கேள்வி பதில்கள்

கேள்வி:கரிஸ்மேடிக் கொள்கைகளுக்கு அல்லது பெந்தேகோஸ்தே சபை உபதேசத்துக்கு எதிராகப் பேசுவதை பரிசுத்த ஆவிக்கு விரோதமான தூஷணம் என்றும், மன்னிக்கக்கூடாத பாவம் என்றும் பெந்தேகோஸ்தே சபையினர் சொல்லுகிறார்களே, சரியா? (லூக்கா 12:10).

பதில்: இல்லை. கரிஸ்மேடிக் கொள்கைகளுக்கு அதாவது பெந்தேகோஸ்தே சபைகளின் உபதேசங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்பது பரிசுத்த ஆவியானவரைத் தூஷிப்பதாகாது. பெந்தேகோஸ்தே சபையினரின் வேதாகமத்திற்கு விரோதமான அவர்களின் அந்நியபாஷை, தவறான நம்பிக்கை மற்றும் அவர்களின் தவறான செயல்களைப்பற்றி சபைகளுக்கு எச்சரிப்பைக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் வசனம் அறிந்த ஒவ்வொரு விசுவாசியின் கடமை ஆகும். இது எல்லா சபையினருக்கும் பொருந்தும். எந்த ஒரு மெய்யான கிறிஸ்தவனும் பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாக தூஷணமாய்ப் பேசமுடியாது. கடவுளால் தெரிந்துக்கொள்ளப்படாத மக்கள்தான் அப்படிப்பட்ட பாவத்தைச் செய்வார்கள்.

பரிசேயர்களின் பாவத்தைத்தான் இயேசுகிறிஸ்து லூக்கா 12:10ல் "பரிசுத்த ஆவிக்கு விரோதமான தூஷணம்" என்று குறிப்பிடுகிறார். இயேசுகிறிஸ்து பிதாவால் அனுப்பப்பட்ட தேவனுடைய குமாரன்என்பதை தீர்க்கதரிசி கூறிய வசனத்தை அவர் சுட்டிக்காட்டியும், தம்முடைய கிரியைகளினால் அதை அவர்களுக்கு இயேசு நிரூபித்த பின்னரும், பரிசேயர்களும், யூதர்களும் தங்களது அக்கிரமத்தினாலும், அகம்பாவத்தினாலும், வெறுப்பினாலும், இயேசுவையே பிசாசுகளின் தலைவன் எனக் கூறினார்கள். இது கர்த்தரின் சத்தியத்திற்கும் அதை எழுதிய ஆவியானவருக்கும் விரோதமான பாவச்செயலாகும்.இதைத்தான் லூக்கா 12:10ல் வாசிக்கிறோம். பெந்தேகோஸ்தே சபையின் கரிஸ்மேடிக் செயல்களைப்பற்றி பேசும்போது வேதசத்தியத்திற்கு விரோதமாகப் பேசாமல், அந்த சபைகளில் உள்ள கள்ள உபதேசங்களுக்கும், தவறுகளுக்கும் தவறான அந்நியபாஷைகளுக்கும் எதிராகமட்டுமே நாம் பேசுகிறோம். நம் விசுவாசத்திற்கும், செயல்களுக்கும், தொழுகைக்கும், ஆராதனை முறைகளுக்கும்வேதாகமம்மட்டுமே நம்மை வழி நடத்த வேண்டும். வேதாகமத்தை மறந்து தங்களது லாபத்திற்கும், பெருமைக்கும், புகழுக்கும் வேண்டி இவர்கள் அற்புதசுகம், குறிப்பாக தீர்க்கதரிசனம், அந்நியபாஷை என்று கூறிக்கொண்டு வேத வசனங்களைத் தவறாகப் பயன்படுத்துவதை குறித்து நாம் அவர்களை எச்சரித்தால் பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமான தேவதூஷணம் என்று அவர்கள் நம்மை பார்த்து அவர்கள் குற்றம் சொல்லுகிறார்கள்.

இஸ்ரவேலர் அன்று செய்த பாவத்தையே மீண்டும் நாமும் செய்யக்கூடாது. ஜீவனுள்ள மெய்த் தேவனைவிட்டு எகிப்தின் அந்நியக்கடவுள்கள் பின்னால் அவர்கள் சென்றனர். 16ம் நூற்றாண்டில் ஏற்பட்ட பிராட்டஸ்டண்டு சீர்த்திருத்தம் கடவுளுடைய செயலாகும். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலர் விடுதலையாக்கப்பட்டதுபோல திருச்சபையானது ரோமின் அந்தகாரத்திலிருந்து ரோமன் கத்தோலிக்க தவறான உபதேசங்களிலிருந்து விடுதலையாக்கப்பட்டது. கடவுளுடைய மக்கள் எகிப்திற்கும், ரோமிற்கும் திரும்பி செல்வது இஸ்ரவேலர் மீண்டும் மீண்டும் பாவத்தில் விழுந்த நிலைக்குச் செல்வது போலவே இருக்கிறது.

"பரிசுத்த ஆவிக்கு அடையாளம் அந்நியபாஷை என்று வேதம் கூறாதபோது இவர்கள் விளங்காத அர்த்தமில்லாத உளறலை அந்நியபாஷை என்று கூறி மேலும் பரிசுத்த ஆவியானர்தான் அதை பேச வைக்கிறார் என்று இவர்கள் துணிகரமாக பொய்களை கூறுவதுதான் பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமான தூஷணமாகும்". இதைத்தான் மன்னிக்கப்படாத பாவம் என்று வேதம் கூறுகிறது. காரணம் பரிசுத்த ஆவியானவர் பெயரில் பெந்தேகோஸ்தே சபையினர் பொய் பேசுகிறார்கள், மக்களையும் ஏமாற்றுகிறார்கள். தாங்கள் பேசுவது பொய்யான பாஷை என்று மனமாற இவர்கள் அறிந்தே அந்த தவறை மீண்டும் மீண்டும் செய்யும் அவர்கள் அத்தனை பேரும் தேவ தண்டனையை அனுபவிக்க வேண்டிய காலம் நிச்சயம் வரும். எச்சரிக்கை!

பரிசுத்த வேதாகமம் அனுமதிக்காத எந்த காரியத்தையும் யார் செய்தாலும் அது பாவமாகும். "நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள் சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்". (யோவான் 8:31,32).​


கேள்வி:1 கொரி 13:12 வசனத்தில் "இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம். அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம். இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துக்கொள்ளுவேன்" என்ற வசனம் எதிர்காலத்தில் வர இருக்கிற பரலோகத்தைக் குறிக்கிறதா?

பதில்: கரிஸ்மேடிக் இயக்கத்தினர் வ.10ல் உள்ள "நிறைவானது" என்பது வ.12ன் அடிப்படையிலும் "இப்போது" நாம் பரலோகத்தைக் காண்பதில்லை என்றும் பரலோகத்தைக் காணும்போதுதான் "அப்போதுதான்" இந்த வரங்கள் இல்லாமல்போகும் என பெந்தேகோஸ்தே சபையினர் விளக்கம் கொடுக்கின்றனர்.

முதலாவது பவுல் கூறும்போது "நிறைவானது" என்ற பதத்திற்கு விளக்கம் கொடுக்க 11ம் வசனத்தில் குழந்தைக்கு ஒப்பிட்டு கூறிவிட்டு தற்காலிகமான வெளிப்பாடுகளாகிய "தீர்க்கதரிசனம், அந்நியபாஷை, அறிவு" போன்ற வரங்கள் (அடையாளங்கள் அல்ல) (வ 8-10). வேதாகமத்தின் வரவால் ஒழிந்துபோகும் என்கிறார். "பேசினேன்" "சிந்தித்தேன்" "யோசித்தேன்" என்ற இணையான சொற்களைப் பயன்படுத்துகிறார். இவைகளெல்லாம் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் முழுமையான வெளிச்சத்தில் நாம் வாசிக்கும்போது நிதானிக்கப்படும். குழந்தை பெரியவனானப்பிறகு அவனது குழந்தைத்தனமான பேச்சு, சிந்தனை, யோசனைகளையெல்லாம் ஒழித்துபோகும். அதேபோல தரிசனம், சொப்பனம், சத்தம் இவைகளெல்லாம் முழுமையான வெளிப்பாட்டிற்குப்பிறகு ஓய்ந்துப்போகும் (எபி 1:1,2). ஆதியில் புதிய ஏற்பாட்டு திருச்சபை துவக்கப்பள்ளியைப் போன்றிருந்தது. இப்போது கல்லூரி மாணவர்கள் நிலையிலிருந்துகொண்டு இரண்டாம் வகுப்பு சிறுபிள்ளைகள் கணக்கு எண்ணிக்கைக்கு விரல்களை பார்த்து எண்ணிக் கொண்டிருப்பதைப்போல் எண்ணமாட்டோம்.

இரண்டாவதாக, பவுல் வ.12ல் "கண்ணாடி" என்ற உதாரணத்தை உபயோகிக்கிறார். புதிய ஏற்பாட்டில் "கண்ணாடி" என்ற வார்த்தையை யாக்கோபு நிரூபத்தில் 1:23ல் திருவசனத்திற்கு ஒப்பிட்டு எழுதுகிறார்.வேத வசனம் நம்மை யார் என்று நமக்குக்காட்டுகிறது. "முகமுகமாய்ப் பார்க்கிறோம்" என்ற விளக்கம் 1கொரி 13:12ல் பரிசுத்த வேதாகமாகிய நிறைவானது வரும்பொழுது நம்மைநாமே வேத வசனத்தின்மூலம் அறிந்துக்கொள்வோம்.

ஆகவே முகமுகமாய் என்ற வார்த்தை கடவுள் மறைமுகமான வழிகளில் அல்ல, நேரடியாகவேநம்மோடு பேசுவார் என்பதுதான் அதன் பொருளாகும் (எண் 12:6-8). நேரிடையாக எப்படி பேசுவார்? கடவுள் தமது பரிசுத்த வேதாகமத்தின் மூலமாகத்தான் நேரடியாகப் பேசுவார். அதுதான் பூரணமானதும், நிறைவானதுமாகும்.​


கேள்வி:அற்புத அடையான வரங்கள் அப்போஸ்தலருக்கு மட்டும் உரியதென்றால் மாற்கு 16:17ல் இயேசுகிறிஸ்து விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்கள் என்று ஏன் கூறினார்?

பதில்: மாற்கு 16:17ல் கிறிஸ்து எல்லா விசுவாசிகளுக்கும் இந்த வரங்கள் கொடுக்கப்படும் என்று சொல்லவில்லை. இங்கு "விசுவாசிகள்" என்று குறிப்பிடப்படுபவர்கள் யார்? வ.14ல் விசுவாசிகள் என்று குறிப்பிடப்படுபவர்கள் 11 அப்போஸ்தலர்களைத்தான் இயேசு விசுவாசிகள் என்று குறிப்பிடுகிறார் என வாசிக்கிறோம். இவ்வசனத்தில் அப்போஸ்தலர்களின் அவிசுவாசித்தைக் கண்டித்து பேசிய பின்னர் விசுவாசிக்கிறவர்களுக்கு நடக்கும் அடையாளங்கள் என அவர்களுக்குச் சவாலூட்டும் வகையில் இயேசுகிறிஸ்து 15ம் வசனத்தில் சுவிசேஷத்தை அறிவிக்க அவர்களுக்கு கட்டளையிடுகிறார். சுவிசேஷப் பணியில் ஈடுபடும்பொழுது அவர்களுக்கு அற்புதங்களைச் செய்யும் வல்லமை அருளப்படும். (வ.17,18). இவ்விரண்டு வசனங்களைப்புரிந்துக்கொள்ள மாற்கு வ.20 நமக்கு உதவி செய்கிறது. "அப்போஸ்தலர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள். அப்போஸ்தலர்கள் மூலமாக நடந்த அடையாளங்களினால் வசனத்தை அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்". அப்போஸ்தலர்கள் செய்த அடையாளங்களினாலே அவர்களது ஊழியத்தின் உண்மை அங்கு உறுதியாக்கப்பட்டது. (அப் 2:43, 4:33, 5:12, 14:3, 15:12, 19:11, 2கொரி 12:12) இங்கு குறிப்பிட்ட இந்த வரங்கள் அப்போஸ்தலர்களுக்குமட்டும் அருளப்பட்டவைகள், இன்றைக்கு அப்போஸ்தலர்கள் யாருமில்லை. என்றாலும் வேதவசனத்தை விசுவாசிக்கும் ஒவ்வொருவனுக்கும் அந்த வசனம் பிரசங்கத்தின்மூலம் பேசப்பட்டதாலோ அல்லது வசனத்தை வாசிக்கும்போது அதை விசுவாசித்து கீழ்படியும்போது அற்புதம் நடக்கும். சங்107:20, யாத் 5:16.


கேள்வி: அப்போஸ்தலர் 2:17ல் "கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன். அப்பொழுது உங்கள் குமாரரும், உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள், உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள். உங்கள் மூப்பர் சொப்பானங்களைக் காண்பார்கள்" என்று சொன்னபடி பெந்தேகோஸ்தே சபைகளின் மக்கள் மத்தியில் இவ்வசனம் இன்று நிறைவேறுகிறது என கூறுகிறார்களே, அது சரியா? (யோவே 2:28-32).

பதில்: கரிஸ்மேடிக் மக்கள் யோவேல் 2:23ல் சொல்லப்பட்ட "பின்மாரியை" தாங்கள் இப்போது அனுபவிப்பதாகவும் அப் 2ம் அதிகாரத்தில் பெந்தேகோஸ்து நாளன்று நடந்தவைகளை "முன்மாரி" என்றும் கூறுகிறார்கள். அவர்கள் கூறுகிறபடி பார்த்தால் முன்மாரி என்றால் முதல் நூற்றாண்டு பெந்தேகோஸ்து என்றும் பின்மாரி என்றால் இந்த நூற்றாண்டு பெந்தேகோஸ்து என்றும் அர்த்தமாகுமே? அப்படியானால் இரண்டு பெந்தேகோஸ்து உண்டா? அப்படி யோவேல் சொல்லவில்லையே! அப்படி கூறினால் அது வேதாகமத்தைத் தவறாக வியாக்கியானம்செய்து வசனத்தை திரித்து கூறுவதுபோல ஆகும். யோவேல் 2:23ன் பின்னணி என்ன? என்பதை கவனிக்கவேண்டும், இஸ்ரவேலர் கடவுளுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தனர். கடவுள் அவர்களது விளைநிலங்களைப் பாழாக்கினார். புழுக்களையும், வெட்டுக்கிளிகளையும் அனுப்பி விளைச்சல்களைப் பாழாக்கினார் (யோவேல் 1:4). வயல்வெளிகள் பாழாயின (1:10), மக்கள் உபவாசித்து ஜெபிக்க அழைக்கப்பட்டனர் (1:13,14). அவர்கள் மனந்திரும்பாவிட்டால் "கர்த்தருடைய நாள்" நியாயத்தீர்ப்பின் நாள் வரும் (2:1). தேசம் மிகவும் பாழாக்கப்பட்டு சீர்கேட்டையும் (2:2-11). தேவன் இஸ்ரவேலர் உண்மையாய் மனந்திரும்பவேண்டும் என்றார் (2:12). தேவனாகிய கர்த்தர் இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர் அவர் தீங்குக்கு மனஸ்தாபப் -படுகிறவருமாயிருக்கிறார் (2:13). மக்களை மனந்திரும்புதலுக்கு வழிநடத்த ஆசாரியர்களை அழைக்கிறார். கர்த்தர் தம் மக்களை மன்னித்தும் மீண்டும் ஏற்றுக்கொள்வதற்கு எப்போதும் ஆயத்தமும், தயவும் உள்ளவர் (2:17). தம் ஜனங்கள் தமக்கு முன்பாக தங்களைத் தாழ்த்தி மனந்திரும்பினால் கர்த்தர் தமது தேசத்துக்காக வைராக்கியம்கொண்டு கடாட்சிப்பார் (2:18). யோவேல் 2:19-27வசனங்கள் கடவுள் தமது மக்கள் மனந்திரும்பினால் அவர்களுக்கு அருளக்கூடிய சரீரப்பிரகாரமான நன்மைகளைப்பற்றி இங்கு எழுதுகிறார். "முன்மாரி" "பின்மாரி" என்பது இஸ்ரவேலரின் காலத்தின் சீதோஷ்ண நிலையைக் குறிக்கும். இஸ்ரவேலரின் மழைக்காலங்கள் 2 காலக்கட்டத்தில் இருக்கும். "முன்மாரி" என்பது அக்டோபர், நவம்பரிலும், "பின்மாரி" என்பது மார்ச், ஏப்ரலிலும் இருக்கும். நிறைவான அறுவடைக்கு இவ்விரண்டு காலத்தின் மழையும் அவசியம்.

அப்படிப்பட்ட சரீரப்பிரகாரமானஉடன்படிக்கையின் ஆசீர்வாதங்களைத்தான் யோவேல் 2:23ல் யோவேல் தீர்க்கதரிசி கூறுகிறார். பரிசுத்த ஆவியானவரைப்பற்றி இந்த இடத்தில் சொல்லப்படவேயில்லை. யோவேல் 2:28-32 வசனத்தில்தான்பரிசுத்த ஆவியானவரைப்பற்றி படிக்கிறோம். கர்த்தர் வரும் காலத்தில் பரிசுத்த ஆவியானவரைச் சிறப்பான வகையில் எல்லா மக்களுக்கும் அருளப்போவதாக வாக்களிக்கிறார். இது எப்போது நிகழ்ந்தது?பெந்தேகோஸ்து நாளன்று இது நடந்ததாக அப் 2:16:18ல் பேதுரு அப்போஸ்தலன் கூறுகிறார்.பெந்தேகோஸ்து நாளன்று நடந்ததைக்குறித்து அன்று சிலர் இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள் என்று கூறியதால் அவர்களுக்குப் பதிலளித்துப் பேதுரு பேசுகையில் யோவேல் 2:28-32 வசனத்தை மேற்கோள் காட்டி இவர்கள் மதுவினால் அல்ல, கடவுளுடைய ஆவியினால் நிறைந்திருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கிறார்.

இது ஏன் ஒரு ஆச்சர்யமான நிகழ்ச்சியாக உள்ளது என்றால், பழைய ஏற்பாட்டு இஸ்ரவேல் மக்கள் பரிசுத்த ஆவியானவர் தங்கள்மீது இவ்விதமாக வந்திறங்கினதை வாழ்நாளில் அனுபவித்ததேயில்லை. பழைய ஏற்பாட்டின் காலத்தில் ஒரு சிலருக்கு மட்டும் குறிப்பிட்ட அலுவல்களைச் செய்வதற்காகப் பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டார். தீர்க்கதரிசிகள் சங் 105:15, 1இராஜா 19:16, ஆசாரியர்கள் யாத் 40:13, லேவி 4:3,5,16, 6:22, சகரியா 4:14. இராஜாக்கள் 1 சாமு 10:1,15:1,16:13 ஆகிய வசனங்களில் வாசிக்கலாம். ஆனால் ஒருநாள் வரும் அந்நாளில் தீர்க்கதரிசிகள், ஆசாரியர்கள், இராஜாக்கள் மட்டுமல்ல. சாதாரண மனிதரும்கூட - குமாரரும், குமாரத்திகளும், வாலிபர்களும், மூப்பரும், (சொப்பனம், தரிசனம், தீர்க்கதரிசனம்) பெறுவார்கள். இது அன்றைய பெந்தேகோஸ்து நாளன்று நடந்தது முடிந்துவிட்டது. (அப் 2:1-4). சாதாரண யூதராயிருந்த பேதுரு, யாக்கோபு, யோவான் கல்வியறிவு இல்லாத மீனவர்கள் ஆகிய யாவரும் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி கடவுளுடைய சிறப்பான வரங்களைப் பெற்றனர். இந்த முழு நிகழ்ச்சியும், யூதர்களுக்கு சிறப்பான வகையில் அருளப்பட்ட கடவுளின் செயல் ஆகும். யோவேல் சொன்ன தீர்க்கதரிசனம் யூதருக்காகமட்டும் எழுதப்பட்டதும், அவர்களுக்கே பொருத்தமானதுமாகும். இது அந்நியமொழி பேசும் புறஜாதியாருக்கோ அல்லது இன்றைய திருச்சபைக்கோ எழுதப்பட்டது இல்லை. அப் 2:16-18, இன்றைக்கு கரிஸ்மேடிக் மக்கள் வேதபகுதியைஅதன் (Concept) சூழலமைப்பிலிருந்து பிரித்தெடுத்துத் தவறான வியாக்கியானம் கொடுத்து மக்களைத் தவறானபாதையில் நடத்திச்செல்கின்றனர். யோவேல் மூலமாக கூறப்பட்ட தீர்க்கதரிசனம் கி.பி.30ல் நிறைவேறிவிட்டது. இன்றைய கரிஸ்மேடிக் மக்கள் மத்தியில் அன்று கூறப்பட்ட அந்த தீர்க்கதரிசனமோ அல்லது அந்த அனுபவமோ நிறைவேறவில்லை.​


கேள்வி:1 கொரி 13:8-10 வசனங்களின்படி அந்நியபாஷை வரம் இன்று ஓய்ந்துவிட்டது என்று கூறலாமா?

பதில்: ஆம், பொதுவாக அடையாள வரங்கள் ஓய்ந்துவிட்டதற்கான தெளிவான விளக்கம்தான் 1கொரி 13:8-10 வசனங்களில எழுதப்பட்டதாகும். மூலபாஷையில் "ஒழிந்துபோம்" என்ற தமிழ் பதத்திற்கு தோற்றுப் போகுதல், நிறைவாகுதல், மறைந்துபோகுதல், காணாமல்போகுதல் என்ற அர்த்தமுடைய பதம்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. "அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நியபாஷைகளானாலும் ஓய்ந்துப்போம், அறிவானாலும் ஒழிந்துபோம். நம்முடைய அறிவு குறைவுள்ளது. நாம் தீர்க்க தரிசனஞ்சொல்லுதலும் குறைவுள்ளது. நிறைவானது ஒன்று வரும்போதுகுறைவானது ஒழிந்துபோம்."

நிறைவானது என்றால் என்ன? நிறைவாக்கப்பட்ட வேதாகமம் எழுதி கிடைக்கப்பட்டபின் (66 புத்தகங்கள் அடங்கிய பரிசுத்த வேதாகமம் எழுதி முடிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட காலம்). தீர்க்கதரிசனம், அறிவு ஒழிந்துபோகும். அதாவது வேதாகமம் முழுமையாக்கப்பட்ட பின்னர் அன்றைய புதிய ஏற்பாட்டு சபைக்கு கொடுக்கப்பட்ட அந்நியபாஷை வரம் ஒய்ந்துபோகும். அதாவது அயல்மொழி பேசிய புறஜாதி மக்களும், யூதமக்களைப்போலவே இரட்சிக்கப்படுவார்கள் என்பது நிரூபணம் ஆனவுடனே, அந்நியபாஷை வரம் நிறுத்தப்படும். அதற்கான அவசியமுமில்லை. 4ம் நூற்றாண்டு பரிசுத்தவான் அகஸ்டின் தனது சரித்திர எழுத்துக்களில் அப்போஸ்தலர் காலத்தில்மட்டும் அந்நியபாஷை வரம் இருந்ததாக எழுதுகிறார்.

16ம் நூற்றாண்டில் நடந்த மாபெரும் பிராட்டஸ்டண்ட் எழுப்புதல் மற்றும் சீர்திருத்தவாதிகளான மார்டின்லூத்தர், ஜான்கால்வின், ஜான்நாக்ஸ் ஆகியோர் யாருமே அந்நியபாஷையில் பேசவில்லை. அவர்கள் யாரும் அதற்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை. வில்லியம்கேரி, சீகன்பால்க் போன்ற எந்த மிஷனரிமார்களும், இரத்த சாட்சியகளாய் மரித்த மிஷனரிகள், விசுவாசிகள், வேத புத்தகத்தை மொழி பெயர்த்து நமக்கு தந்த மிஷனரிகள் யாரும் அந்நியபாஷை பேசவில்லை.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.