பாடல் பிறந்த கதை
வேதாகமக் கவியரசன் தாவீதின் பாடலாகிய, சங்கீதம் 23-ஐ, "தேவ பிதா எந்தன் மேய்ப்பனல்லோ!" என்ற புகழ்பெற்ற கீர்த்தனையாக மாற்றிய, கவிஞர் நெய்யூர் யோசேப்பு, சங்கீதங்களைத் தழுவி, இன்னும் பல கீர்த்தனைகளை இயற்றியிருக்கிறார். "துங்கனில் ஒதுங்குவோன்," என்ற கீர்த்தனையை, 91-ஆம் சங்கீதத்தின் அடிப்படையில் இயற்றிய அவர், இப்பாடலை, முதலாம் சங்கீதத்தை மையமாகக் கொண்டு எழுதியிருக்கிறார்.
சுவிசேஷகரான யோசேப்பு, அருள்திரு. ஆல்ப்ஸ் ஐயரின் தமிழ் முனிஷியாகிய, தீமோத்தேயு ஆசிரியருக்கும், லேயாள் ஆசிரியைக்கும் மகனாக, 1841-ம் ஆண்டு ஜுலை மாதம் 22-ம் தேதி, நெய்யூரில் பிறந்தார். பத்தாம் வயதில் நெய்யூர் ஆங்கிலப் பாடசாலையில் சேர்க்கப்பட்ட அவர், ஞானாபரணம் ஐயரின் உதவியால், ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றார். பின்னர், தனது 15-வது வயதில், நாகர்கோவில் ஆங்கிலப் பாடசாலையில் சேர்ந்தார். 1861-இல் தனது கல்வியை முடித்த யோசேப்பு, நாகர்கோவில் இறையியல் பள்ளியில் ஒரு வருடம் பணியாற்றினார். பின்னர்,
1863-இல் நெய்யூரில் ஆசிரியரானார். 1864-ஆம் ஆண்டு, யோசேப்பு நெய்யூரைச் சார்ந்த எஸ்தரை மணம் புரிந்தார். 1868-ஆம் ஆண்டு, நெய்யூர் சேகர பள்ளிக்கூட ஆய்வாளராகப் பொறுப்பேற்றார். பின்னர், 1875-ஆம் ஆண்டு, நெய்யூர் சபையின் உதவி குருவாகி, அதைத் தொடர்ந்து, 1878-ஆம் ஆண்டு, கல்லுக்கூட்டம், மண்டைக்காடு, குன்னங்காடு, குளச்சல் திருச்சபைகளின் மேற்பார்வையாளரானார்.
திருச்சபையின் வளர்ச்சிப் பணியில், தீவிரமாய் ஈடுபட்ட சுவிசேஷகர் யோசேப்பு, கல்லுக்கூட்டம் சபையின் ஆலயத்தைக் கட்டி, 1887-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ஆம் நாள் பிரதிஷ்டை பண்ணினார். அதே ஆண்டு ஜுலை மாதம் 22-ஆம் தேதி காலை, தனது 46-ஆவது வயதிலேயே மரணமடைந்தார். அவர் நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில், "என் நோவு பாரம் யாவும் இன்றே முடிய, பிரகாசமான உன்னத மகிமைக்குள் அழைத்துச் செல்ல, என் மீட்பர் அருகில் நிற்கிறார்!" என்று நம்பிக்கையின் உறுதியுடன் கூறினார்.
"கதிரவன் எழுகின்ற", "வேறு ஜென்மம் வேணும்," "நல்லனே வேண்டல் கேள் என் நாயனே," என்ற கீர்த்தனைகளையும் நெய்யூர் யோசேப்பு இயற்றினார். "திரு அவதார சரிதை", இரட்சணிய சரிதை", என்னும் நூல்களையும், பல சன்மார்க்கப் புத்தகங்களையும், பாடல்களையும், புலம்பல்களையும் அவர் இயற்றியுள்ளார்.