பதில்: வேதத்தில் இயேசுகிறிஸ்துவே ஒரு அப்போஸ்தலன்தான் என்பதை எபி 3:1ல் அப்போஸ்தலனும் - பிரதான ஆசாரியருமாகிய இயேசுகிறிஸ்துவை கவனித்துப்பாருங்கள் என்று ஆவியானவர் குறிப்பிடுகிறாரே? அது பொருத்தமானாது. பிதாவால் இயேசுகிறிஸ்து அபிஷேகம் செய்து அனுப்பப்பட்டவர் ஆகும். குருடர் பார்வையடையவும், சிறைப்பட்டவர்கள் விடுதலையாக்கவும், தரித்திருக்கு சுவிசேஷம் (சந்தோஷசெய்தி) அறிவிக்கவும், இருதயம் நறுங்குண்டவர்களை குணமாக்கவும் என்னை பிதா அபிஷேகித்து அனுப்பினார் என்று இயேசுகிறிஸ்துவே லூக் 4:18,19, ஏசா 61:1,சங் 68:18 தெளிவாக குறிப்பிடுகிறார். அப்படியே இயேசுகிறிஸ்து தமது 12 சீஷர்களை மட்டும், தன்னிடம் தனியாக அழைத்து அதே வார்த்தைகளைக்கூறி பிதா தன்னை எப்படிப்பட்ட காரியங்கள் செய்ய அனுப்பினாரோ அப்படியே உங்களையும் அனுப்புகிறேன் என்றார் (லூக் 9:1,2).
அப்படியே புதிய ஏற்பாட்டு சபைக்கு சபை மக்கள் பக்திவிருத்தியடைய 5 விதமான ஊழியம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் ஒன்று அப்போஸ்தல ஊழியம் ஆகும். ஆனால் அவர்கள் யாரும் அப்போஸ்தலர்என்று சபை சரித்திரத்தில் அழைக்கப்பட்டதாக காணவில்லை. அந்த அப்போஸ்தல ஊழியமும், அப்போஸ்தலர்கள் உயிரோடு இருந்த காலத்தில் ஆதிசபையில் அவர்களால் நியமிக்கப்பட்ட ஊழியங்கள் ஆகும்.
ஆனால் இன்று சபை நடத்தும் பாஸ்டர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் அப்போஸ்தலர் என்று அவர்களாகவே போட்டுக்கொள்கிறார்கள். அது பொருத்தமில்லாததாகும். பாஸ்டர் என்பவர் சபை மக்களை நடத்தும் மேய்ப்பன் ஆகும். அப்போஸ்தலன் என்பவர் இயேசுகிறிஸ்து குறிப்பிட்ட அற்புத செயல்களை தங்கள் ஊழியத்தில் நடப்பித்து ஒரு இடத்தில் நிற்காமல் போய்கொண்டேயிருக்க வேண்டும். சபை அவர்களை ஜெபித்து அனுப்பி சபையின் மேற்பார்வையில் அவர்கள் செயல்பட வேண்டும். தேவனால் அபிஷேகிக்கப்படாதவர் தங்களை அபிஷேகிக்கப்பட்டவன் என்று கூறி கொள்வதும், சாட்சியில்லாத பொய்யும், மாயமாலமும் நிறைந்த ஊழியர்களெல்லாம் தங்களை அப்போஸ்தலர் என்று அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள். இதை வேதம் அன்றே எச்சரித்துள்ளது.
வெளி 2:2ல் அப்போஸ்தலர் அல்லாதோர் தங்களை அப்போஸ்தலர் என்று கூறிக்கொள்கிறார்கள். என்றும் எபேசு சபையில் அப்படிப்பட்டவர்கள் நிறைய பேர் இருந்திருக்கிறார்கள் என்பதும் அந்த வசனத்தில் விளங்குகிறது. அதேதான் இப்போதும் நடந்துக்கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட கள்ள அப்போஸ்தலர்களை பவுல் 2 கொரி 11:13ல் சாடுகிறார். இவர்கள் கபடமுள்ள ஊழியர்கள் என்றும் கள்ள அப்போஸ்தலர்கள் என்றும் கிறிஸ்துவால் தெரிந்தெடுக்கப்பட்ட உண்மையான அபோஸ்தலர்களின் வேஷத்தை தரித்துக்கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்றும் காட்டமாக சாடுகிறாரே?
ஆனால் அப்போஸ்தலர்கள் தங்களால் உருவாக்கப்பட்ட ஊழியர் சிலரை அப்போஸ்தலர்கள் என்று கூறியிருப்பதும் வேதத்தில் காண்கிறோம். அவர்கள் பவுலால் அல்லது மற்ற அப்போஸ்தலர்களால் அப்போஸ்தலர் என்று அழைக்கப்பட்டவர்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவால் நியமிக்கப்பட்டவர்களே உண்மையான அப்போஸ்தலர்கள் ஆவர்.
யோவான் அப்போஸ்தலனுக்கு பிறகு "அப்போஸ்தலர்" என்ற தகுதி பெற்றவர் யாரும் இல்லை. அப்போஸ்தலர்களால் தெரிந்தெடுத்து அப்போஸ்தலன் என்று அழைக்கப்பட்டவர்கள் அநேகர் இருந்தார்கள். அப்போஸ்தலர் என்ற பெயர் ஒரு பட்டம் Apostleship என்பதாக அப் 1:22ல் காண்கிறோம். சீஷர்களால் தெரிந்தெடுக்கப்பட்ட மத்தியாஸ் என்ற பெயர் கொண்டவனை மரித்த யூதாஸ்காரியத்துக்கு பதில் அந்த இடத்தை பூர்த்தி செய்ய சீட்டுப்போட்டு தெரிந்தெடுக்கிறார்கள். இவர் மற்ற 11 அப்போஸ்தலர்களால் தெரிந்தெடுக்கப்பட்ட அப்போஸ்தலன். அதுபோல் பர்னபாவும், சீல்வானும், தீமோத்தேயுவும் 1 தெச 1:1 அப்போஸ்தலர்களால் தெரிந்தெடுக்கப்பட்டு அப்போஸ்தலர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவர்களாக பார்த்து தங்கள் பெயருக்குமுன் அப்போஸ்தலன் என்று போட்டுக் கொள்ளவில்லை.
ஆனால் பவுல் அப்போஸ்தலன் மாத்திரம் மனிதர்கள் யாராலும் குறிப்பாக 11 சீஷர்களால் தெரிந்தெடுக்கப்பட்ட அப்போஸ்தலன் அல்ல. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினால் 12 அப்போஸ்தலார்களைப்போல் நேரிடையாக தெரிந்தெடுக்கப்பட்ட அப்போஸ்தலன் ஆவார். (அப் 9:15) அதனால்தான் 12 சீஷர்கள் இயேசுவோடு இருந்தபோது எதையெல்லாம் கண்டார்களோ, இயேசுவைப்பற்றி, இயேசுவின் மகிமையைப்பற்றி எதையெல்லாம் 12 சீஷர்கள் அறிந்தார்களோ அதையெல்லாம் அதாவது இயேசுகிறிஸ்து தாம் பூமியில் வாழ்ந்த காலத்தில் தன் பிறப்பிலிருந்து மரித்து உயிர்தெழுந்து பரமேறும் வரை சம்பவித்ததையும் அதோடு திருவிருந்து நிகழ்ச்சியையும் நேரிடையாக பார்க்க வைத்தார். இவைகள் எல்லாவற்றையும் நேரிடையாக பவுலை கர்த்தர் ஆவியில் நிறைத்து காட்டி 12 சீஷர்களோடு பவுலை சமமாக்கினார். (கலா 1:16,17,18). சீஷர்கள் தெரிந்தெடுத்த மத்தியாசும் அப்போஸ்தலன் தான்.
ஆனால் இயேசுகிறிஸ்துவால் பவுல் அப்போஸ்தலனாக நேரிடையாக தேர்ந்தெடுக்கப்படாததால் வெளி 21:14ல் கூறப்பட்ட பரிசுத்த நகரத்தின் வாசல்களில் எழுதப்படும் 12 அப்போஸ்தலர்களின் பெயர் பட்டியலில் இயேசுவால் நேரிடையாக தெரிந்தெடுக்கப்படாத மற்றவர்கள் பெயர் வர நியாயமில்லை. ஆகவே இப்போதுள்ள எந்த நவீன ஊழியரும் தங்களை அப்போஸ்தலர்கள் என்ற பெயரை தங்கள் பெயர்களுக்குமுன் வைத்துக்கொள்வது பொருந்தாது.