புதிய கட்டிடம் கட்டி எழும்ப பேருதவியாக இருப்பது சாரம் என்பதை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் நன்றி உணர்வுக்காக கட்டிடம் கட்டிய பிறகும் அதை கழற்றி எறிய மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பது பெரிய முட்டாள் தனமாக இருக்கும்.
அது போலவே ரோமன் கத்தோலிக்கம், தென்னிந்திய திருச்சபை, லுத்திரன், பாப்திஸ்து, மெதடிஸ்டு, பிரதரன்,பிரிஸ்படேரியன், இசிஐ, பெந்தேகோஸ்தே, ஏஜி, இதர சுயாதீன சபை பிரிவுகள் சுவிசேஷம் அறிவிக்க கட்டப்பட்ட சாரங்களே! அந்த பணி முடிந்ததும் அதை கழற்றி தூர எறிய வேண்டும். அதை பிடித்து கொண்டு தொங்கி கொண்டிருக்கக் கூடாது. சாரத்தை குறித்து பெருமை கொள்ள கூடாது. எந்த சபையை சேர்ந்தவராக இருந்தாலும், அந்த சபைக்கே உரிய வேதத்திற்கு புறம்பான உபதேசங்களிலிருந்து விலகியிருத்தல், உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேற உதவிசெய்யும்!
ஏனென்றால் ஆண்டவர் நம்மை சபைபிரிவுகளாக பார்க்கவில்லை, சபை பிரிவுகளை கடவுள் கணக்கிலேயே எடுத்து கொள்வதில்லை. ஆனால் கிறிஸ்தவர்களாகிய நாம் தான் சபை பிரிவுகளின் பெருமை பேசி, பேசி சீரழிந்து போனோம், சுவிசேஷம் என்னும் கட்டிடம் எப்படி கட்டப்பட்டு வருகிறது என்பதில் தான் கடவுள் அக்கறையாக இருக்கிறாரே தவிர, நம்முடைய சாரம் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதை பற்றி அல்ல. தெளிவடைவோம்! சாரத்தை கழற்றி எறிவோம்!