இந்த Christmas Carol பழக்கம் எப்போது ஏற்பட்டது என்று தெரியவில்லை. இதற்கு காரணம் தேவதூதர்கள் மேய்ப்பர்களுக்கு இயேசு பிறந்த செய்தியை சொல்லிவிட்டு தேவனை துதித்தார்கள் என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. இதை மையமாக கொண்டே இந்த கிறிஸ்மஸ் பாடல் குழு வீடு சந்திப்பு என்று ஒரு பாரம்பரியம் ஆரம்பித்திருக்கலாம். எல்லாமே நல்ல நோக்கத்தோடுதான் ஆரம்பமாகிறது. ஆனால் போகப்போக அதில் பல தவறான காரியங்கள் உள்ளே நுழைந்துவிடுகிறது.
கிறிஸ்மஸ் பாடல் குழுவினர் வீடு சந்திப்பது பாவம் என்று சொல்லி அதை தடுப்பது சரியல்ல. நாம் எதை செய்தாலும் இரண்டு கேள்வி கேட்க வேண்டும்.
1. வேதத்தில் இதை பற்றி என்ன சொல்லியிருக்கிறது?
2. இதை செய்வதின் மூலம் ஆண்டவர் மகிமையடைவாரா?
வேதத்தில் இதற்கு அதாரம் தேட முடியாது. வழக்கமாக தேவ தூதர்கள் தேவனை துதித்தார்கள் என்பதை தான் ஆதாரமாக காண்பிப்பார்கள். ஆண்டவராகிய இயேசுவோ அல்லது அவருடைய சீடர்களோ அல்லது அப்போஸ்தலனாகிய பவுல் போன்றவர்களோ இப்படி செய்யும்படி கட்டளை கொடுக்கவில்லை.
மகாத்மா காந்தி, தந்தை பெரியார் போன்றவர்களின் பிறந்தாளை நாம் கொண்டாடும் போது அவர்கள் குழந்தையாக பிறந்த படத்தை வைத்து நாம் கொண்டாடுவது இல்லை. ஆண்டவர் இயேசு பிறந்த நாளை மட்டுமே குழந்தையாக பிறந்த படத்தை அல்லது சினிமாவை காண்பிக்கிறோம். ஏனென்றால் அவர்கள் எல்லாம் மனிதர்கள் மனிதனாக பிறந்தில் விசேஷம் இல்லை. ஆனால் எல்லையற்ற கடவுள் ஒரு குறிப்பிட்ட சரீத்திற்குள் தன்னை அடக்கி கொள்வதுதான் சிறப்பு. ஆகவே மனிதனாக பிறக்க முடியாத கடவுள் மனிதனாக பிறந்தார். இதுதான் சிறப்பு. எல்லையற்ற கடவுள் மிக பலவீனமான, ஒரு குழந்தையாக தன்னை வெளிப்படுத்தியதுதான் சிறப்பு. மனிதனை மீட்கும்படியே இப்படி செய்தார். இதை மற்றவர்களுக்கு அறிவிப்பது சரியே.
ஆனால் தற்கால கிறிஸ்மஸ் பாடல் குழுவினரின் நோக்கம் பெரும்பாலும் நற்செய்தி அறிவிப்பதாக இல்லாமல் பணக்காரர்களின் வீடுகளுக்கு சென்று பணம் வசூலிக்கும் ஒரு நிகழ்ச்சியாக மாறிவிட்டது. இன்றும் கிறிஸ்மஸ் பாடகர் குழுவினர் ஆண்டவரை அறியாத மற்ற மக்களுக்கு அவரின் பிறப்பின் நோக்கத்தையும் அதன் மூலம் நமக்கு கிடைத்த விடுதலையையும் அறிவித்தால் அதில் நன்மையை உண்டாக்கும்.
பாடலின் கருத்துக்கள், முக்கியமானவைகள். வெறும் இசைக்கு மாத்திரமே முக்கியத்துவம் அளிப்பதினால் பயன் இல்லை. கருத்துக்கு முதலிடம் அளிக்க வேண்டும். கருத்து மற்றவர்களை சென்றடைய வேண்டும். கருத்தை இசையோ அல்லது வேடமணிந்து போகிற கிறிஸ்மஸ் தாத்தவோ தடுத்துவிட கூடாது. ஒரே இரவில் நிறைய வீடுகளுக்கு போக வேண்டும் என்று அவசர அவசரமாக பெயரளவுக்கு பாடிவிட்டு காணிக்கையை வாங்கிக் கொண்டு ஓடுவது சரியில்லை. இதற்கு வராமலே இருக்கலாம். நமது நோக்கம் கர்த்தரை மகிமைப்படுத்துவதாக இருந்தால் கருத்து சரியாக இருக்கும். பணத்தை மையமாக இருந்தால் கருத்து இருக்காது.
ஒருமுறை நான் என்னுடைய இரண்டு சக்கர வாகனத்தில் சென்னை சைதாப்பேட்டையிலிருந்து வேளச்சேரி வந்து கொண்டிருந்தேன். என்னை துரத்திக் கொண்டே ஒரு மோட்டர் சைக்கிள் வந்து வேளச்சேரியில் வைத்து என்னை மடக்கி ஓரம் நிறுத்தி வைத்து விட்டு தலையில் மாட்டியிருந்த தலைகவசத்தை எடுத்தார், அந்த வண்டி காரர் நான் அறிந்த ஒரு வாலிபன். உடனடியாக ஒரு கார்டை எடுத்து என்னிடம் தந்து இன்று இரவு உங்கள் வீட்டிற்கு Carol round வருகிறோம் என்றார். நான் விருப்பம் இல்லாமல் அந்த கார்டை பார்த்து கொண்டிருப்பதை அறிந்த வாலிபன் தப்பாக நினைத்து கொள்ளாதீர்கள் எங்கள் வாலிப ஜெப குழுவிற்க்கு ஒரு பீரோ (அலமாரி) வாங்க வேண்டும் அதற்காகத்தான் இந்த கேரல் என்று உண்மையை உடைத்துவிட்டார்.
இப்படி ஒவ்வொருவரும் தனிப்பட்ட ஒரு நோக்கத்ததோடு Carol நடத்துவதினால் அதை சரியாக நடத்துவதில்லை.