் செய்த  அந்த  உயர் ஜாதிக்  கிறிஸ்தவர்களுக்கு, ஆலயக் கல்லறையில் இடமில்லை என்றும் தண்டித்தார். அப்போது   நடுநிலை  வகித்த   வேதநாயக சாஸ்திரியாரை , அம்மக்களுக்கு  நல்லறிவுரை   கூறுமாறு, ஆபரோ ஐயர் கேட்டுக்கொண்டார்.

இந்திய மக்கள் மத்தியில் நிலவிய ஜாதித்துவேஷக் கொடுமையை நன்கு அறிந்திருந்த சாஸ்திரியார், இயேசுவின் அன்பை முழுவதும் புரிந்து, தங்களை மாற்றிக்கொள்ள,  அம்மக்களுக்கு இன்னும் கொஞ்சக் காலம் அவகாசம் அளிக்குமாறு ஐயரை வேண்டினார். இதைத் தவறாகப் புரிந்து கொண்ட மிஷனரிகள், சாஸ்திரியார் மீதும் நடவடிக்கை எடுத்தனர்.

திருச்சபையிலிருந்து விலக்கப்பட்டவர்கள், வேதநாயக சாஸ்திரியாரின் வீட்டில் கூடி, ஆராதனை நடத்தினார்கள். இதனால், 1829-ம் ஆண்டு, சாஸ்திரியாரின் திருச்சபை சுவிசேஷ வேலை பறிபோனது. அது மட்டுமன்றி, அவரது மகள் ஞானதீபமும், மிஷனரிப் பள்ளியின் ஆசிரியை வேலையிலிருந்து நீக்கப்பட்டாள்.எனவே, தன் குடும்பத்தின் வருமானமனைத்தையும்  இழந்த நிலையில், சாஸ்திரியார் மிகுந்த இன்னலுக்குள்ளானார். வேதனை நிறைந்த இச்சூழ்நிலையில், ஆதரவு தேடி, இறைவனை நோக்கி, இப்பாடலை இயற்றிப் பாடினார்.

வேதநாயக சாஸ்திரியாரின் நெருக்கடி நிலைமை அவரது பாலிய சினேகிதனும், சக மாணவனுமாயிருந்த, சரபோஜி மன்னனுக்குத் தெரிய வந்தது. நண்பனை வரவழைத்து வினவினார். தன் அரண்மனையில் மாதமிரு நாள் கவிபாடக்கூறி, 35 ரூபாய் மாதச்சம்பளம் கொடுத்தார். மன்னனுக்கு நன்றி கூறி, தன் வேண்டுதலுக்கு மன்னன் மூலம் பதில் கொடுத்த இறைவனுக்கு, மற்றும் பல சரணங்களையும், சாஸ்திரியார் இப்பாடலுடன் இணைத்தார். மேலும் ஒரு தோத்திரப் பாடலையும், தனது ஜெப மாலையில் எழுதினார்.

வேதநாயக சாஸ்திரியாரின் ஊழியத்தைப் பின் தொடர்ந்த ஞானசிகாமணி சாஸ்திரியார், பல குறுநில மன்னர்களின் பேரவைகளுக்குச் சென்று, கதாகாலட்சேபம் செய்து, இறைவனின் திருப்பணியைச் செய்தார். திருவாங்கூர் மகாராஜாவின் அரண்மனையிலும், இவ்வாறு நற்செய்திப் பணியாற்றினார். அதை முடித்து, திருவனந்தபுரத்திலிருந்து திரும்பிய அவர், பணகுடி என்ற ஊருக்கருகில், காட்டுப் பகுதியில், மாட்டு வண்டியில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது, அவர்களுக்கு எதிரில், புலி ஒன்று பாதையில் நின்றது. செய்வதறியாது அனைவரும் திகைத்தனர். சாஸ்திரியார் தன்னுடன் இருந்த அனைவருடன், பாதையில் முழங்காலில் மண்டியிட்டு, இப்பாடலை உருக்கமுடன் பாடினார். அவர் பாடிய நேரம் முழுவதும், அப்புலி அசையாது நின்றது. அப்போது அங்கு வந்த இரு ஆங்கிலேயர்கள், புலியைச் சுட்டு வீழ்த்தி, அவர்களைக் காப்பாற்றினார்கள்.

கதாகாலட்சேபங்களுடன் இந்நாட்களில் திருச்சபைகளில் இந்த இறைப்பணியைத் தொடர்ந்து செய்யும், பாகவதர் வேதநாயகம் இச்சம்பவத்தை எடுத்துரைத்தார்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.